நேபுகாத்நேச்சார் தன்னை உலகின் இறையாண்மையுள்ள ஆட்சியாளராக கற்பனை செய்து கொண்டது தவறு மற்றும் தான் ஒரு முட்டாள் என்று ஒப்புக்கொள்ள, காட்டில் புல் சாப்பிட்டு, ஒரு மிருகத்தைப் போல வாழ ஏழு ஆண்டுகள் தண்டனை தேவைப்பட்டது (தானியேல் 4:25-35). “தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்கிறான்” என்று சங்கீதம் 14:1ல் நாம் வாசிக்கிறோம். நித்திய கண்ணோட்டம் இல்லாமல், நம்பிக்கை இல்லாதவர்களாக அத்தகைய மக்கள் விலங்குகளைப் போல பாவத்திலும் மிருகத்தனத்திலும் ஈடுபடுகிறார்கள். செல்வந்தர்களாகவும் பலமுள்ளவராகவும் இருந்த துன்மார்க்கரைக் கண்டு ஆசாப் கலக்கமடைந்தான். அவன் தேவனின் சமூகத்தில் காத்திருந்தபோது தெய்வீகக் கண்ணோட்டத்தில் பதில் கிடைத்தது. பின்னர் அவன் தனது முட்டாள்தனத்தை ஒப்புக்கொண்டான் மற்றும் தெய்வீக வழிகாட்டுதலுக்கு நன்றி கூறினான் (சங்கீதம் 73:21-24).
வருத்தம்:
பொல்லாதவர்கள் செழுமையிலும் பலத்திலும் ஆசாப்பை விட முன்னேறி சென்றிருந்தனர். அதனால் குற்றமற்ற, ஒழுக்கமான, நேர்மையான வாழ்க்கையை நடத்துவது முட்டாள்தனமோ என்று அவன் நினைத்தான் (சங்கீதம் 73:13). அதற்கு பிற்பாடு, இத்தகைய மனச்சோர்வடைந்த எண்ணங்களுக்காகவும் நித்திய கண்ணோட்டம் இல்லாததற்காகவும் அவன் மனம் வருந்தினான்.
மனச்சோர்வு:
சோதோமில் துன்மார்க்கர் செழிப்பதைப் பார்த்து, லோத்து உட்பட, வரலாறு முழுவதும் நீதியுள்ள பரிசுத்தவான்கள் மன வேதனையை அனுபவித்திருக்கிறார்கள் (2 பேதுரு 2:8). துன்மார்க்கரையும் கொடுங்கோலர்களையும் அதிகமாகச் சிந்தித்துப் பகுப்பாய்வு செய்வது ஆவிக்குரிய அமைதிக்குக் கேடு விளைவிக்கும், ஆம், நம் சமாதானம் கெடும். அத்தகைய எண்ணங்களிலிருந்து யோபு மனந்திரும்ப வேண்டியிருந்தது (யோபு 42:6).
முட்டாள்தனம் மற்றும் அறியாமை:
நித்திய கண்ணோட்டம் இல்லாத விசுவாசிகள், ஆசாப்பைப் போன்று முட்டாள்களாகவும், தேவனுடைய வார்த்தையை அறியாதவர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு ஆராதனை வீரனாகவும் பாடலாசிரியராகவும் இருப்பவனால், நித்தியமான சத்தியங்களை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடியாத முட்டாள்தனமாக இருந்தான்.
உறுதி:
ஆனாலும் ஆசாப் தன் விசுவாசத்திலும் கவனத்திலும் உறுதியாக இருந்தான். அவனிடம் கேள்விகள் இருந்தன, ஆனால் தேவ பிரசன்னத்தில், அவருடைய சமூகத்தில் அமர்ந்து கேட்க கற்றுக்கொண்டான். பலருக்கு சரியான கேள்விகள் உள்ளன, ஆனால் தவறான நபரிடம் அல்லது Google போன்ற செயற்கை நுண்ணறிவிடம் (AI) கேட்கின்றனர். தேவன் ஆசாப்புடன் இருந்தார், சந்தேகம் மற்றும் விரக்தியின் தருணங்களில் தேவன் ஆசாப்பின் வலது கையைப் பிடித்து வழிநடத்தினார்.
ஆலோசனை:
அந்த சிரமமான தருணங்களில், ஆவிக்குரிய இருள் மற்றும் விரக்தியின் உலகில் அவனை வழிநடத்த தேவன் அவனுக்கு அறிவுரை வழங்கினார். ஆசாப் போன்ற ஞானமுள்ளவர்கள் உணர்வுகள், சூழ்நிலைகள் அல்லது அனுபவங்களால் வழிநடத்தப்படுவதில்லை, மாறாக அவருடைய வார்த்தையால் வழிநடத்தப்படுகிறார்கள்.
மகிமை:
புதிய நித்திய கண்ணோட்டம் தற்போதைய வாழ்க்கைக்கு நம்பிக்கையை அளித்தது; தேவன் இறுதியில் அவனை மகிமையாய் ஏற்றுக்கொள்வார் என்று அவன் உறுதியாக இருந்தான்.
வேதத்தை ஒரு நித்திய கண்ணோட்டத்தோடு நான் புரிந்துகொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்