பல விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதுமை விரும்பிகள், மனிதகுலத்தை முற்போக்கான திசையில் வழிநடத்துகிறார்கள். ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால், மனிதகுலம் ஒரு ஆபத்தான சூழலில் வாழ வேண்டியிருந்தது. ஒவ்வொரு திருப்புமுனை தொழில்நுட்பமும் அல்லது கண்டுபிடிப்பும் வாழ்க்கையை எளிதாகவும் வசதியாகவும் ஆக்கியுள்ளது. இயற்கையில் மறைக்கப்பட்ட வரங்களை மற்றும் வளங்களைத் தேடியவர்களைப் பட்டியலிடுகிறது ஆதியாகமம் புத்தகம்.
மந்தை வளர்ப்பு:
யாபால் மந்தை மேய்ப்பதைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர், யாபால் மந்தை மேய்ப்பவர்களின் தகப்பனானான் என ஆதியாகமத்தில் (4:20-21) வாசிக்கிறோம். அதாவது விலங்குகளை வளர்க்க வேண்டும், தீவனம் கொடுக்க வேண்டும், மேலும் விலங்குகளை பயனுள்ள வழிகளில் பயன்படுத்த வேண்டும். பால் பொருட்கள், கம்பளி, உழவு மற்றும் போக்குவரத்து என மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருந்தன.
இசை:
யூபால் இசைக்காகப் பாராட்டப்பட்டார். “அவன் கின்னரக்காரர், நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்” (ஆதியாகமம் 4:21). பாடல்களுக்கு வசனம் எழுதுவது, இசை சேர்ப்பது, பாடுவது ஆகியவற்றை யூபால் கண்டுபிடித்தார். இது வாய்வழி கலாச்சாரத்தில் மனிதகுலத்திற்கு அறிவைக் குவிக்கவும், அதை மனனம் செய்யவும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் உதவியது.
உலோகம்:
இன்று உலோகங்கள் இல்லாத வாழ்க்கையை உணரவே முடியாது. உலோகங்களைப் பயன்படுத்தி சுரங்க, சுத்திகரிப்பு மற்றும் கருவிகளை உருவாக்கும் வழிகளைக் கண்டுபிடித்தவர் தூபால் காயீன். “அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்” (ஆதியாகமம் 4:22). இது உணவுக்கான வேட்டைக்கும் மற்றும் போக்குவரத்துக்கான தண்ணீரை சேமித்து வைக்கவும் உதவியது.
மது:
நோவாவை தற்செயலான கண்டுபிடிப்பாளர் என்று அழைக்கலாம். திராட்சை தோட்டத்தை பயிரிட்டதற்காகவும் மற்றும் ஒயின் செயல்முறையை கண்டுபிடித்ததற்காகவும் யூத அறிஞர்களால் அவர் பாராட்டப்படுகிறார் (ஆதியாகமம் 9:20-21). மது இதயத்தை உற்சாகப்படுத்துகிறது, ஒரு நபர் குடிகாரனாக மாறுவது ஆபத்தானது என்று வேதாகமம் கூறுகிறது (சங்கீதம் 104:15; நீதிமொழிகள் 31:4; எபேசியர் 5:17-18). தீமோத்தேயுவின் வயிற்றுக் கோளாறுகளுக்கு திராட்சரசம் குடிக்கும்படி பவுல் அறிவுறுத்தினார் (1 தீமோத்தேயு 5:23-25).
வெந்நீர் ஊற்று:
ஏசாவின் விரிவான பரம்பரையில், ஆனாகுவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது (ஆதியாகமம் 36:24; . அவருடைய பெயர் 'நிச்சயமற்றது' என்று பொருள்படும், எனவே அவர் பாலைவனத்தில் கழுதைகளை மேய்க்க அனுப்பப்பட்டார். அனேகமாக, வெயில் கொளுத்தும் பாலைவனத்தில் இந்த வேலையைப் பற்றி அவர் முணுமுணுத்திருக்கலாம், புல்வெளிகளைத் தேடி, குடும்பத்தை விட்டு அலைந்து திரிந்திருக்கலாம். ஆனாலும், அவர் சிரத்தையுடன் காணப்பட்டார். ஆனாகு ஒரு எதிர்பாராத ஆசீர்வாதத்தைப் பெற்றார், அவர் ஒரு சூடான நீரூற்று சோலையைக் கண்டுபிடித்தார். பின்னர் கிரேக்கர்களும் ரோமானியர்களும் ஆனாகு கண்டுபிடித்த வெப்ப நீரூற்றுகளால் நிரப்பப்பட்ட குளியலறைகளில் ஓய்வெடுக்க திரண்டனர். கடினமான சூழலில் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி பாலைவனத்தில் கூட வெகுமதி பெற்றது.
தேவனின் படைப்பைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேனா, புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்