ஒரு தாய் தன் மகனை மிகவும் உயிராக நேசித்தாள்; மிகவும் அரவணைத்தாள், எனவே, அந்த மகன் ஏதேனும் தவறு செய்தால் அவனை நெறிப்படுத்த தந்தையை கூட கண்டிக்க அனுமதிக்கவில்லை. பள்ளியிலும் தன் மகனை ஆசிரியர்கள் எதுவும் கண்டிக்காதபடி ஆசிரியர்களுடன் சண்டையிடுவாள். இப்படியாக மகனும் வளர்ந்தான்; உயர்நிலைப் பள்ளியில் புதியதாக கெட்ட நண்பர்கள் கிடைத்தனர். பின்னர் அவனுக்கு போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டது. ஆனால், அவன் அம்மாவால் அவனைக் கண்டிக்கவோ, அவனிடம் குறையைக் கண்டுபிடிக்க கூட முடியவில்லை. ஒரு நாள், அவனை கைது செய்ய போலீசார் வந்தனர். அப்போது அவள் தன் கணவனிடம்; “ஐயோ என் சிறிய மகனை எப்படி அழைத்துச் செல்கிறார்கள், அவர்களை நிறுத்துங்கள்” என்பதாகக் கதறினாள். ஆனாலும், அவன் பல ஆண்டுகள் சிறையில் இருந்தான். குழந்தை வளர்ப்பில் ஒழுக்கத்தின் தடி காணவில்லை. “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கெனவே தண்டிக்கிறான்” (நீதிமொழிகள் 13:24). அளவுக்கதிகமான அன்பும் அரவணைப்பும் ஒரு குழந்தைக்கு தீங்கு விளைவித்து, அவனையும் குற்றவாளியாக்கும். ஒரு பிள்ளை கண்டித்தலை வெறுத்து, சட்டத்தின் மூலம் சிறையைச் சென்று அடையும் மற்ற நிகழ்வுகளும் உள்ளன. யூதாவின் தேசம் இதே பாணியில் விவரிக்கப்பட்டுள்ளது. “மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: பட்டயம் கூர்மையாக்கப்பட்டது, பட்டயம் கூர்மையாக்கப்பட்டது; அது துலக்கப்பட்டுமிருக்கிறது. மகா சங்காரஞ்செய்வதற்கு அது கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; மின்னத்தக்கதாய் அது துலக்கப்பட்டிருக்கிறது; சந்தோஷப்படுவோமோ? அது என் குமாரனுடைய கோல், அது சகல விருட்சங்களையும் அலட்சியம்பண்ணும். அதைக் கையாடும்படி அதைத் துலக்கக் கொடுத்தார்; கொல்லுகிறவன் கையிலே கொடுக்கும்படி அந்தப் பட்டயம் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; அது துலக்கப்பட்டதுமாயிருக்கிறது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்” (எசேக்கியேல் 21:9-11).
நிராகரிக்கப்பட்ட கோல்:
முதலில், ஒழுக்கம் என்ற தடி தாயால் கைவிடப்பட்டது; ஆம், அன்பை காட்டினாள்; ஒழுக்கமாக வளர்க்க தவறினாள். இரண்டாவது, அதிகாரம் என்னும் தடி புறக்கணிக்கப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும், வழிகாட்டுவதற்கும், தேவைகளை சந்திப்பதற்கும், பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் தேவன் அவர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளார். மூன்றாவது, ஒழுக்கத்தின் தடி வலி, துன்பம் மற்றும் அதிருப்தியைக் கொண்டுவரும். ஒரு குழந்தை அதனால் கிடைக்கும் நன்மையை புரிந்து கொள்ளவில்லை என்றால், குழந்தை ஒழுக்கத்தின் கோலை நிராகரிக்கலாம். ஒழுங்குபடுத்தும் செயல்முறையின் அவசியத்தையும் விளைவுகளையும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும்.
பட்டயத்திற்கான அழைப்பு:
துரதிர்ஷ்டவசமாக, பெற்றோரிடம் ஒழுக்கத்திற்கான கண்டிப்பு இல்லாதபோது அல்லது திறன் இல்லாமை போன்றவற்றால் குழந்தையின் வாழ்க்கையில் ஒழுக்கத்தின் தடி காணாமல் போனால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. வளர்ந்த குழந்தையை சமுதாயமோ அல்லது அரசாங்கமோ கடுமையாக கண்டிக்கும். துன்மார்க்கரைத் தண்டிக்கும் அரசாங்கத்தின் அதிகாரம் தேவனிடமிருந்து வந்தது. தண்டனை மற்றும் நீதியான தீர்ப்பை நிறைவேற்ற அவர்கள் பட்டயத்தைப் பிடித்துள்ளனர் (ரோமர் 13:4).
ஒழுக்கத்தின் கோலையும் அதிகாரத்தின் கோலையும் நான் நியாயமாகப் பயன்படுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்