ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் அதற்குள் பாவத்தின் தன்மை இருக்கும். ஆனால் ஒரு காலக்கட்டம் வரை பாவம் செய்ய முடியாது, பாவம் செய்யவும் தெரியாது. அப்போது இருப்பது அப்பாவித்தனமான இயல்பு என்று சொல்லலாம். குழந்தை வளர வளர, நல்லது கெட்டது பற்றி அறிந்த பின் பாவம் செய்கிறது. சில அறிஞர்கள் குழந்தைகள் பன்னிரெண்டு வயது பூர்த்தியாகும் வரை, குற்றமற்ற வயதில் இருப்பதாகக் கருதுகின்றனர். இஸ்ரவேலைப் பற்றி ஓசியா மூலம் தேவன் "எதுவரைக்கும் சுத்தாங்கம் அடையமாட்டாதிருப்பார்கள்?" (ஓசியா 8:5) என்று பேசுகிறார்.
உடைந்த உடன்படிக்கை:
இஸ்ரவேலர்கள் தேவனோடு செய்த பரிசுத்த உடன்படிக்கையை மதிக்கவோ, கனப்படுத்தவோ, மரியாதை செலுத்தவோ, கொண்டாடவோ இல்லை. அவர்கள் பயனாளிகள் மாத்திரமல்ல, உண்மையாகவே கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டும், அவர்கள் உடன்படிக்கையை நிராகரித்து முறித்தனர் (ஓசியா 8:1).
பிரமாணத்திற்கு எதிரான கலகம்:
இன்றைய மக்கள் நினைப்பது போல் பிரமாணம் நல்லதல்ல, சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது, அது அவசியமில்லை என நினைத்து இஸ்ரவேலர் தேவனுடைய பிரமாணத்திற்கு எதிராக கலகம் செய்தார்கள் (ஓசியா 8:1). அவர்களுக்கு அது ஒரு விசித்திரமான காரியமாக இருந்தது (ஓசியா 8:12) தேவனை நேசிப்பதற்கும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கும் பதிலாக, அவர்கள் அவருடைய பிரமாணத்தை நிராகரித்து, அவர்களுக்கான அன்பை நிராகரித்தார்கள்.
சொந்தமாக கடவுளை உருவாக்குதல்:
இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட தேசத்திற்கு தேவன் கிருபையுடன் தம்மை வெளிப்படுத்தினார். அவர்கள் உயிருள்ள தேவனை நிராகரித்து, அழியக்கூடிய பொருட்களால் தங்கள் கைகளால் உருவாக்கப்பட்ட உயிரற்ற பொருட்களை கடவுளாக தேர்ந்தெடுத்தனர் (ஓசியா 8:4). இது அறியாமை அல்ல, மாறாக தேவனுக்கு எதிரான வேண்டுமென்றே ஏற்பட்ட கலகம்.
தவறான தலைவர்களை தேர்ந்தெடுத்தல்
தேசம் ராஜாக்களை அல்லது ஆட்சியாளர்களை அல்லது தலைவர்களைத் தேர்ந்தெடுத்தது, அவர்கள் நீதியுள்ளவர்களாகவும் இல்லை, ஜீவனுள்ள தேவனை வணங்குபவர்களாகவும் இல்லை (ஓசியா 8:4).
குழந்தைகளைப் போல ஆகுதல்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து போதித்தார்; "நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத்தேயு 18:3). இஸ்ரவேலர் குற்றமற்றவர்களாக இருந்தார்கள், கர்த்தர் தம்முடைய சீஷர்களை ஒரு குழந்தையைப் போல குற்றமற்றவர்களாக இருக்க அழைக்கிறார். தேவன் தன் சீஷர்களுக்கு புறாக்களைப் போல் கபடற்றவர்களாக இருக்கக் கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 10:16).
புறாக்களைப் போல கபடற்று இருத்தல்:
பொதுவாக, ஒரு புறா அன்பு மற்றும் அமைதியின் சின்னமாக கருதப்படுகிறது. புறாக்கள் பாதிப்பில்லாதவை மற்றும் மென்மையானவையாகவும் கருதப்படுகின்றன. அநீதி, நியாமற்றது, ஒழுக்கக்கேடு என்று எதிரிகள் குற்றம் சாட்டுவதற்கு விசுவாசிகள் எந்த வாய்ப்பையும் கொடுக்கக்கூடாது. புறாவாக அடையாளப்படுத்தும் பரிசுத்த ஆவியின் துணையுடன் ஆவியின் கனியால் நிரப்பப்பட வேண்டும் என்பதும் இதன் பொருள் (கலாத்தியர் 5:22-23).
நான் புறாவைப் போல கபடற்ற நபரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்