முந்தைய காலங்களில் 'நாம் இருவர் நமக்கு இருவர்'; பின்பதாக நாம் இருவர் நமக்கு ஒருவர்'; சமீப காலங்களில் 'நாமே இருவர் நமக்கு ஏன் ஒருவர்' என்பது பிரபலமாகி வருகின்றது. ஆம், இரண்டு வருமானங்கள் ஆனால் குழந்தைகள் வேண்டாம் என்பது போலாகி விட்டனர் இன்றைய கால சில தம்பதிகள்.
தவறான முன்னுரிமைகள்:
சில இளைஞர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள் ஆனால் உடனடியாக குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்கிறார்கள், வாழ்க்கையை அனுபவிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள், ஆம், புது புது இடங்களுக்கு செல்வது, வேலையில் முன்னேற்றம் அல்லது செல்வத்தை உருவாக்குவதில் கவனம் என காணப்படுகிறார்கள். அநேகர் இரட்டிப்பு வருமானம் மற்றும் பலரை விட பணக்காரர்களாக இருந்தாலும், குழந்தைகளைப் பெற வேண்டாம் என்று தெரிவு செய்கிறார்கள். தேவன் ஆதாமையும் ஏவாளையும் படைத்து, அவர்களைப் பலன்தரவும், பூமியை நிரப்பவும் கட்டளையிட்டார் (ஆதியாகமம் 1:28). தேவன் எதையும் கொண்டு பூமியை நிரப்பியிருக்க முடியும், ஆனால் சிருஷ்டிக்கும் செயல்பாட்டில் பங்கேற்க ஒரு மனித ஜோடியை தன்னுடன் சேர்த்துக்கொள்ளத் தேர்ந்தெடுத்தார்.
சுயநலம்:
பெண் என்பவள் குழந்தைகளை பெற்றுத் தரும் இயந்திரம் இல்லை என்று கூறி குழந்தை பெற பெண் மறுக்கிறாள். ஒரு குழந்தையைப் பெற்று அதன் தேவையைச் சந்திப்பதற்கும் பாதுகாப்பதற்கும் தான் பொறுப்பேற்க முடியாது என்று ஆண் கூறுகிறான். உண்மையில், குழந்தைகள் தேவன் தரும் பரிசு, அவர்கள் தேவனின் கிருபையான பரிசை வேண்டாம் என மறுக்கிறார்கள். "பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்" (சங்கீதம் 127:4).
சாக்குபோக்கு கிடையாது:
யாக்கோபின் சந்ததியினர் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோதே பலனளித்து ஒரு தேசமாக பெருகினர். எகிப்தில் இருந்து சுதந்திரம் கிடைத்தப் பின்னரே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. ஒரு ஆண் குழந்தை நைல் நதியில் வீசப்பட வேண்டும் என்று எதிர்பார்த்த பிரமாணம் கூட இஸ்ரவேலைக் குழந்தைகளைப் பெறுவதைத் தடுக்கவில்லை. ஏற்கனவே மிரியம் மற்றும் ஆரோன் என இரண்டு குழந்தைகளைப் பெற்றிருந்த அம்ராம் மற்றும் யோகெபேத் தம்பதியினர் மேலும் ஒரு குழந்தையைப் (மோசே) பெற முடிவு செய்தனர் (யாத்திராகமம் 6:20). அடிமைத்தனமும் மரண அச்சுறுத்தலும் பார்வோன் மூலம் இருந்த போதிலும் அவர்கள் மோசேயைப் பெற்றெடுப்பதைத் தடுக்கவில்லை, மோசே கர்த்தரின் மாபெரும் ஊழியரானார்.
ஜாம்பவானின் பிறப்பு:
ஒரு மனிதனுக்கு மேகநோய் இருந்தது, அவரது மனைவிக்கு காசநோய் இருந்தது, ஏற்கனவே தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர், ஒரு குழந்தை இறந்தது மற்ற மூன்று குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டனர். அவர்களுக்கு இன்னொரு குழந்தை வேண்டுமா? அவர்கள் குழந்தையை கருக்கலைக்க வேண்டுமா? ஆனால் அவர்கள் அடுத்த குழந்தையைப் பெற முடிவு செய்தனர் . ஆம், அக்குழந்தைதான் லுட்விக் வான் பீத்தோவன், மேற்கத்திய இசை வரலாற்றில் மிகவும் போற்றப்பட்ட மற்றும் சிறந்த இசையமைப்பாளர்.
இயல்பான அன்பு இல்லாமை:
கடைசி நாட்களில், இயல்பான பாசம், அன்பு அல்லது மற்றவர்கள் மீது அக்கறை இல்லாமல், மக்கள் சுயத்தை நேசிப்பவர்களாக இருப்பார்கள் என்று பவுல் எச்சரிக்கிறார் (2 தீமோத்தேயு 3). எனவே, சபையில் உள்ள வயதான பெண்கள் இளம் பெண்களுக்கு குடும்பத்தைப் பற்றி கற்பிக்க வேண்டும் (தீத்து 2:4-5).
குழந்தைகளை தேவனின் விலையேறப்பெற்ற பரிசாக நான் கருதுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்