கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் தேவனுக்கும், அவருடைய கட்டளைகளுக்கும் மற்றும் அவருடைய சித்தத்திற்கும் கீழ்ப்படிய எதிர்பார்க்கப்படுகிறது. "உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி நான் தாமதியாமல் தீவிரித்தேன்" (சங்கீதம் 119:60). "நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்" (யோவான் 14:15). இருப்பினும், மனிதனுக்கு கீழ்ப்படிதல் என்பது தானாகவோ அல்லது முழுநிறைவான மறுமொழியாகவோ ஒருபோதும் இருக்காது. கீழ்ப்படிதலில் வெவ்வேறு சாயல்கள் உள்ளன.
1) தாமதமான கீழ்ப்படிதல்:
இரண்டு மகன்களுக்கான உவமையில், முதல் மகன் தந்தையின் திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்ய மறுத்துவிட்டான். இருப்பினும், சிறிது நேரம் கழித்து, அவனே மனம் வருந்தி தோட்டத்திற்கு சென்று வேலை செய்தான் (மத்தேயு 21:28-32). ஆரம்பத்தில், அவனுக்கு வேலை செய்ய மனம் இல்லை, ஆனால் பின்னர் அவன் கீழ்ப்படிவதைத் தேர்ந்தெடுத்தான். ஆம், கர்த்தர் பொறுமையாக இருக்கிறார், சில சமயங்களில் இரண்டாவது வாய்ப்புகளைத் தருகிறார்.
2) கீழ்ப்படியாமை:
உவமையில் உள்ள மற்ற மகன், நான் போய் வேலை செய்கிறேன் என்று உற்சாகமாகக் கூறினான். ஆனால், அவன் செல்லவில்லை. அவனை ஒரு நயவஞ்சக மகன் என அழைக்கலாம்.
3) பகுதியளவு கீழ்ப்படிதல்:
அமலேக்கியர்களை முற்றிலுமாக அழிக்கும்படி தேவன் சவுலுக்குக் கட்டளையிட்டார். ஆனால் அவன் அனைத்தையும் அழிக்கவில்லை, சில ஆடுகளையும் மாடுகளையும் காப்பாற்றினான், அதுவும் காப்பாற்றி வைத்ததெல்லாம் தேவனுக்கு பலி கொடுப்பதற்காக என்று கூறினான். சாமுவேல் தீர்க்கதரிசி அவனைக் கடிந்தார், மேலும் "கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்" (1 சாமுவேல் 15:22) என்றார் கடுமையாக. ஆம், பகுதியளவு கீழ்ப்படிதல் கீழ்ப்படியாமை என்று தான் கருதப்படுகிறது.
4) கலகம்:
இது எதிர்பார்த்ததற்கு நேர்மாறான செயலைச் செய்கிறது. காயீன் தேவனால் பரிந்துரைக்கப்படாத ஒரு காணிக்கையைக் கொண்டு வந்தான், எனவே நிராகரிக்கப்பட்டது. உடனே காயீன் தேவனுக்கு எதிராக கலகம் செய்தான்.
5) சரியான கீழ்ப்படிதல்:
கர்த்தராகிய இயேசுவே கீழ்ப்படிதலுக்கான நமக்கு முன்மாதிரியாகவும் உத்வேகமாகவும் இருக்கிறார். "அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்" (பிலிப்பியர் 2:8).
தேவ கட்டளைகளைப் பொறுத்தவரை, மயக்கும் போத்திபாரின் மனைவியை விட்டு யோசேப்பு ஓடியது போல ஓடிப்போவது நல்லது. தேவ சித்தத்தைச் செய்வதில், முதல் சந்தர்ப்பத்தில் செல்ல மறுத்த குமாரனைப் போல, இரண்டாவது வாய்ப்பைக் கொடுக்க தேவன் கிருபையாக இருக்கலாம்; ஆனால் எப்பொழுதும் இல்லை என்பதை நினைவில் வைப்போம்.
என் கீழ்ப்படிதலின் மூலம் தேவன் மீதான என் அன்பு வெளிப்படுகிறதா?
Author : Rev. Dr. J. N. Manokaran