தேவன் ஏன் நம்மை சோதிக்க வேண்டும்? தேவனுக்கு நம் இதயம், மனம், எண்ணங்கள் மற்றும் பேசப் போகின்ற வார்த்தைகள் என எல்லாம் அறிவாரே. எனவே, சோதனை செயல்முறை தேவையில்லையே என்பதாக கூறி ஒரு விசுவாசி குழப்பமடைந்தார். இதற்கு ஒரு உதாரணமாக; ஒரு பெரிய பாலம் கட்டப்பட்டது, அதில் ஒரு கனரக வாகனத்தின் எடையை வைத்து பாலம் தாங்குமா என்று சோதனை செய்தனர். அதைக் குறித்து அந்த அதிகாரி; பொறியாளரின் வடிவமைப்பு அல்லது பயன்படுத்தப்பட்ட பொருளின் தரம் மீதான அவநம்பிக்கையால் சோதனை நடத்தப்படவில்லை. மேலும் பாலம் விழும் என்ற எதிர்பார்ப்புடனும் சோதனை நடத்தப்படவில்லை. சுமைகளை ஏற்றிச் செல்ல பாலம் சிறந்தது என்பதை நிறுவி அதனை நிரூபிக்க வேண்டும் என்று விளக்கினார். உண்மைதானே இதன் மூலம், இதனை உபயோகிப்பவர்களுக்கு அல்லது பயனாளிகளுக்கு நம்பிக்கையை அளிக்கிறது அல்லவா.
யோபு:
தேவன் தம்முடைய ஊழியக்காரனான யோபுவைக் குறித்து மிகவும் பெருமிதம் கொண்டார், பூமியில் அவனைப் போல ஒருவனும் இல்லை என்றும், உன்னால் முடிந்ததை பார் எனவும் சாத்தானிடம் சவால் செய்தார் (யோபு 1:8). யோபுவை துன்புறுத்தவும், நஷ்டத்தை ஏற்படுத்தவும், வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தவும் சாத்தான் அனுமதி பெற்றான். துன்பம் அல்லது துரதிர்ஷ்டம் என்பது தண்டனையோ அல்லது தீர்ப்போ அல்ல, ஆனால் யோபு பொன்னாக வெளிவருவதற்கான ஒரு செயல்முறை (யோபு 23:10-11).
சரியான மற்றும் முழுமையான:
சோதனை சகிப்புத்தன்மை அல்லது உறுதியை உருவாக்குகிறது என்று யாக்கோபு எழுதுகிறான், இது பரிசுத்தவான்களின் வாழ்வில் எந்த குறைபாடும் இல்லாமல் முழுமை அல்லது நிறைவுக்கு வழிவகுக்கும் (யாக்கோபு 1:3:4).
மதிப்புமிக்க விசுவாசம்:
அழிந்து போகின்ற தங்கமே நெருப்பால் சோதிக்கப்படுகிறது என்றால், அதைக் காட்டிலும் விலையேறப்பெற்ற விசுவாசம் எவ்வளவாக சோதிக்கப்பட வேண்டும் என்று பேதுரு கேட்கிறான். இந்த சோதனையானது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது புகழையும், மகிமையையும், கனத்தையும் விளைவிக்கிறது (1 பேதுரு 1:7).
அன்பு வெளிப்படுகிறது:
இவ்வுலகில் உள்ள துன்பங்கள் சகிப்புத்தன்மையை உருவாக்குகின்றன, இது கிறிஸ்துவைப் போல வளர உதவுகிறது; நல் குணத்தை விளைவிக்கிறது, இது அவருடைய நாமத்திற்காக அவமானம் அல்லது துன்பம் பற்றி வெட்கப்படாத நம்பிக்கையை அளிக்கிறது. தேவ அன்பு நம் இதயங்களில் பரிசுத்த ஆவியின் மூலம் ஊற்றப்படுவதால் இது சாத்தியமாகும் (ரோமர் 5:3-5).
வரம்பு:
உலகில் உள்ள தொல்லைகள், சோதனைகள், இன்னல்கள், உபத்திரவங்கள் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. இருப்பினும், ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் அவரால் எவ்வளவு தாங்க முடியுமோ அதுமாத்திரமே அனுமதிக்கப்படுகிறது. அதிலும் கிருபையுள்ள தேவன் தப்பிக்கும் வழியையும் உருவாக்குகிறார் (1 கொரிந்தியர் 10:13).
ஜெயம்:
இத்தகைய இடையூறுகள் மற்றும் தடுமாற சாத்தானால் உருவாக்கப்பட்ட தடைகள் மீது சீஷர்கள் வெற்றியை அனுபவிக்கும் போது, அவர்கள் மகத்தான வலிமையுடன் படைவீரர்களாக மாறுகிறார்கள்.
எல்லா சோதனைகளையும் எதிர்கொள்ளும் நம்பிக்கை எனக்கு உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்