எதையெல்லாம் ஆண்டவருக்கென்று அரப்பணிக்கின்றோமோ அதெல்லாமே தேவனுக்குரியதே, ஆம் தசமபாகமும் தேவனுக்கு உரியது. தசமபாகம் செலுத்தாமல் வஞ்சிப்பது என்பது தேவனிடமிருந்து கொள்ளையடிப்பதற்கு சமம் (மல்கியா 3:8-10). நன்றியுள்ளவர்கள் கர்த்தருக்கு மகிழ்ச்சியுடன் கொடுப்பார்கள். தேவனைச் சோதிப்பது ஆபத்தானது, அது தன்னைத்தானே அழித்துக் கொள்ளும், தேவ கோபத்தை வரவழைக்கிறது. புதிய ஏற்பாட்டில், கர்த்தராகிய இயேசு ஒரு சீஷரின் நீதி பரிசேயர்களின் நீதியை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று கற்பித்தார். பரிசேயர்கள் பத்து சதவிகிதம் கொடுத்தால், சீஷர்கள் மகிழ்ச்சியுடன் பத்து சதவிகிதத்திற்கு மேல் கொடுக்க வேண்டும் (மத்தேயு 5:20). "உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு" (நீதிமொழிகள் 3:9).
வேதாகமத்திலிருந்து மூன்று எடுத்துக்காட்டுகள்:
ஆகான் பாவம் அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் நுழைந்தபோது நடந்தது, அதே சமயம் அனனியா மற்றும் சப்பீராள் பாவம் சபை சகாப்தத்தின் தொடக்கத்தில் நடந்தது. நியாயாதிபதிகள் காலத்தில் ஏலியின் மகன்கள் பாவம் செய்தார்கள்.
1) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைச் சுதந்தரித்தல்:
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கைப்பற்ற யோசுவா இஸ்ரவேல் தேசத்தை வழிநடத்தியபோது, அவர்கள் எரிகோ நகரத்தை ஆக்கிரமித்தனர். அப்போது யோசுவா அந்த நகரத்தை கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டது என அறிவித்தான், ஆனால் நீங்கள் சாபத்தீடானதற்குமாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள் என்றான் (யோசுவா 6:17). கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் இச்சித்து எடுத்துக் கொண்டான் (யோசுவா 7:21). உண்மையைச் சொல்லப்போனால், ஆகான் தேவனிடமிருந்து கொள்ளையடித்தான்; இறுதியில், அவன் கல்லெறிந்து கொல்லப்பட்டான்.
2) சபை சகாப்தம்:
அனனியாவும் சப்பீராளும் தங்களுடைய காணியாட்சியை விற்று அதில் கிடைத்த பணத்தை தேவனுக்கு அர்ப்பணித்தனர். "ஒருவன் தன் வசத்திலுள்ள நரஜீவனிலாவது, காணியாட்சி நிலத்திலாவது, எதையாகிலும் கர்த்தருக்கென்று சாபத்தீடாக நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்து கொள்ளப்பட்டவைகளெல்லாம் கர்த்தருக்காகப் பரிசுத்தமாயிருக்கும்" (லேவியராகமம் 27:28). ஆனால் அனனியா சப்பீராள் தம்பதியினர் அதில் ஒரு பகுதியை தங்களுக்கென்று வைத்திருந்தார்கள், அப்படியென்றால் தேவனிடமிருந்து கொள்ளையடித்துள்ளனர் (அப்போஸ்தலர் 5:1-11).
3) ஏலியின் மகன்கள்:
ஆசாரியர்களும் லேவியர்களும் பலியிடப்பட்ட மிருகங்களின் பாகங்களைப் பெறும் பாக்கியத்தைப் பெற்றனர். இருப்பினும், ஏலியின் மகன்கள் பொறுமையற்றவர்களாக இருந்தனர், ஆம், சடங்குகள் முடிவதற்குள், பலிபீடத்திலிருந்து இறைச்சித் துண்டுகளை வலுக்கட்டாயமாகப் பறித்தனர். உண்மையில், அவர்கள் தேவனுக்கு சொந்தமானதை கொள்ளையடித்தனர். கர்த்தர் ஏலியிடம் "என் வாசஸ்தலத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என் பலியையும், என் காணிக்கையையும், நீங்கள் உதைப்பானேன்? என் ஜனமாகிய இஸ்ரவேலின் காணிக்கைகளிலெல்லாம் பிரதானமானவைகளைக் கொண்டு உங்களைக் கொழுக்கப்பண்ணும்படிக்கு, நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன் என்கிறார்" (1 சாமுவேல் 2:16-17,29).
நான் கொடுப்பதன் மூலம் தேவனை கனம் பண்ணுகிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokara