பெரும்பாலான உள்ளூர் சபைகளிலும் மற்றும் பல பிரிவுகளிலும் ஒற்றுமை இல்லாமை என்பது ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. பல்வேறு கிறித்தவப் பிரிவுகளுக்கும் இடையே ஒற்றுமை என்பது ஒரு சவாலான விஷயமாகவும் மற்றும் புதிராகவும் தான் இருக்கின்றது. "நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்" என்பதாக பவுல் பிலிப்பியர்களுக்கு அறிவுறுத்துகிறார் (பிலிப்பியர் 2:1-4).
1) கிறிஸ்துவுக்குள் ஆறுதல்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவான மேசியாவுக்கு 'இஸ்ரவேலின் ஆறுதலானவர்' என்ற பட்டம் உண்டு (லூக்கா 2:25). துன்பங்கள் பெருகும்போது, கர்த்தருடைய ஆறுதலும் அதிகரிக்கிறது (2 தெசலோனிக்கேயர் 3:16).
2) அன்பினால் தேறுதல்:
அன்பு ஏற்றுக் கொள்ளுதலையும், கண்ணியத்தையும் மற்றும் ஆறுதலையும் வழங்குகிறது. கர்த்தராகிய இயேசு எல்லா தேறுதலுக்கும் தேவனானவர் (2 கொரிந்தியர் 1:3). சபை என்பது அன்பின் ஒரு சமூகமாகும், அதில் கிருபை, தாராள மனப்பான்மை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றைத் தெளிவாகக் காண முடியும்.
3) ஆவியின் ஐக்கியம்:
பரிசுத்த ஆவியானவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் ஐக்கியப்படுவதற்கு நம்மை நிரப்புகிறார், வழிநடத்துகிறார், அதிகாரமளிக்கிறார் மற்றும் அறிவூட்டுகிறார். இது நட்பு மட்டுமல்ல; அது மீண்டும் பிறக்கும் அனுபவம், அதாவது ஆவியால் பிறந்ததின் மூலம் தேவனுடைய குடும்பத்தில் அங்கத்தினர் ஆகின்றோம். இது ஆவிக்குரிய உண்மைத்தன்மையின் யதார்த்தத்தில் வேரூன்றியுள்ளது.
4) உருக்கமான பட்சம்:
விசுவாசிகளிடம் தேவ அன்பு, ஒருவருக்கொருவர் பாசத்துடன் இணைவதில் வெளிப்படுகிறது. பாசம் என்பது ஒருவரையொருவர் நேசிப்பதாகும். சபை என்பது உலகில் ஒன்றாக இருக்கக்கூடிய மக்கள், மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் ஊழியம் அல்லது உதவி செய்யும் ஒரு சமூகமாகும்.
5) இரக்கம்:
"இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்" (மத்தேயு 5:7). மற்றவர்களின் தேவைகளைச் சந்திப்பதற்கு ஒருவருக்கு இரக்கக் குணம் தேவைப்படுகிறது. சபை என்பது உள்ளேயும் வெளியேயும் மற்றவர்களுக்கு உதவ விரைந்து செல்லும் இரக்கமுள்ள மக்களால் நிரம்பியிருத்தல் அவசியமே.
6) சுயநல லட்சியம் இல்லை:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னலமற்ற அன்பையும் தியாகத்தையும் வெளிப்படுத்தினார். விசுவாசிகள் மற்றவர்களின் நலனைத் தேட வேண்டும், தங்களை மாத்திரமே கவனித்துக் கொள்ளக்கூடாது. ஆனால் போட்டி போட்டுக் கொண்டு மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கும், பிறரின் முன்னேற்றத்தைக் கொண்டாடுவதற்கும், மற்றவர்களுக்கு வாய்ப்புகள் மற்றும் தளங்களை உருவாக்க வேண்டியதும் அவசியம்.
7) பணிவு:
மற்றவர்களை மதிப்பதும், கனம் பண்ணுவதும், கௌரவிப்பதும் பணிவின் வெளிப்பாடாகும். பொது நிகழ்ச்சிகளில் மரியாதைக்குரிய (முதன்மையான) இடத்தைப் பிடிக்க வேண்டாம் என்று ஆண்டவராகிய இயேசு தம் சீஷர்களுக்குக் கற்பித்தார் (லூக்கா 14:8).
ஒற்றுமையில் (ஐக்கியத்தில்) விளையும் இந்தக் குணங்கள் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்று பவுல் எழுதினார். ஆம், எந்த ஒரு போதகரானாலும் அல்லது ஆயராக இருந்தாலும் தேவ மகிமைக்காக ஆவியில் ஒன்றுபட்ட ஒரு சபையை வழிநடத்துவதில் மகிழ்ச்சி அடைவார்கள்.
சபையின் ஐக்கியத்திற்கு நான் பங்களிக்கும் நபரா?
Author: Rev. Dr. J. N. Manokaran