பரிசேயனாகிய சீமோனிடம் கர்த்தர் ஒரு உவமையைச் சொன்னார்; "ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது. கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார். சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன்" (லூக்கா 7:41-43) என சரியாகச் சொன்னான். ஆம், மன்னித்ததற்கான நன்றியுணர்வும், காட்டப்படும் இரக்கமும் அன்பினால் வெளிப்படுத்தப்படுகிறது என்று கர்த்தர் கற்பித்தார். விருந்தினரை வரவேற்பதில் சீமோன் செய்யத் தவறிய மூன்று காரியங்களை அந்தப் பெண் தன் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக செய்தாள்.
நட்பான வரவேற்பு:
விருந்தினர்களை வரவேற்பதற்காக புரவலன்கள் வாயிலுக்குச் செல்கின்றனர். அவர்கள் கட்டிப்பிடித்து, முத்தமிட்டு, தங்கள் வீட்டிற்கு அழைக்கிறார்கள். சீமோன் அதைச் செய்யவில்லை, இது விருந்தினருக்கு அவமானம். இருப்பினும், தங்குவதற்கு ஏற்ற நல்ல வீடு வாசல் கூட இல்லாத பெண் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாதங்களை முத்தமிட்டு ஆண்டவரைக் கௌரவித்தாள். அவள் கர்த்தராகிய இயேசு தான் மேசியா என்பதை அறிந்தவளாய் அவரை தொழுது கொண்டாள் (சங்கீதம் 2:12).
கால்களை கழுவுதல்:
மக்கள் பொதுவாக நடக்கும்போது, அவர்களின் கால்கள் தூசி படிந்துவிடும். எனவே, விருந்தாளியின் கால்களைக் கழுவுவதற்கு புரவலன் தண்ணீர் மற்றும் ஒரு துண்டு ஆகியவற்றை வழங்க வேண்டும் முடிந்தால் வேலைக்காரன் ஒருவன் விருந்தினர் பாதத்தை கழுவ வேண்டும். சீமோன் அதில் தோல்வியடைந்தான்; அந்தப் பெண் தன் கண்ணீரால் ஆண்டவரின் பாதங்களைக் கழுவி, தன் தலைமுடியை துண்டாகப் பயன்படுத்தினாள்.
அபிஷேகம்:
எண்ணெய் அல்லது வாசனை திரவியத்தை தலையில் பூசுவது ஒரு வழக்கமாக இருந்தது; அதையும் சீமோன் செய்யவில்லை. அந்த பெண் அவருக்கு விலையுயர்ந்த வாசனை திரவியத்தால் அபிஷேகம் செய்தாள்.
சுய நீதியுள்ள பரிசேயன்:
ஒரு பரிசேயனாக, சீமோன் இறையியலைக் கற்றுக்கொண்டான், வேதாகமத்தின் விரிவான பகுதிகளை மனப்பாடம் செய்தான், கடுமையான சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தான், தசமபாகம் கொடுத்தான், தேவனுக்கு ஊழியம் செய்வதில் நேரத்தைச் செலவிட்டான், மேலும் ஒரு மதத் தலைவராகவும் புகழ் பெற்றான்; ஆனாலும் அவன் தேவனை நேசிக்கவில்லை.
கொஞ்ச அன்பா அல்லது பெரியளவு அன்பா?
"எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான்" (லூக்கா 7:47). தங்கள் பாவங்களின் அளவை உணர்ந்துகொள்பவர்கள் தேவ கிருபையையும் அவருடைய அன்பின் ஆழத்தையும் புரிந்துகொள்வார்கள். ஒரு நபருக்கு தேவன் மீதான அன்பு என்பது அவர்களது பாவம், உதவியற்ற தன்மை மற்றும் பாவத்தின் மீதான வெறுப்பு ஆகியவற்றின் உணர்வுக்கு நேரடியான விகிதாசாரமாகும். பவுல் அந்தக் கொள்கையைப் புரிந்துகொண்டு தன்னைப் பாவிகளில் பிரதான பாவி என்று சரியாக அழைத்துக்கொண்டான் (1 தீமோத்தேயு 1:15).
நன்றி:
உலகில் உள்ள அனைவரும் தங்கள் வாழ்க்கைக்காக தேவனிடம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். அதிலும், அவருடைய இரக்கத்தை அனுபவித்த விசுவாசிகள் இன்னும் அதிகமாக அல்லவா இருக்க வேண்டும்.
மிகுந்த அன்புடன் ஆண்டவருக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்