தேவன் தம் நோக்கத்தை நிறைவேற்ற சூழலுக்கும் நேரத்துக்கும் ஏற்ப மக்களை வெவ்வேறு வழிகளில் பயன்படுத்துகிறார். நல்ல உதாரணங்களாக ஆசாரியன் சகரியா மற்றும் தீர்க்கதரிசி யோவான் ஸ்நானகன். தந்தைக்கும் மகனுக்கும் முக்கியமான ஊழியங்கள் இருந்தன, அவற்றை இரண்டு மாறுபட்ட வழிகளில் தேவன் பயன்படுத்தினார். சகரியா தன் மகன் இந்த ஊழியத்தை தான் செய்ய வேண்டும் என திணிக்கவில்லை என்பதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மாறாக, தேவன் நியமித்த பணியை நிறைவேற்ற யோவான் ஸ்நானகனுக்கு உதவினார்.
ஆலயமும் ஆசாரியனும்:
எருசலேம் ஆலயத்தில் சகரியா ஆசாரியனாக பணியாற்றி வந்தார். பரிசுத்த ஸ்தலத்தில் தூப பலி செலுத்தும் வாய்ப்பும் கிடைத்தது. பல ஆசாரியர்கள் இருந்தபோதிலும், வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே அத்தகைய வாய்ப்பு கிடைக்கும் (லூக்கா 1:8-9). பரிசுத்த ஆலயத்திற்குள் சென்று ஜெபிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
வனாந்தரமும் தீர்க்கதரிசியும்:
சகரியாவின் மகனான யோவான் தனது தந்தைக்கு முற்றிலும் மாறுபட்டவர். அவர் தனது வாழ்விடமாகவும் ஊழியமாகவும் வனாந்தரந்தைத் தேர்ந்தெடுத்தார். ஒருவேளை, சகரியா யோவான் ஸ்நானகனை குழந்தையில் எருசலேம் ஆலயத்திற்கு கொண்டு சென்றதோடு சரி; அதற்கு பின்பு செல்லவில்லை போலும்.
ஆசீர்வாதமும் மனந்திரும்புதலும்:
தூபம் செலுத்தும் ஒரு ஆசாரியனாக, ஆலயத்திற்கு வெளியே கூடியிருந்த தேவ ஜனங்கள் மீது ஆரோனின் ஆசீர்வாதத்தை உச்சரிக்கும் பாக்கியம் அவருக்கு வழங்கப்பட்டது (எண்ணாகமம்: 6:22-27). இருப்பினும், பிரதான தூதன் காபிரியேல் அறிவித்த செய்தியை நம்பாததால் ஊமையாக மாறியதால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. யோவான் மக்களிடமிருந்து மனந்திரும்புதலைக் கோரினார்.
விருப்பமும் ஆயத்தமும்:
மேசியா வர வேண்டும் என்று மற்ற யூதர்களைப் போலவே சகரியாவும் விரும்பினார் அல்லது ஏங்கினார். கர்த்தருடைய வழியை ஆயத்தம் செய்து உலகுக்கு மேசியாவை அறிமுகப்படுத்தும் பாக்கியம் யோவானுக்குக் கிடைத்தது.
பாரம்பரியமும் புதிய மரபுகளும்:
ஆலய நடைமுறைகள், விதிமுறைகள் மற்றும் மரபுகளை சகரியா கண்டிப்பாக பின்பற்றினார். இருப்பினும், யோவான் மரபுகளைப் பின்பற்றவில்லை, மாறாக, யூத மக்களுக்காக ஞானஸ்நானத்தின் புதிய பாரம்பரியத்தை உருவாக்கினார். யூத நம்பிக்கையை ஏற்றுக்கொள்ள விரும்பிய புறஜாதிகளுக்கு ஞானஸ்நானம் பொதுவானது. அதாவது அனைவருமே பாவிகள் தான், எந்த விதத்திலும் யூதர்கள் புறஜாதிகளை விட சிறந்தவர்கள் அல்ல என்பதை விளங்கச் செய்வதற்காக யோவான் யூதர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.
ஊழியமும் அருட்பணியும்:
சகரியா ஆலயத்தில் ஊழியம் செய்தார்; யோவான் பொதுவெளியில் அருட்பணி செய்தார்.
என் அழைப்புக்கு நான் உண்மையுள்ளவனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்