அசீரியர்கள் சக்திவாய்ந்தவர்களாக இருந்தனர் மற்றும் எசேக்கியாவின் ஆட்சியின் போது மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தினர். பாபிலோன் ஒரு வல்லரசு ஆக ஆசைப்பட்டது. அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; ஆகையால் வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்த தேவன் கூறிய போது எசேக்கியா அழுது புலம்பி, கெஞ்சியதால் நீண்ட ஆயுளை தேவனளித்தார். மேலும் தேவன் அவனை அற்புதமாகக் குணப்படுத்தி, பதினைந்து ஆண்டுகள் வாழ்நாளை நீட்டித்தார் (ஏசாயா 38). கிருபையாக கிடைத்த இந்தப் பதினைந்து வருடங்கள் அவருடைய மகிமைக்காகவும் யூதாவைப் பலப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லவா. ஆனால் நடந்தது என்ன?
நடுநிலை:
"பலாதானின் குமாரனாகிய மெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு, அவனிடத்திற்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்" (ஏசாயா 39:1). இந்த உயர்மட்ட தூதுக்குழு யூதாவை அசீரியாவுக்கு எதிராக பாபிலோனுடன் இணைக்கும் நோக்கத்தில் வந்தது (ஏசாயா 39). அசீரியர்களுக்கு மெரோதாக் ஒரு கலகக்காரன் மற்றும் பயங்கரவாதி. இருப்பினும், பாபிலோனியர்கள் தங்களை சுதந்திரப் போராளிகளாகக் கருதுகின்றனர்.
செல்வாக்கை காண்பித்தல்:
யூதாவும் ஒரு பெரிய ராஜ்ஜியம், சமமான பங்காளிகளாகக் கருதப்படத் தகுதியானது என்று பாபிலோனியர்களை ஈர்க்க எசேக்கியா விரும்பினான். எனவே, அவன் அனைத்து செல்வங்களையும், ஆயுதங்களையும், வாசனை திரவியங்களையும் காண்பித்து ஸ்லாகித்தான். அது அரச கருவூலத்தில் இருந்தது (2 நாளாகமம் 32: 27-29).
வெளிப்படுத்தப்பட்டது:
எசேக்கியா பொக்கிஷங்களை அம்பலப்படுத்தினான், அவன் பாபிலோனிய பிரதிநிதிகளிடம் எதையும் மறைக்கவில்லை. அவனுடைய முட்டாள்தனத்திற்காக ஏசாயா அவனைக் கண்டித்தார். சிம்சோன் தன் பலத்தை ஒரு பரஸ்தீரிக்கு வெளிப்படுத்தியது போல, எசேக்கியா தேவன் கொடுத்த செல்வத்தை பொல்லாதவர்களுக்கு அம்பலப்படுத்தினான்.
தேவனுக்கு மகிமையா?
எசேக்கியா தேவனை மகிமைப்படுத்தியிருக்க வேண்டும், யெகோவாவைப் பற்றி, அவருடைய பண்புகள் மற்றும் கட்டளைகளைப் பற்றி பகிர்ந்துகொண்டிருக்க வேண்டும்; ஆனால், அவனோ தனது சொந்த பெருமையை அல்லவா தம்பட்டம் அடித்தான்.
நியாயத்தீர்ப்பு பற்றிய தீர்க்கதரிசனம்:
தூதுக்குழு பார்த்ததை எல்லாம் பாபிலோனுக்கு கொண்டு சென்று விடுவார்கள், எதுவும் மிச்சமிருக்காது என்று ஏசாயா தீர்க்கதரிசி அறிவித்தார். எசேக்கியாவின் சந்ததியினர் பாபிலோனிய அரண்மனையில் மந்திரியாக சேவை செய்வார்கள். சுயநலமான மற்றும் முட்டாள் எசேக்கியா இந்த காலங்களில் அமைதியும் செழிப்பும் இருக்கும் என்று நினைத்தான், மேலும் பேரழிவு அவனது சந்ததியினருக்கு மட்டுமே வரும்.
தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்:
ஏசாயா தீர்க்கதரிசனம் கூறியபடி, நேபுகாத்நேச்சார் யூதாவை தோற்கடித்து, அரச குடும்பத்தைச் சேர்ந்த தானியேல் உட்பட பல இளைஞர்களை அழைத்துச் சென்றார். தானியேலும் அவருடைய நண்பர்களும் பாபிலோனில் சேவை செய்தார்கள் (தானியேல் 1:1-4).
எசேக்கியா பதினைந்து ஆண்டுகள் ஒரு நல்ல உக்கிராணக்காரனாக இருக்க தவறிவிட்டான்; ஆம், 15 ஆண்டுகள் என்பது தேவன் எவ்வளவு கிருபையாய் அருளினார்.
நான் தேவனின் மகிமையையும் மகத்துவத்தையும் அன்றாட வாழ்வில் வெளிப்படுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்