ஏலி ஆசாரியனாக இருந்தபோது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி பெலிஸ்தியர்களால் கைப்பற்றப்பட்டது, கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது (1 சாமுவேல் 4:11; 6:1). பெலிஸ்தர், பயங்கரமான கொள்ளை நோயிலிருந்து தப்பிக்க, ஒரு புதுவண்டில் செய்து, நுகம்பூட்டாதிருக்கிற இரண்டு கறவைப்பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை அவைகளுக்குப் பின்னாகப் போகவிடாமல், வீட்டிலே கொண்டு வந்துவிட்டு, பின்பு கர்த்தருடைய பெட்டியை வைத்து இஸ்ரவேலுக்கு அனுப்பினார்கள். அது பெத்ஷிமேசை அடைந்தது. லேவியர்கள் கர்த்தருடைய பெட்டியைக் கவனமாக எடுத்து, பசுக்களை சர்வாங்க பலியிட்டு, வண்டியையும் எரித்தனர். சில மனிதர்கள் அதனை ஆராய்ந்தனர், தேவன் அவர்களை அடித்தார் (1 சாமுவேல் 6: 10-19). பின்னர் கர்த்தருடைய பெட்டி கீரியாத்யாரீமில் உள்ள அபினதாபின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு அவன் குமாரனான எலெயாசரைப் பரிசுத்தப்படுத்தினார்கள். பின்பதாக கர்த்தருடைய பெட்டி இருபது வருஷங்கள் அங்கேயே இருந்தது (1 சாமுவேல் 7:1-2). பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி, தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும் அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள். மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்த போது அல்லது தடுமாறியபோது, ஊசா பெட்டியைப் பிடித்தான், தேவன் அவனை அங்கேயே அடித்தார், அவன் மரணித்தான். நடந்ததைக் கண்டு தாவீது மிகவும் வருத்தப்பட்டான்; தாவீதிற்கு பயமும் ஏற்பட்டது. பின்பதாக அப்பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலேகொண்டுபோய் மூன்று மாதம் வைக்கப்பட்டு பின்னர் எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டது (2 சாமுவேல் 6: 1-11).
1) நியமனம்:
உடன்படிக்கைப் பெட்டியைத் தோளில் சுமக்குமாறு லேவியர்களுக்கு, குறிப்பாக கோகாத் புத்திரருக்கு மட்டுமே தேவன் கட்டளையிட்டிருந்தார் (எண்ணாகமம் 4:15). ஆனால் தாவீதின் ஆட்கள் போய் லேவியர்களுக்குப் பதிலாக பெட்டியைக் கொண்டு வந்தனர். பழங்காலத்தில் அரசர்களை பல்லக்கில் ஏற்றிச் சென்றனர். அரசர்கள் வண்டிகளில் பயணம் செய்யவில்லை. அவ்வாறே இந்தப் பணிக்காக தங்களைத் தயார்படுத்திய லேவியர்களால் உடன்படிக்கைப் பெட்டி எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
2) எச்சரிப்பு:
இதற்கு முன்பதாக உடன்படிக்கையைப் பெட்டியை ஆய்வு செய்தவர்கள் மரணித்தார்கள்; ஆனால் அந்த எச்சரிக்கையை கவனிக்காமல் விட்டார்கள்.
3) நிந்தனை:
அபினதாபின் குமாரர்கள் பெட்டி தங்கள் வீட்டில் இருந்தபடியால் அதை நன்கு அறிந்திருந்தனர். ஒரு பழமொழி உள்ளது: பரிச்சயம் அவமதிப்பை வளர்க்கிறது. நன்கு அறிந்துக் கொண்டதால் உடன்படிக்கையின் பரிசுத்தம் அவர்களுக்கு புரியவில்லை போலும்.
4) தடுமாற்றம்:
மாடுகள் தான் தடுமாறின, உடன்படிக்கைப்பெட்டி அசைக்கப்படவில்லையே.
5) ஒரு பாடம்:
இந்நிகழ்ச்சிக்காக சுமார் 30000 பேர் கூடியிருந்தனர். ஊசாவை தண்டித்ததன் மூலம், இஸ்ரவேல் தேசம் முழுவதற்கும் கீழ்ப்படிதல் என்ற பாடத்தைக் கர்த்தர் கற்பித்தார்.
நான் தேவப் பணியை அவர் நியமனங்களின்படி அல்லது அவர் நியமித்த முறையில் செய்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்