மேய்ப்பன் தன்மை உள்ள தலைவன்

மோசே இஸ்ரவேல் புத்திரரின் மேய்ப்பன் தன்மை உள்ள தலைவராகக் காணப்படுகிறார் (யாத்திராகமம் 18:13-23). இஸ்ரவேல் புத்திரர் ஒரு சபையாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர், அவர்கள் தேவனுடைய ஜனங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

தேவனே தலைவர்:
தேவனே இஸ்ரவேல் தேசத்தின் தலைவர்.  புதிய ஏற்பாட்டில், திருச்சபை கிறிஸ்துவின் சரீரம் மற்றும் ஆண்டவராகிய இயேசுவே தலை (எபேசியர் 5:23). இஸ்ரவேல் தேசம் தேசங்களில் முதற்பேறானவர்கள் என்று அழைக்கப்பட்டது.  முதற்பேறான சர்வசங்கம் (தேவாலயம்) என்பது திருச்சபைக்கு வழங்கப்பட்ட சொல் (எபிரெயர் 12:23).

 பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும்:
 மோசேக்கு இரட்டை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டியிருந்தது.  அவர் தேவ ஜனங்களுக்காக பரிந்து பேசவும், ஜெபிக்கவும், மன்றாடவும் வேண்டியிருந்தது.  அதில் அவருடைய பரிந்துரை ஜெபம் மிக ஆச்சரியமானது.  எப்படியெனில் தனது மக்களை நேசித்த அவர், ஜீவ புஸ்தகத்தில் இருந்து தனது பெயரை நீக்க கூட தயாராக இருந்தார் (யாத்திராகமம் 32:32). சபையின் மேய்ப்பர்களாகிய போதகர்கள் மோசேயைப் போலவே பரிந்துபேச வேண்டும்.  மோசே தேவனை, அவருடைய பிரமாணம், வாக்குத்தத்தம், நோக்கம் மற்றும் இஸ்ரவேலிடமிருந்து எதிர்பார்ப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.  தேவன் மோசே மூலம் தம்முடைய கட்டளைகளை வெளிப்படுத்தினார்.  ஆண்டவரின் மாபெரும் ஆணையில் கவனம் கொண்ட ஒரு போதகர் தேவனின் வார்த்தையை சிரத்தையாய் கற்பிக்க வேண்டும் (மத்தேயு 28:18-20).

தனியான தலைவர் அல்ல:
மோசே ஆரம்பத்தில் ஒரு தனிமையான தலைவராக செயல்பட்டார்.  ஆரோன், மிரியம், ஊர் மற்றும் யோசுவா போன்ற மற்ற தலைவர்கள் அவருக்கு இருந்தபோதிலும், அவர் எல்லா வேலைகளையும் செய்ய முனைந்தார்.  மக்கள் அவரை நம்பினர் மற்றும் தங்கள் குற்றம் குறைகளைச் சொல்ல நாள் முழுவதும் காத்திருந்தனர்.  மோசேவும் பொறுமையாக, அவர்கள் சொல்வதைக் கேட்டு ஆலோசனைகளை வழங்கினார்.  எத்திரோ இதைக் கவனித்து, தலைவர்களை நியமிக்கவும், பயிற்சியளிக்கவும், அதிகாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் மோசேக்கு அறிவுறுத்தினார்.  அவ்வாறே, போதகர்கள் தங்களுக்கு உதவக்கூடிய மற்றும் செயல்படக் கூடிய தலைவர்களைக் கொண்ட குழுவை உருவாக்க வேண்டும். 

ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி:
தேவனுக்குப் பயந்த, நம்பகமான, லஞ்சத்தை வெறுக்கிற தலைவர்களை மோசே தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.  அவர்கள் தேவ நியமனங்களை, கட்டளைகளைக் குறித்து பயிற்றுவிக்கப்பட வேண்டும்.  அவர்களின் சூழலில் வழிநடத்த அவர்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.  எத்திரோ போலவே, பவுலும் நம்பத்தகுந்த, போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி என தீமோத்தேயுவுக்கு இதேபோன்ற கட்டளையை கொடுக்கிறார், அவர்கள் மற்றவர்களுக்கு உண்மையாக கற்பிப்பார்கள் (2 தீமோத்தேயு 2:2).

பிரதிநிதி அதிகாரம்:
பயிற்சி பெற்றவர்களை ஊழியம் செய்ய அனுமதிக்க வேண்டும்.  அவர்கள் சிறிய குழுக்களாகப் பணியமர்த்தப்பட வேண்டும், பின்னர் அதிக பொறுப்பை ஏற்க வளர வேண்டும். அவர்களை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, தலைவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.

 எனது சூழலில் நான் எப்படிப்பட்ட மேய்ப்பன் தன்மை உள்ள தலைவன்?

Author: Rev. Dr. J .N. மனோகரன்  



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download