உல்தாள் (கிமு 640 முதல் 564 வரை) ஒரு தனித்துவமான பெண் தீர்க்கதரிசி, ஏனெனில் ஒரு பெண்ணின் தீர்க்கதரிசனங்கள் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதென்றால் அது உல்தாள் தீர்க்கதரிசியினுடையது மாத்திரமே (2 இராஜாக்கள் 22:13-20; 2 நாளாகமம் 34:22-28). அர்காசின் குமாரனாகிய திக்வாவின் மகனான சல்லுூம் என்பவனின் மனைவி இந்த உல்தாள். சல்லுூம் வஸ்திரசாலை விசாரிப்புக்காரனாக இருந்தான்; அவனுக்கு ராஜாவோடு தினசரி சந்தித்து உரையாடுமளவு உரிமையும் வாய்ப்பும் இருந்தது.
கண்டுபிடிப்பு:
எருசலேம் ஆலயத்தில் நியாயப்பிரமாணப் புத்தகம் கண்டெடுக்கப்பட்டது. ஒருவேளை பொல்லாத அரசர்களிடமிருந்தும் நாட்டைக் கைப்பற்ற எண்ணுபவர்களிடமிருந்து நியாயப்பிரமாணத்தைக் காப்பாற்றுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பான் மூலமாக ராஜாவாகிய யோசியாவிடம் அந்த புஸ்தகத்தைப் பற்றித் தெரிவித்தான். கண்டுபிடிக்கப்பட்ட சுருள் உபாகமம் புத்தகம் என்று அறிஞர்கள் நம்புகிறார்கள். அநேகமாக, ராஜா யோசியா அதிலிருந்து (உபாகமம் 28:16) ஒரு பகுதியைப் படித்திருக்கலாம்
உயர்மட்டக் குழு:
எரேமியாவும் செப்பனியாவும் உல்தாளின் சமகாலத்தவர்களாக இருந்தபோதிலும், யோசியா உல்தாளிடம் ஒரு தூதுக்குழுவை அனுப்ப விரும்பினான் (எரேமியா 1:2; செப்பனியா 1:1). தூதுக்குழுவில் பிரதான ஆசாரியன் இருந்தான். இல்க்கியா தான் அந்த பிரதான ஆசாியன், சாப்பானின் குமாரனாகிய அகீக்காம், மிகாயாவின் குமாரனாகிய அக்போர், சம்பிரதியாகிய சாப்பான், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயா போன்றோரை ராஜா அனுப்பினார். இப்படிப்பட்ட உயர்மட்ட பிரமுகர்கள் அல்லது முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களை அனுப்பியதில் தெரிகின்றது உல்தாளின் ஆவிக்குரிய ஜீவியமும், சமூக நிலைப்பாடும்!
தேவனின் வேலையாள்:
உல்தாள் தேவனால் அழைக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்க்கதரிசியாக நியமிக்கப்பட்டார். வரலாற்றுச் சூழலில் இது கடினமானது. ஆனால் அவளுடைய அழைப்பையும் அதிகாரத்தையும் அவள் அறிந்திருந்ததால், அவள் அந்த தூதுக்குழுவிடம்; “உங்களை என்னிடத்தில் அனுப்பினவரிடத்தில் நீங்கள் போய் உரைக்கிறது என்னவென்றால்…" (2 இராஜாக்கள் 22:15) என்பதாக கூறினாள். மேலும் 'இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார்' என்பதாக குறைந்தது மூன்று முறையேனும் கூறியிருப்பாள் (2 நாளாகமம் 34:23,24,26).
நியாயப்பிரமாண அறிவு:
உலதாள் என்ற பெயரின் அர்த்தம் மரநாய் (weasel) அல்லது 'ஒரு வகையான பாலூட்டி' அல்லது துளையிடும் விலங்கு. அறிஞர்கள் அறிவு/ஞானம் என்ற பெரும் செல்வத்தைத் தேடி துளைக்கிறார்கள். உல்தாள் நியாயப்பிரமாண புத்தகத்தின் அனைத்து வார்த்தைகளையும் நன்கு அறிந்திருந்தாள். உல்தாள் தூதுக்குழுவிடம் பேசியபோது, மோசேயின் பிரமாணத்திலிருந்து குறைந்தது ஆறு வசனங்களை மேற்கோள் காட்டினாள். மோசேயின் பிரமாணத்தைப் பற்றிய அவளது அறிவு, நினைவாற்றல் மற்றும் புரிதலை இது காட்டுகிறது (உபாகமம் 29: 20,23,25,26,28,29).
இஸ்ரவேலுக்கான பங்களிப்பு:
அவளுடைய போதனையும் தீர்க்கதரிசனமும் ராஜா யோசியாவையும் முழு தேசத்தையும் மாற்றியது. ஆம், யோசியா "கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை" (2 இராஜாக்கள் 23:25).
உல்தாளின் கல்லறை:
உல்தாள் எருசலேமில் அடக்கம் செய்யப்பட்டாள். தாவீதின் சந்ததியினரைப் போலவே, அவளது கல்லறையும் எருசலேமில் உள்ளது.
உல்தாள் போன்ற தலைவர்களை/ தீர்க்கதரிசிகளை நமது குடும்பங்களிலும் சபைகளிலும் ஊக்குவிக்கிறோமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்