இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது, கி.பி. 50-ல் பவுல் துரோவாவில் இருந்தார். அன்றிரவு பவுல் ஒரு காட்சியைக் கண்டார். அந்தக் காட்சியில் மக்கதோனியா நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதன் பவுலிடம் வந்தான். அம்மனிதன் அங்கு நின்று, “மக்கதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவுங்கள்” என்றான். பவுல் அக்காட்சியைக் கண்ட பின்பு கர்த்தருடைய நற்செய்தியை அம்மக்களுக்குக் கூறுவதற்கு சீலா, திமோத்தேயு, லூக்கா ஆகியோருடன் மக்கதோனியா செல்ல முடிவு செய்தார் (அப்போஸ்தலர் 16:8-10). ரோமானிய மாகாணமான மக்கதோனியாவின் கிழக்கு எல்லையில் பண்டைய கிரேக்கத்தில் அமைந்திருந்த பிலிப்பி நகரத்தை பவுல் அடைந்தார். இது துறைமுக நகரமான நியோபோலிஸின் கடற்கரையிலிருந்து சுமார் 10 மைல் தொலைவில் இருந்தது மற்றும் ரோம் நகருக்கு வர்த்தக நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கிரேனைட்ஸின் பண்டைய நகரமானது மகா அலெக்சாண்டரின் தந்தை மக்கதோனியாவின் பிலிப்பின் நினைவாக பிலிப்பி என மறுபெயரிடப்பட்டது. இந்த நகரத்தில் திரேசியர்கள், கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் ஆகிய கலப்பு மக்கள் இருந்தனர். பிலிப்பில் ஒரு மருத்துவப் பள்ளி இருந்தது, அங்கு தான் மருத்துவர் லூக்கா படித்திருக்க வேண்டும். இந்த சபை நல்ல ஒரு சூழலைக் கொண்டிருந்தது; அனைத்து வகுப்பினரையும் உள்ளடக்கியது, உதாரணத்துவமாகவும் அருட்பணிகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் காணப்பட்டது.
ஜெப ஆலயம் இல்லை:
ஓய்வு நாட்களில் ஜெப ஆலய வழிபாட்டில் கலந்துகொள்ளும் ஒழுக்கம் பவுலுக்கு இருந்தது, ஆனால் யூதர்களோ ஜெப ஆலயமோ இல்லை. எனவே, அவர் ஜெபம் செய்யவும் மற்றும் தேவ வார்த்தையைத் தியானிக்கவும் ஆற்றங்கரைக்குச் சென்றார் (அப்போஸ்தலர் 16:13).
பணக்கார பெண்:
ஊதா நிற ஆடை வியாபாரியாகவும், உண்மையான தேவனை வழிபடுபவளாகவும் இருந்த தியத்தீரா நகரத்தைச் சேர்ந்த லீதியாள் என்ற புறஜாதிப் பெண்ணை பவுல் சந்தித்தார். பவுல் அவளிடம் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொண்டபோது விசுவாசத்தோடு ஏற்றுக் கொள்ளும்படி தேவன் அவளுடைய இருதயத்தைத் திறந்தார். பின்னர் அவளும் அவளுடைய குடும்ப உறுப்பினர்களும் ஞானஸ்நானம் பெற்றார்கள். லீதியாள், பவுல் மற்றும் அவரது குழுவினருக்கு தங்குவதற்காக தனது வீட்டைத் திறந்தளித்தாள் (அப்போஸ்தலர் 16:14-15). ஊதா நிற துணி வியாபாரியாக இருந்ததால், அவள் செல்வந்தராகவும் மற்றும் விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் செய்ய ஒரு பெரிய வீட்டைக் கொண்டிருந்தார்.
ஏழை அடிமைப் பெண்:
பேய் பிடித்த ஒரு அடிமைப் பெண் தன் ஜோசியத்தால் தன் எஜமானர்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டிக் கொடுத்தாள். பவுல் அப்பெண்ணிடமிருந்த ஆவியை வெளியேறச் செய்தார்; எஜமானர்கள் எரிச்சலடைந்தனர்; இந்த காரியம்தான் பவுலையும் சீலாவையும் சிறையில் தள்ள முதலில் வழிவகுத்தது (அப்போஸ்தலர் 16:16-24).
நடுத்தர வர்க்க அதிகாரி:
சிறையில், பவுலும் சீலாவும் பாடல் பாடி கர்த்தரைத் துதித்தனர்; திடீரென்று ஒரு பூகம்பம் ஏற்பட்டது. சிறைக் காவலாளி கைதிகள் தப்பியோடிவிட்டார்கள் தனக்கு பாதகம் நேரிடுமே எனப் பயந்து தற்கொலைக்கு முயன்றார்; அதை பவுல் தடுத்தார், பின்னர் நற்செய்தியின் வாயிலாக கர்த்தரை ஏற்றுக் கொண்டு அவரும் அவரது குடும்பத்தினரும் ஞானஸ்நானம் பெற்றார்கள் (அப்போஸ்தலர் 16:25-40).
நற்செய்தி என்பது பணக்காரர்கள், நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகள் அனைவருக்கும் உரியது என்பதை நான் உணர்ந்திருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்