சிலுவை அடையாளங்களாக மோதிரங்களில், காதணிகளில், பதக்கங்களில் டாலர்களாக அணிகலன்களில் பயன்படுத்தப்படுகிறது. அவை பார்ப்பதற்கு அழகாகவும், பிரகாசமாகவும், கவர்ச்சியாகவும் இருக்கின்றன. உலகெங்கிலும் ஆலயம் என்றாலே உயர்ந்த சிலுவை கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது உயர்ந்த சிலுவை கோபுரங்கள் கொண்ட ஆலயத்தை கண்டாலே இங்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வணங்க மக்கள் கூடுவார்கள் என்பதற்கான அறிகுறியாகும். பொதுவாக, சிலுவை சின்னமாகவும் அல்லது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
1) மன்னிப்பின் சின்னம்:
ஆணியால் சிலுவையில் வைத்து அறையும் தண்டனை என்பது ரோமானிய மரணதண்டனை முறையாகும். ரோமானிய சட்டத்தின் கீழ் பிடிக்கப்பட்ட இயேசுவுக்கு சிலுவை மூலம் மரண தண்டனை வழங்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் மரணம் மோசமானதாக இருந்தது என்பதை வேதாகமம் உறுதியாகக் கற்பிக்கிறது. அவர் பாவிகள் சார்பாக மரித்தார். தண்டனையின் அடையாளமாக இருக்கும் சிலுவை மன்னிப்பு மற்றும் ஒப்புரவாகுதலின் அடையாளமாக மாற்றப்படுகிறது. "ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றிலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்"
(கொலோசெயர் 3:13-14).
2) மகிமையின் சின்னம்:
சிலுவை என்பது ஒரு நபர் மிகுந்த உடல் வலியையும் மன வேதனையையும் தாங்க வேண்டிய இடமாகும். ஆண்டவராகிய இயேசு சித்திரவதை செய்யப்பட்டார், அவர் தாகத்தால் நாவறண்டு காணப்பட்டார். உடலின் எடை அவரது சதைகளைத் துண்டித்துக் கொண்டிருந்தது. பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் அவதூறுகள் அவருக்கு மன மற்றும் ஆவிக்குரிய வேதனையைத் தந்தது. அதுமட்டுமல்ல, கடவுளின் கோபத்திற்கு மேலாக, உலகம் முழுமைக்கான பாவத்திற்கான தண்டனை அவர் மீது இருந்தது. "ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்" (பிலிப்பியர் 2:9 - 11).
3) ராஜ்யத்தின் சின்னம்:
கர்த்தராகிய இயேசுவின் வலது பக்கத்தில் தொங்கிய குற்றவாளிகளில் ஒருவன் தம்முடைய ராஜ்யத்தில் ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சி ஒரு இடத்தைப் பெற்றான். "இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்" (லூக்கா 23:42). ராஜாவாகிய கிறிஸ்து நம்மை அவருடைய ராஜ்யத்தில் ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் ஆக்குவதற்காக அனைத்தையும் சகித்தார்.
4) வெற்றியின் சின்னம்:
தேவன் சாத்தானையும் அவனுடைய தீய சாம்ராஜ்யத்தையும் வென்றார். "துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றிசிறந்தார்" (கொலோசெயர் 2:15).
5) வாழ்க்கையின் சின்னம்:
சிலுவையில் மரணம் முடிவடையவில்லை. இது கல்லறையுடன் முடிவடைந்த மற்றொரு ஆளுமையின் வரலாறும் அல்ல. "ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணியுள்ளார்" (எபிரேயர் 10:19-20).
சிலுவையின் முக்கியத்துவம் எனக்குத் தெரிகிறதா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J. N. Manokaran