தேவ பிள்ளைகளைத் தாக்க கண்ணுக்கு தெரிந்தோ தெரியாமலோ பல்வேறு வகையான ஆயுதங்களோடு எதிரிகள் காணப்படுகிறார்கள். எப்படியாயினும் தேவன் நமக்குதான் அருமையான வாக்குத்தத்தை அளித்துள்ளாரே; ஆம், "உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்" (ஏசாயா 54:17).
1) குறிசொல்லும் ஆயுதங்கள்:
மோவாபிய மன்னன் பாலாக் இஸ்ரவேலரைச் சபிப்பதற்காக பிலேயாமை ஏற்பாடு செய்தான். இருப்பினும், பிலேயாம் "யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை" (எண்ணாகமம் 23:23) என்பதை அறிவித்தான்.
2) சதி செய்யும் ஆயுதங்கள்:
யூதர்களை இனப்படுகொலை செய்ய சதி செய்த ஆமானின் ஆயுதம் தோல்வியடைந்தது. ஆமான் மொர்தெகாய்க்குத் தயார் செய்து வைத்திருந்த அதே தூக்கு மரத்தில் போடப்பட்டான் (எஸ்தர் 7: 9)
3) இராணுவ ஆயுதங்கள்:
சீரிய இராணுவம் எலிசாவை சூழ்ந்தபோது, அவன் பயப்படவில்லை. அவனுடைய வேலைக்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி ஜெபித்த போது எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை வேலைக்காரன் கண்டான், தேவன் அவனுடைய கண்களைத் திறந்திருந்தார் (2 இராஜாக்கள் 6:17).
4) மிரட்டல் ஆயுதங்கள்:
எருசலேம் மக்களை அச்சுறுத்துவதற்காக அசீரியாவின் ராஜாவாகிய சனகெரிப் தனது தளபதியான ரப்சாக்கேவை அனுப்பினான். "அதற்கு ரப்சாக்கே: உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் நீரைக் குடிக்கவும் அலங்கத்திலே தங்கியிருக்கிற மனுஷரண்டைக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும் உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார்" ( 2 இராஜாக்கள் 18:27) என்றான். ஆனால் கர்த்தர் "அசீரியா ராஜா இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை" (2 இராஜாக்கள் 19:32) என்ற வாக்குறுதியை எசேக்கியாவிற்கு அளித்தார்.
5) மேட்டிமை ஆயுதங்கள்:
கோலியாத் தனது திறமை, துடிப்பான வேகம், பயிற்சி, ஆயுதங்கள் மற்றும் அனுபவம் ஆகியவற்றில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தான். அவனுக்கு இருந்த மேட்டிமையின் நிமித்தம் போர் விதிகளை மாற்றி ஒற்றை ஆளாக சண்டையிட அழைப்பு விடுத்தான். ஆனால் அவனோ ஒரு முட்டாளை போல மடிந்தான், அவனது சொந்த பட்டயத்தை எடுத்து அவனது தலையையே தாவீது வெட்டிப் போட்டான் (I சாமுவேல் 17:51).
6) மாம்ச ஆயுதங்கள்:
தனக்கு தொந்தரவாக 'மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது', அதை தான் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்பதாக பவுல் எழுதுகிறார். அது தன்னை விட்டு நீங்கும்படி தேவனிடம் கேட்டார், ஆனால் அதற்கு பதிலாக தேவன் அவருக்கு கிருபையை வழங்கினார் மற்றும் பவுலின் பலவீனத்தில் அவரது பலம் பூரணமாய் விளங்கும் என்றும் உறுதியளித்தார் (2 கொரிந்தியர் 12: 7-9).
7) ஏமாற்று ஆயுதங்கள்:
லாபான் யாக்கோபை ஏமாற்ற சென்றபோது கர்த்தரால் கண்டிக்கப்பட்டான். (ஆதியாகமம் 31:24).
பாதுகாக்கும் மற்றும் தற்காக்கும் தேவனுடைய வாக்குத்தத்தை நான் அனுபவிக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran