‘புதிய விளக்குமாறு நன்றாக பெருக்கும்’ என்பது பழமொழி. காலம் செல்லச் செல்ல, துடைப்பம் தேய்மானமடைந்து பயனற்றதாகிறது. அதே போல, சிலர் ஆர்வத்துடன் திட்டங்களைத் தொடங்கி, பின்னர் தங்கள் செயல்திறனில் மங்கி விடுகிறார்கள். பாபிலோனுக்கு எதிராக தேவன் அழிவின் துடைப்பத்தைப் பயன்படுத்துவார் என்று ஏசாயா தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார்.
தரையை துடைத்தல்:
காணாமல் போன வெள்ளிக்காசு உவமையில், கன்னிப் பெண் தொலைந்த நாணயத்தை மீட்டெடுக்க தரையைப் பெருக்கினாள் (லூக்கா 15:8). அவள் அதை இழந்தாள், கண்டுபிடித்தாள், மற்றவர்களுடன் கொண்டாடினாள். காசு எங்கே விழுந்தது என்று தூசி தட்டி, சுத்தமாக துடைத்து கவனமாக தேடினாள். ஆம், நாமும் தேவனுடைய வார்த்தை மற்றும் தேவனுடைய ஆவியின் வெளிச்சத்தில் நம்மை நாமே தற்பரிசோதனை செய்வது ஞானமானது.
எச்சரிக்கை:
பாபிலோன் அரசியல் ரீதியாக வலிமை வாய்ந்ததாக இருந்தது. பாபிலோனின் ராஜாக்கள் பொல்லாதவர்களாகவும் சாத்தானால் அதிகாரம் பெற்றவர்களாகவும் இருந்தனர். வீழ்ந்து போன தூதனான லூசிபர் மனிதர்கள் மூலம் தனக்கு விருப்பமான கருவியாக மாற்றுகிறான். அவர்கள் தேவனின் தீர்ப்பிலிருந்து தப்பிக்க மாட்டார்கள். தேவன் சங்காரம் என்னும் துடைப்பத்தினால் பெருக்கி பாழடைந்த இடமாக மாற்றுவார் (ஏசாயா 14:23). செழிப்பான, புகழ்பெற்ற, குறிப்பிடத்தக்க மதிப்புள்ள பேரரசு கைவிடப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட இடமாக மாறும்.
பொய்களின் புகலிடம்:
பெரும் கோபுரமாக விளங்கும் தேவனின் திருநாமத்தால் தஞ்சம் அடையாதவர்கள், பொய்யின் அடைக்கலத்தில் துக்கத்துடன் தஞ்சம் அடைவார்கள் (நீதிமொழிகள் 18:10). கர்த்தருடைய நாமம் பரிசுத்தம் மற்றும் அவர் நித்திய பிதா. சாத்தான் ஒரு பொய்யன், அவனிடம் அடைக்கலம் புகுவது பொல்லாதது, மோசமானது, தீங்கிழைக்கும் பொய்கள். ஏசாயா தீர்க்கதரிசி இப்படியாக எச்சரிக்கிறார்; “நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும்” (ஏசாயா 28:17).
தீர்ப்பு:
தேவன் இஸ்ரவேலின் ராஜாக்களை நியாயந்தீர்த்து அவர்களை துடைத்தெறிந்தார். யெரொபெயாம் இஸ்ரவேலின் முதல் ராஜாவாக இருந்தான், இஸ்ரவேல் தேசத்தை வழிபாட்டுப் பொருட்களாக தங்கக் கன்றுகளை நிறுவுவதன் மூலம் பாவத்திற்கு வழிநடத்தினான். அவனும், அவன் குடும்பமும், அவனுடைய சந்ததியும் எல்லாம் போகும் வரை சாணம் போல அடித்துச் செல்லப்பட்டனர் (1 இராஜாக்கள் 14:10).
யெரோபெயாமின் மாதிரியைப் பின்பற்றிய பாஷாவின் வீடும் அடித்துச் செல்லப்பட்டது (1 இராஜாக்கள் 16:3). மிகவும் பொல்லாத ராஜாவான ஆகாப் ராஜாவும் நியாயந்தீர்க்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டானே (1 இராஜாக்கள் 21:21).
நான் பொய்களின் அடைக்கலத்தை விட்டு அவருடைய பரிசுத்த நாமத்திற்குள் தஞ்சம் அடைகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்