ஒரு கிறிஸ்தவ கூட்டத்திற்கு புதியதாக ஒருவர் வருகிறார். ஜெபிக்கும் போது விசுவாசிகள் போதகரோடு இணைந்து ஆமென் ஆமென் என சொல்வதைக் கேட்டு குழப்பமடைந்தார். அதேபோல் போதகர் பிரசங்கித்துக் கொண்டிருக்கும்போது அவரோடு சேர்ந்து ஆமென் சொல்வதையும் பார்த்தார். அப்படியென்றால் ஆமென் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்று கேட்டபோது, அவரை அழைத்த வந்த நண்பர்களால் ஒரு பதிலையும் மற்றும் இந்த வார்த்தையின் அர்த்தத்தையும் சொல்ல முடியவில்லை. ஆமென் என்பதற்கு ‘ஆம் என்றும் அப்படியே ஆகட்டும்’ என்பது அர்த்தமாகும். இந்த வார்த்தை வேதாகமத்தில் பல சூழ்நிலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சத்தியத்தை உறுதிப்படுத்துதல்:
பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் சத்தியத்தை உறுதிப்படுத்த ஆமென் பயன்படுத்தப்படுகிறது. எண்ணாகமம் 5ம் அதிகாரத்தில், சந்தேகம் கொள்ளும் கணவன்மார்கள் குறித்ததான பிரமாணத்தில் ஒரு பெண் மீது சாபம் உச்சரிக்கப்படும்போது வேதாகமத்தில் இந்த வார்த்தை முதலில் பயன்படுத்தப்பட்டது (எண்ணாகமம் 5:22). சட்டத்தை மீறியதற்காக சாபங்கள் உச்சரிக்கப்படும்போது, மக்கள் ஆமென் என்று பதிலளித்தனர், இதை உபாகமம் 27:15-26ல் வாசிக்கலாம். தேவன் பரிசுத்தமானவர் என்றும் அவருடைய தீர்ப்புகள் நீதியானவை என்றும் தேவ ஜனங்கள் ஒப்புக்கொண்டனர். இது தேவனின் உண்மை மற்றும் பண்புகளின் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடாக இருந்தது.
துதி:
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எப்பொழுதும் துதிக்கத்தக்கவர், அவர் எப்பொழுதும் துதிக்கப்படட்டும்! என்ற போது, அனைத்து ஜனங்களும் கர்த்தரைத் துதித்து, “ஆமென்!” என்று சொன்னார்கள் (1 நாளாகமம் 16:36; நெகேமியா 8:6). பழைய ஏற்பாட்டில் ஆமென் என்ற வார்த்தை ஏழு தடவை தேவனைப் புகழ்ந்து நன்றி செலுத்துவதோடு இணைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் வருகை:
புதிய ஏற்பாட்டில் ஆமென் என்பது அப்போஸ்தலனாகிய யோவானால் பயன்படுத்தப்படுகிறது, அவர் நற்செய்தி மற்றும் அவரது கடிதங்கள் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகத்தை ஆமென் என்பதுடன் முடிக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையுடன் தொடர்புடைய வெளிப்படுத்துதலில் ஒன்பது முறை இது பயன்படுத்தப்படுகிறது.
ஆமென் என்னும் தேவன்:
ஏசாயா தீர்க்கதரிசி நம்பகமான மற்றும் உண்மையுள்ள தேவனை 'ஆமென் தேவன் என்று அழைத்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆமென் எனக் குறிப்பிடப்படுகிறார் (ஏசாயா 65:16; வெளிப்படுத்துதல் 3:14).
தேவ வாக்குத்தத்தங்கள்:
தேவனுடைய வாக்குறுதிகள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் “ஆம்” என்றுள்ளது. ஆகவேதான் தேவனுடைய மகிமையை கிறிஸ்துவின் வழியாகச் சொல்லும்போது “ஆமென்” என்கிறோம். ஆம், தேவ வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆம் என்றும் கிறிஸ்துவிற்குள் ஆமென் என்றும் இருப்பதாக பவுல் எழுதுகிறார் (2 கொரிந்தியர் 1:20).
ஜெபம்:
பொதுவாக, கிறிஸ்தவர்கள் தங்கள் ஜெபங்களையும் மனுக்களையும் ஆமென் என்று முடிக்கிறார்கள். அதாவது தேவன் ஜெபங்களுக்கு கிருபையாய் பதிலளிக்கிறார் என்பது இருதய விருப்பத்தின் வெளிப்பாடு தான் ஆமென் என்பதாகும்.
ஒரு எச்சரிக்கை மற்றும் கேலி:
எரேமியா தீர்க்கதரிசி அனனியாவிடம் தவறான தீர்க்கதரிசனத்திற்காக ஆமென் என்று கூறி கேலி செய்தார் (எரேமியா 28:6). எரேமியா தேசத்தின் மீதான தீர்ப்பை அறிவித்துக்கொண்டிருந்தபோது, அவர் சமாதானத்தை முன்னறிவித்தார். எரேமியாவின் எண்ணம் ‘நானும் அது அப்படியே நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்பதே.
நான் அர்த்தம் புரிந்து ஆமென் என்று சொல்லுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்