தேவனின் நண்பன்’ என்று அறியப்படுவது ஒரு மிகப்பெரிய மரியாதை (ஏசாயா 41: 8). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு ‘நண்பர்கள்’ என்ற அந்தஸ்தைக் கொடுத்தார், 'வேலைக்காரன்' என்றல்ல (யோவான் 15:15). அவர் அதற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்தார், எஜமானன் தனது திட்டத்தை வேலைக்காரர்களுக்கு வெளிப்படுத்த மாட்டாரே, ஆனால் நண்பர்கள் என்பவர்கள் எப்போதும் நம்பிக்கைக்குரியவர்கள். நல்ல நண்பர்கள் எப்போதும் ஆர்வமுடன் நல்ல அர்த்தமுள்ள மற்றும் வாழ்க்கைக்கு பிரயோஜனமுள்ள தகவல்களை பரிமாறிக் கொள்வார்கள். சோதோமையும் கொமோராவையும் அழிப்பதற்கான தனது திட்டத்தைப் பற்றி தேவன் ஆபிரகாமுடன் பகிர்ந்தார், மேலும் 'நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?' என்றும் கூறினார் (ஆதியாகமம் 18:18). ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள் என்பது (கலாத்தியர் 6:2) நட்பின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. நண்பன் எல்லா காலத்திலும் நேசிக்கிறான் (நீதிமொழிகள் 17:17). அதாவது அன்பு நிபந்தனையற்றது. கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்களிடம், நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள் என்றார் (யோவான் 14:15). ஆபிரகாம் தேவனை நேசித்தான், ஆகவே தான் ஆபிரகாம் கீழ்ப்படிந்தவனாய் போகுமிடம் எனனவென்று அறியாதிருந்தும் விசுவாசத்தினாலே அவ்விடம் நோக்கி சென்றான் (ஆதியாகமம் 12: 1-3). தேவன் நிபந்தனையற்ற அன்பினால் மனிதகுலத்தை நேசிக்கிறார், அதிலும் அவருடைய பிள்ளைகள் விசேஷமான அன்பைப் பெறுகிறார்கள்.
நல்ல நண்பர்களுக்கு சுயநலமான லட்சியமோ வீண் பெருமித எண்ணங்களோ இருப்பதில்லை (பிலிப்பியர் 2: 3). சோதோம் மற்றும் கொமோரா விஷயத்தில் பரிந்துரை செய்வதின் மூலம் ஆபிரகாம் தனது நட்பைக் காட்டினான். ஆபிரகாம் தேவனை மதிப்பாக எண்ணியதுமன்றி, அவருடைய மகிமை மற்றும் நற்பெயரிலும் அக்கறையோடு இருந்தான். ஆகவே, நீதியுள்ளவர்களை துன்மார்க்கருடன் அழிக்க வேண்டாம் என்று தேவனிடம் மன்றாடினான் (ஆதியாகமம் 18:25). இரும்பு இரும்பைக் கூர்மைப்படுத்துகிறது, ஒரு நண்பன் நண்பனைக் கூர்மைப்படுத்துகிறான் (நீதிமொழிகள் 27:17) ஆகையால், ஆபிரகாம் தேவனிடம்; 'தேவன் எவ்வாறு நீதிமான்களை துன்மார்க்கர்களோடு அழிக்க முடியும்?' என்றான். நண்பர்கள் பொதுவாக இணைந்து தான் நடப்பார்கள். ஆனால் தேவன் ஆபிரகாமை தனக்கு முன்பாக நடக்கும்படி கட்டளையிட்டார் (ஆதியாகமம் 17: 1). அது அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதாய் இருக்கிறது, ஏனெனில் ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்.
(நீதிமொழிகள் 13:20). ஆபிரகாம் தேவனுக்கு முன்பாக நடந்துகொள்வது புத்திசாலித்தனமாகவும் ஞானமாகவும் இருந்தது. இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போக முடியும் (ஆமோஸ் 3:3).
ஆபிரகாம், இந்த மனநிலையில் சிந்திக்கும் போதுதான் அவரால் தேவனோடு நடக்க முடியும்.
நண்பர்கள் ஒருவரையொருவர் நம்புகிறார்கள், மேலும் அவர்களுக்குள்ளாக ஒரு நேர்மையும் ஒருவரையொருவர் சார்ந்துக் கொள்வதும் காணப்படும். தேவன் தம் பிள்ளைகளை நம்புகிறார், பவுல் வெளிப்படுத்துகிறபடி அதனால்தான் அவர்களுக்கு அற்புதமான பொறுப்புகளை வழங்குகிறார் (1 தீமோத்தேயு 1:12). நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன் என்பதுதான் பவுலின் திடமான நம்பிக்கை (II தீமோத்தேயு 1:12) என்ன ஒரு வியத்தகு பரஸ்பர நம்பிக்கை.
கர்த்தராகிய இயேசுவை நான் என் நண்பனாக அனுபவிக்கிறேனா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்