"பாரசீகர்கள்" என்று பொருள்படும் பார்சிகள், மதத் துன்புறுத்தலைத் தவிர்ப்பதற்காக இந்தியாவிற்கு குடிபெயர்ந்த ஸொராஸ்ட்ரின் போதனை வழி வந்தவர்கள். அவர்கள் நெருப்பை கடவுளின் அடையாளமாக வணங்குகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, சில மதங்கள் கடவுளின் ஒரு அம்சத்தை அல்லது பண்பைப் புரிந்துகொண்டு மற்றவற்றைப் புறக்கணிக்கின்றன. அதனால், அவர்களுக்கு சத்தியம் தெரியவில்லை. “கர்த்தர் பட்சிக்கிற அக்கினி” (உபாகமம் 4:24) என்பதாக வேதாகமம் கூறுகிறது. நெருப்பு தேவ பிரசன்னத்தையும் அவரின் கிரியையும் குறிக்கிறது. கர்த்தராகிய இயேசு பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார் என்று யோவான் ஸ்நானகன் முன்னறிவித்தான், அதை கர்த்தரும் உறுதிப்படுத்தினார் (மத்தேயு 3:11; லூக்கா 12:49). பரிசுத்த ஆவியானவர் பெந்தெகொஸ்தே நாளில் அக்கினியாக வெளிப்பட்டார் (அப்போஸ்தலர் 2:3). அக்கினியால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பலிகள் குறித்ததான ஆறு சந்தர்ப்பங்களை வேதாகமம் வழங்குகிறது.
1) ஆரோன் (லேவியராகமம் 9:24):
தேவன் இஸ்ரவேலை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வந்தார். வனாந்தரத்தில், கர்த்தர் இஸ்ரவேலருக்கு வழிபடக் கற்றுக் கொடுத்தார். கூடாரம் முதல் முறையாக கட்டப்பட்டது, ஆரோன் பலி செலுத்தினான். தேவன் அக்கினியாக பதிலளித்தார்.
2) கிதியோன் (நியாயாதிபதிகள் 6:21):
வாக்களிக்கப்பட்ட தேசத்தில், தேவன் ஏன் தம் மக்களை மீதியானியர்களின் கொடுங்கோன்மையிலிருந்து விடுவிக்கவில்லை என்று கிதியோன் ஆச்சரியப்பட்டான். தேவன் கிதியோனை நியமித்தார் மற்றும் அவனது பலியை அக்கினியால் ஏற்றுக்கொண்டு அவனுக்கு பதிலளித்தார்.
3) மனோவா (நியாயாதிபதிகள் 13:19-23):
மனோவாவும் அவனுடைய மனைவியும் பிறக்கவிருக்கும் தங்கள் மகனை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளைப் பெற்றனர். அவர்கள் தேவதூதரிடம் சாப்பிடச் சொன்னபோது, அவர் ஒரு சர்வாங்க தகனபலியைக் கொடுக்கச் சொன்னார், அது கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
4) தாவீது (1 நாளாகமம் 21:26):
தாவீது ராஜா ஒரு முட்டாள்தனமான செயலைச் செய்தான், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு கட்டளையிட்டான், தளபதி யோவாப் அதைத் தடை செய்தான். இதனால் கொள்ளை நோய் ஏற்பட்டது. தாவீது ஒரு பலி செலுத்தினான், அது வானத்திலிருந்து இறங்கின அக்கினியால் கர்த்தர் மறுஉத்தரவு கொடுத்தார்.
5) சாலொமோன் (2 நாளாகமம் 7:1):
சாலொமோன் எருசலேம் ஆலயத்தை பிரதிஷ்டை செய்தபோது, கர்த்தரிடமிருந்து அக்கினி வந்து, சர்வாங்க தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது.
6) எலியா (1 இராஜாக்கள் 18:38):
எலியா தீர்க்கதரிசி தேவன் கட்டளையிட்டபடி, பின்வாங்கிய தேசத்திற்கு யெகோவா அக்கினியால் பதிலளிக்கும் தேவன் என்பதை நிரூபித்தார்.
மக்கள் அனைவரும் அக்கினியைக் கண்டதும் முகம் குப்புற விழுந்தனர். தேவன் காட்டும் பாதையில் நாம் காரியங்களை நடப்பிக்கும் போது அது அங்கீகரிக்கப்படுகிறது.
என் வாழ்க்கை அங்கீகரிக்கப்பட்டதா மற்றும் நான் தேவனை வழிபடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்