சமாரிடன் பர்ஸ் (Samaritan Purse) என்ற தொண்டு நிறுவனம் அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் தங்கள் ஷூ பெட்டிகளில் பரிசுகளை நிரப்பவும், அவற்றை சேகரித்து, உலகின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்கிறது, அவை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது ஏழை குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. ஆனால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பல்வேறு காரணங்களால் அது நிறுத்தப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் ஒரு நல்ல முன்முயற்சியில், ஒரு அமைப்பு குழந்தைகளுக்கான பரிசுகளை ஷூ பெட்டியில் நிரப்ப குடும்பங்களை சபைகள் மூலம் ஊக்குவித்தது. பெட்டிகள் வயதுக்கு ஏற்பவும், ஆண் மற்றும் பெண் என வித்தியாசம் காணும்படியாகவும் இருக்கும். ஆடைகள், பொம்மைகள், எழுதுபொருட்கள், கதைப் புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள், அட்லஸ், அகராதிகள் போன்றவற்றை வைக்க குடும்பங்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்த பெட்டிகள் சிறிய அல்லது கிராமப்புற சபைகளில் பொதுவெளி கிறிஸ்துமஸ் நிகழ்வுகளில் சேகரிக்கப்பட்டு பரிசுகளாக வழங்கப்படுகின்றன. 2021 ஆம் ஆண்டில் சுமார் 5000 குழந்தைகள் இந்த முயற்சியால் பயனடைந்துள்ளனர். தங்களை விட பின்தங்கிய நிலையில் உள்ள மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும், அவர்களைப் பராமரிக்கவும் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.
1) ஊக்கமளிக்கும் சிறுவன்:
ஒரு சிறுவன் தனது மதிய உணவான, ஐந்து பார்லி ரொட்டிகளையும், இரண்டு மீன்களையும் பகிர்ந்து கொள்ள மகிழ்ச்சியுடன் தயாராக இருந்தான், அது ஆண்டவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஐயாயிரம் ஆண்கள், அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவளிக்க பயன்படுத்தப்பட்டது (மத்தேயு 14:13-21). நம் பிள்ளைகள் அனைவரும் சமூகத்தில் மற்றவர்களுக்கு பகிர்ந்துகொண்டும் அக்கறையோடும் இப்படித்தான் வளர வேண்டும். பரிசுகளுடன் பெட்டிகளை நிரப்பும் இந்த முயற்சி என்பது முன்பின் அறியாத, முகம் தெரியாத நபர்களுக்கு பகிர்ந்து கொள்ள குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கிறது.
2) உதவிகரமான பெண்:
மிரியம் மூன்று மாதங்களேயான தன் சகோதரனைப் பற்றி விழிப்பாகவும், அக்கறையாகவும், கவலையாகவும் இருந்தாள். ஆம், தண்ணீரில் விட்ட அவன் பிழைப்பானா என்ற சோகம். எப்போது பார்வோனின் மகள் குழந்தை மோசேயைக் கண்டாளோ மிரியாம் அவளிடம் பேச விரைந்தாள். அரச குடும்பத்தாரிடம் அடிமையாக பேச அவளுக்கு அனுமதி இல்லை. ஆனாலும், சகோதரன் மீதான அன்பும் அக்கறையும் அவளைப் புத்திசாலித்தனமாகவும் ஞானமாகவும் பேசத் தூண்டியது. சகோதர சகோதரிகளை அக்கறையோடும் அன்போடும் கவனித்துக்கொள்ள வேண்டும் என பெற்றோர்களால் கற்பிக்கப்பட வேண்டும் (யாத்திராகமம் 2).
3) உதாரணத்துவமான அடிமைப் பெண்:
ஒரு அடிமைப் பெண் நாகமானின் வீட்டில் ஒரு மிஷனரியாகி, தன் விசுவாசத்தைப் பற்றியும், ஜீவிக்கும் தேவனைப் பற்றியும், அவன் எப்படிக் குணமடையலாம் என்றும் பகிர்ந்துகொண்டாள் (2 இராஜாக்கள் 5).
"வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்" (அப்போஸ்தலர் 20:35). எவ்வளவு கொடுக்கிறோம் என்பதை பற்றியது அல்ல, மாறாக இதயங்களில் எவ்வளவு அன்பு, இரக்கம், தாராள மனப்பான்மை மற்றும் அக்கறை நிறைந்து இருக்கிறது என்பது பற்றியதாகும்.
கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சியை நான் அனுபவிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்