ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையை வால்டர் ஐசக்சன் எழுதியுள்ளார். படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்த சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராகவும், அவைகள் நீடித்த பலனைத் தருவதால் அவர் ஒரு அடையாளமாகவும் கருதப்படுகிறார். மேலும் அவரின் அனைத்து கண்டுபிடிப்புகளும் நேர்த்தியாக காணப்படுகிறது. ஸ்டீவ் ஜாப்பின் தந்தை, ஒரு பொருளை சிறப்பாக வடிவமைப்பது எப்படி என்றும் அதன் நுணுக்கங்களையும் கற்றுக்கொடுத்தார். அதனை அவர் தனது அனைத்து ஆப்பிள் தயாரிப்புகளுக்கும் கொண்டு வந்தார். வெளிப்புறங்கள் மட்டுமல்ல, உள்ளே உள்ள பகுதிகளும் கச்சிதமாக இருக்கிறதல்லவா; அதற்கு அவர் தந்தையே காரணம். ஆனால் வருத்தப்பட வேண்டியது என்னவென்றால், ஸ்டீவ் தனது ஆத்துமாவை கவனிக்காமல், அவரது ஆவிக்குரிய வாழ்க்கையை புறக்கணித்தார், நித்திய நம்பிக்கை இல்லாமல் இறந்தார்.
நேர்த்தியான தேவன்:
தேவன் பரிபூரணமானவர் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கற்பித்தார், மேலும் மக்களும் பூரணமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் கோருகிறார் (மத்தேயு 5:48). தேவனை மிகவும் பரிணாம வளர்ச்சியடைந்த ஆத்மா என்று நினைக்கும் சிலர் இருக்கிறார்கள், அதாவது, அவர் மனிதர்களைப் போல தான் இருந்தார், ஆனால் பிராயச்சித்தத்தின் / தவத்தின் மூலம் கடவுளாகிவிட்டார் என எண்ணுகிறார்கள். ஆனால் தேவனானவர் ஒரு சுயமாக இருக்கும் கடவுள்; ஆம், "இருக்கிறவராகவே இருக்கிறேன்" (யாத்திராகமம் 3:14) என்கிறார். பரிபூரணமான, பரிசுத்தமான மற்றும் நீதியுள்ள தேவன் மனிதனைத் தம் சாயலில் படைத்தார். ஆதாம் மற்றும் ஏவாளின் கீழ்ப்படியாமை இந்த உலகத்தில் பாவத்தையும் துயரத்தையும் கொண்டு வந்தது. பாவிகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனோடு ஒப்புரவாக்கப்படுகிறார்கள்.
முயற்சி:
கர்த்தர் தன்னை எதற்கு அழைத்திருக்கிறாரோ அதில் தான் இன்னும் முழுமையாக தேறவில்லை என்றும்; ஆனால் இயேசு கிறிஸ்து அழைத்த நோக்கத்தை அதாவது அந்த இலக்கை அடைய வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும், முயற்சிப்பதாகவும் மற்றும் முன்னேறுவதாகவும் கூறுகின்றார் பவுல் (பிலிப்பியர் 3:14-16).
ஆத்துமாவின் கண்ணாடி:
நமது உள்ளம் பற்றிய சுயபரிசோதனை மிக மிக தேவை. ஸ்டீவ் ஜாப்ஸ் சரியான தயாரிப்புகளை தயாரிப்பதில் ஆர்வமாக இருந்தார், ஆனால் தான் எப்படி இருக்க வேண்டும் மற்றும் எப்படி பரிபூரணம் அடைய முடியும் என்று நினைக்கவில்லை. தேவ வார்த்தை ஒரு கண்ணாடி போன்றது (நவீன மொழியில் CT ஸ்கேன்) என்று யாக்கோபு எழுதுகிறார். அதாவது இது ஒரு நபரின் உள் பாவ நிலையை காட்டுகிறது. "என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவமுகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்" (யாக்கோபு 1:23).
சாத்தியமான கட்டளையா?
பரிபூரணமாக மாறுவது சாத்தியமில்லை என்று சிலர் நினைக்கிறார்கள். இருப்பினும், தேவன் கட்டளையிடும்போது, முடியாத ஒன்றைச் செய்யுமாறு அவர் கேட்க மாட்டாரே.
ஆவிக்குரிய அலங்காரம்:
வெளிப்புற அலங்காரம் செய்வதன் மூலம் மக்கள் அழகாக அல்லது வடிவமாக இருக்க முயற்சிக்கும் போது, ஆவிக்குரிய சீர்ப்படுத்தல் புறக்கணிக்கப்படுகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் தனிப்பட்ட உறவைக் கொண்டிருப்பது, வேதத்தைப் படிப்பது மற்றும் பரிசுத்த ஆவியின் சத்தத்தைக் குறித்த உணர்வைக் கொண்டிருப்பது ஒரு நபரை பரிபூரணமாக்கும் என்பதில் எள்ளளவு சந்தேகம் இல்லை.
ஆவிக்குரிய பரிபூரணத்தை அடைய நான் முயற்சிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்