இன்றைய காலங்களில் மக்கள் மேக (இப்ர்ன்க்) கணிமை பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்கள், பயன்பாட்டுக் கட்டண முறையில் தனது கணிமைத் தேவைகளை பலவேறு இடங்களிலிருந்தும் கணிமை நிறுவனங்களிலிருந்தும் பெற இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. இருப்பினும், மேகங்களைப் பற்றி நமக்குக் கற்பிக்க வேதாகமத்தில் பல விஷயங்கள் உள்ளன. "தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார்" என (சங்கீதம் 104:3) சங்கீதக்காரன் தெரிவிக்கிறான். "கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்துக்குள்ளாயிருக்கிறது" (நாகூம் 1:3).
1) அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்:
"அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்" (யாத்திராகமம் 13:21). அது தேவனுடைய வாக்குத்தத்தையும், உண்மைத்தன்மையையும், முன்னேற்பாட்டையும், வழிநடத்துதலையும் மற்றும் பாதுகாப்பையும் இஸ்ரவேலருக்கு நினைவூட்டியது. ஆனால் இன்று கர்த்தராகிய இயேசு இம்மானுவேலாக அதாவது தேவன் நம்முடன் இருப்பதற்காக அவருக்கு நன்றியையும் துதியையும் செலுத்துங்கள்; ஏனெனில் அவர் பிரசன்னத்தை நாம் அனுபவிக்க முடிகின்றதே (மத்தேயு 1:23).
2) உடன்படிக்கையின் அடையாளம்:
நோவா காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உலகம் முழுவதும் அழிக்கப்பட்டது, அப்போது தேவன் மனிதகுலத்துடன் செய்த உடன்படிக்கையின் அடையாளமாக மேகத்தில் ஒரு வானவில்லை வைத்தார் (ஆதியாகமம் 9:14-16). அதாவது இனி முழு பூமியையும் தண்ணீரால் தேவன் அழிக்க மாட்டார் என்பதற்கான அடையாளமாகும்.
3) சீனாய் மலை:
கர்த்தருடைய மகிமை சீனாய் மலையை ஆறு நாட்கள் மூடியது (யாத்திராகமம் 24:15-16). தேவன் இஸ்ரவேல் தேசத்துடன் ஒரு உடன்படிக்கை செய்தார். அடிமைகளாக இருந்தவர்கள் ஒரு தேசம் ஆனார்களே.
4) ஆலயம்:
சாலொமோன் கட்டிய ஆலயத்திற்குள் உடன்படிக்கைப் பெட்டி கொண்டுவரப்பட்டபோது, மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று. "கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று" (1 இராஜாக்கள் 8:10-11).
5) மறுரூபம்:
மறுரூப மலையில், "அவர் ஜெபம்பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது. அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணை பண்ணினார்கள்". பேதுரு அங்கே நிரந்தரமாகத் தங்கும்படி கூறியபோது, "இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று" (லூக்கா 9:28-36).
6) பரமேறுதல்:
உயிர்த்தெழுதலுக்குப் பிறகு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஒரு மேகம் எடுத்துக் கொண்டது (அப்போஸ்தலர் 1:9). இதைப் பற்றி தானியேல் கூட முன்னறிவித்துள்ளார் (தானியேல் 7:13-14).
7) அவரது வருகை:
கர்த்தராகிய இயேசு மேகங்களில் உயர்த்தப்பட்டதைப் போல மீண்டும் வருவார் என்று தேவதூதர்கள் சீஷர்களுக்கு உறுதியளித்தனர். (அப்போஸ்தலர் 1:11). "இதோ, மேகங்களுடனே வருகிறார்" (வெளிப்படுத்துதல் 1:7). ஆம்,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரண்டாம் முறை மேகங்களில் வருவார்.
தேவனை அறியாதவர்கள், தேவனுடைய சமூகத்தில் இருப்பது என்பது மழை இல்லாத மேகங்களைப் போல இருப்பார்கள் (நீதிமொழிகள் 16:15).
என் வாழ்க்கையில் அவருடைய பிரசன்னத்தை நான் அனுபவிக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran