பல கோழிக்குஞ்சுகளுக்கு புள்ளிகள் மற்றும் இறகுகள் உதிர்வதைக் கண்டு ஒரு பார்வையாளர் அதிர்ச்சியடைந்தார். அதற்கு கோழிப்பண்ணையாளர்; “இந்தக் குஞ்சுகள் ஒன்றையொன்று குத்திக் கொள்ள விரும்புகின்றன. இதனால், அவை காயமடைவதுடன், இறகுகளையும் இழக்கின்றன. இந்தப் பண்ணையில் இது வழக்கம்" என்றார் மிகச் சாதாரணமாக. ஆம், சில நேரங்களில், உள்ளூர் திருச்சபைகளும் இந்த கோழி பண்ணை போல் தெரிகிறது. இந்த சபைகளில் நல்லிணக்கமும் சமாதானமும் காணப்படுவதில்லை. விசுவாசிகள் வழக்கமாக தவறைக் கண்டுபிடிக்கலாம், விமர்சிக்கலாம், புகார் செய்யலாம், முணுமுணுக்கலாம், கிண்டல் செய்யலாம் மற்றும் கண்டனம் செய்யலாம். ஆனால் "நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்" (கலாத்தியர் 5:15) என்பதாக பவுல் எழுதுகிறார்.
பொறாமை:
விசுவாசிகள் மற்ற விசுவாசிகள் மீது பொறாமைப்படலாம். காயீன் தன் நீதியுள்ள சகோதரனான ஆபேல் மீது பொறாமை கொண்டான் (ஆதியாகமம் 4). விசுவாசிகள் சிலர் நல்ல ஆவிக்குரிய காரியங்களில் வளர்ந்து, பக்குவமடைந்து, தங்கள் வரத்தைப் பயன்படுத்தி, கர்த்தருக்காக வைராக்கியமாக இருக்கும்போது, இந்த மக்கள் பொறாமைப்படுகிறார்கள். தங்களையும் ஆயத்தப்படுத்தவும், அதிகாரம் அளிக்கவும் தேவனிடம் விண்ணப்பிப்பதற்குப் பதிலாக, மற்றவர்களைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள். சில விசுவாசிகள் மற்ற தலைவர்களின் பொருளாதார செழிப்பைக் கண்டும் பொறாமைப்படுகிறார்கள்.
சுயம்:
அவர்கள் கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறினாலும், பலிபீடத்தில் தங்களை ஒரு ஜீவனுள்ள பலியாக ஒப்புக் கொடுப்பதாக கூறினாலும், அவர்கள் இன்னும் அகங்காரத்துடன் அல்லது மேட்டிமையுடன் தான் இருக்கிறார்கள் (ரோமர் 12:1). அவர்களின் உள்ளான ஆளுமை அல்லது உள்ளான மனது இன்னும் சுயநலமாக இருக்கிறது, மற்றவர்களை நேசிக்க முடிவதில்லை.
தாழ்வு மனப்பான்மை:
சில விசுவாசிகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து தங்கள் அடையாளத்தையும் கண்ணியத்தையும் பெறவில்லை. சில வரங்கள் அல்லது தாலந்துகள் அல்லது திறன்கள் அல்லது அறிவு இல்லாததால் அவர்கள் மற்ற விசுவாசிகளை விட தாழ்ந்தவர்கள் என்று நினைக்கிறார்கள். எனவே, அவர்கள் மற்றவர்களின் வெற்றியைக் கண்டு கொந்தளிக்கின்றனர்.
மேட்டிமையான எண்ணம்:
இன்னும் சிலர் தாங்கள் மற்றவர்களை விட சிறந்த விசுவாசிகள் என்று பெருமிதம் கொள்கிறார்கள். சிலர் தங்களுடைய ஆவிக்குரிய அனுபவங்கள் அல்லது தாங்கள் கிறிஸ்துவை நீண்டகாலமாக பின்பற்றுபவர்கள் அல்லது குடும்ப பின்னணி அல்லது அவர்கள் கொடுக்கும் காணிக்கைகள் அல்லது இயற்கையான திறமைகள் அல்லது வேறு ஏதேனும் ஒன்றைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள். அவர்கள் மற்றவர்களை இழிவாகப் பார்க்க முனைகிறார்கள்; அவர்களை கிண்டல் மற்றும் கேலியும் செய்வதுண்டு.
உணர்வு ரீதியான காயங்கள்:
சிலர் தாங்கள் பாராட்டப்படாத போதும் அல்லது புறக்கணிக்கப்படும் போதும் உணர்வு ரீதியாக புண்படுத்தப்படுகிறார்கள், எனவே, அவர்கள் மற்றவர்களை காயப்படுத்துகிறார்கள். தங்களின் உணர்வுகள் காயப்படாமல் பக்குவமாக அதை கையாள வேண்டும் என ஜெபிப்பதற்குப் பதிலாக அவர்கள் மற்றவர்களை குத்திக் கிழிக்கிறார்கள், காயப்படுத்துகிறார்கள்.
சமாதானப் பந்தம்:
தேவன் கிருபையுடன் அனைத்து விசுவாசிகளையும் தம் இரத்தத்தால் சுத்திகரித்து, பரிசுத்த ஆவியின் மூலம் தம்முடைய அன்பினால் அவர்களை நிரப்பினார், எனவே சமாதானத்தின் பிணைப்பால் பிடிக்கப்பட்டுள்ளதை நாம் மறவாதிருப்போம்.
*நான் சமாதான பிணைப்பைத் அல்லது நல்ஐக்கியத்தை தேர்ந்தெடுக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்