கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு, எம்மாவு என்னும் கிராமத்துக்கு போகின்ற வழியில் பழைய ஏற்பாட்டிலிருந்து தன்னைப் பற்றி இரண்டு சீஷர்களுக்கு விளக்கினார் (லூக்கா 24:27). வகைமையியல் என்பது வரலாற்றில் ஒரு சிறப்பு உதாரணம் அல்லது சின்னம் அல்லது உருவகத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்ததான நிறைவேற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
1) ஆதாம்:
பவுல் ஆதாமை முதல் மனிதன் என்றும் ஆண்டவராகிய இயேசு இரண்டாம் ஆதாம் அல்லது கடைசி ஆதாம் என்றும் குறிப்பிடுகிறான் (ரோமர் 5:12-21). கீழ்ப்படியாமையின் ஒரு செயலால், பாவமும் மரணமும் உலகில் நுழைந்தன. எல்லா மனிதர்களும் தண்டனைக்கு ஆளானார்கள். கர்த்தராகிய இயேசுவின் கீழ்ப்படிதல், அவரை நம்புகிற அனைவருக்கும் நீதியை அளித்தது.
2) மோசே:
மோசே மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் போது ஆட்சியாளர்களால் குழந்தைகள் கொல்லப்பட்டனர். மோசே மற்றும் கர்த்தராகிய இயேசு இருவரும் தீர்க்கதரிசிகள், உடன்படிக்கை மத்தியஸ்தர்கள், கட்டளைகளை அளித்தவர்கள், அற்புத அடையாளங்களை நிகழ்த்தியவர்கள், தேவனிடம் நேருக்கு நேர் பேசினார்கள், இருவரும் ஒரு மலையில் மறுரூபமக்கப்பட்டனர்.
3) பஸ்கா ஆட்டுக்குட்டி:
இஸ்ரவேல் புத்திரரை மரண தூதனிடம் இருந்து காப்பாற்ற ஆட்டுக்குட்டியின் இரத்தம் கதவுகள் மற்றும் நிலை கால்களில் பயன்படுத்தப்பட்டது. யோவான் ஸ்நானகன் கர்த்தராகிய இயேசுவை தேவ ஆட்டுக்குட்டி என்றும், பரிபூரணமானவர், பாவமோ கறையோ இல்லாதவர் என்றும் அடையாளப்படுத்தினார். ஆம், அவர், "உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" (யோவான் 1:29; எபிரேயர் 9:12).
4) வெண்கலச் சர்ப்பம்:
முணுமுணுத்ததற்காகவும் அவநம்பிக்கையை வெளிப்படுத்தியதற்காகவும் இஸ்ரவேல் தேசம் தண்டிக்கப்பட்டது. தேவன் அவர்களைத் தண்டிக்க கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை அனுப்பினார். கர்த்தர் மோசேயிடம் ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உருவாக்கி அதை ஒரு கம்பத்தில் தூக்கி வைக்கும்படி கட்டளையிட்டார். அதை நோக்கிப் பார்த்தவர்கள் குணமடைவார்கள். ஆண்டவர் இயேசு தம்மை வெண்கலச் சர்ப்பத்திற்கு ஒப்பிட்டார் (எண்ணாகமம் 21; யோவான் 3:14).
5) யோனா:
யோனா கர்த்தராகிய இயேசுவின் மாதிரியாக அவரின் சொந்த வார்த்தைகளில் அறிவிக்கப்பட்டார் (மத்தேயு 12:39-41).
6) பிரதான ஆசாரி:
அவர் மெல்கிசேதேக்கைப் போன்ற பிரதான ஆசாரியர், அவர் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்
(எபிரெயர் 2:17; 4:15-16; 5:10; 7:12; 9:12).
7) சமூகதப்பம் மற்றும் குத்துவிளக்கு:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஜீவ அப்பமாகவும், உலகத்தின் வெளிச்சமாகவும் இருக்கிறார் என்பதை ஆலயத்தின் உள்ள இந்த இரண்டு கூறுகளும் காட்டுகின்றன.
கிறிஸ்துவின் அற்புதமான இந்த வெளிப்பாட்டை நான் புரிந்துகொள்கிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokaran