ஒரு வெற்றிகரமான கால்பந்து வீரர் தனது மனமும், உள்ளமும், ஆசையும் ஒரு கோல் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் நிறைந்திருக்கிறது என்பதாக ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். ஆம், அதற்காக தானே பயிற்சி எடுத்துக்கொண்டார். கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் கவனம், அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி ஆகியவை தேவைப்படுகின்றன.
மனம்:
கால்பந்து வீரர் எப்போதும் ஒரு விளையாட்டு அரங்கையும், அந்த இலக்கை நோக்கி எப்படி முன்னேறுகிறார் என்பதையும் மனதில் கற்பனை செய்து கொள்கிறார். அவரது எண்ணம் கண்ணோட்டம் எல்லாம் எப்போதும் பந்தை கோல்போஸ்ட்டை நோக்கி எடுத்துச் சென்று கோல் அடிப்பதிலேயே இருக்கிறது. அதுபோல ஒரு கிறிஸ்தவ மனம் மேலே உள்ள விஷயங்களைப் பற்றிய தரிசனம் மற்றும் தேவனை மதிக்கும் எண்ணங்களால் நிரப்பப்பட வேண்டும் (கொலோசெயர் 3:1; பிலிப்பியர் 4:8). வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கையைப் பெறுவதற்கு, புதுப்பிக்கப்பட்ட செயலூக்கமுள்ள மனம், வெற்றி அல்லது ஜெயங்கொள்ளும் மனநிலை அவசியம். ஆனால் சாத்தானுடனான பெரும்பாலான போர்கள் மனதில் நிகழ்கின்றன.
தேக ஆராேக்கியம்:
கால்பந்து வீரர் தனது மனதை மட்டுமல்ல, உடலையும் பயிற்றுவித்தார். ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலமும், தகுந்த உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலமும், மைதானத்தில் அமர்வுகளைப் பயிற்சி செய்வதன் மூலமும் உடல் ஆரோக்கியம் பெறும். ஒரு விசுவாசியின் சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயம். ஆகையால் சரீரத்தை சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும், பரிசுத்தமாகவும், தேவனுக்கு தகுதியாகவும் வைத்திருக்க வேண்டும் (1 கொரிந்தியர் 6:19-20). ஆரோக்கியத்தை உதாசீனப்படுத்துவது ஒரு சீஷனுக்கு ஏற்றதல்ல.
திறன் பயிற்சி:
முழு கால்பந்து மைதானத்தில் எந்த நிலையிலிருந்தும் நேரடியாக இலக்கை அடிக்க முடியும் என்றும் அவர் பகிர்ந்து கொண்டார். அவர் எந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தாலும் அல்லது எந்த இடத்தில் இருந்தாலும், பந்து வலையில் படும் வகையில் அவர் உதைக்க முடியும். பல மணி நேரம், அவர் இதைப் பயிற்சி செய்தார், இதனால் அவரது உதை முழுமையடைந்தது. அதுபோல ஒரு சீஷன் எங்கிருந்தாலும், அவன் பூமியின் உப்பாகவும், உலகத்தின் ஒளியாகவும் இருக்கிறான் (மத்தேயு 5:14-16). எல்லா சூழ்நிலைகளிலும், ஒரு சீஷனுக்கு ராஜ்யத்திற்கும் தேவனுடைய நீதிக்கும் முன்னுரிமை உண்டு (மத்தேயு 6:33).
விடாமுயற்சி:
இறுதிவரை நிலைத்திருப்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் (மத்தேயு 24:13-14). விளையாட்டின் நேரம் முடியும் வரை அல்லது பந்தயம் முடியும் வரை ஒரு விளையாட்டு வீரருக்கு வலிமையும் சகிப்புத்தன்மையும் இருக்க வேண்டும். விளையாட்டின் போது மைதானத்தை விட்டு வெளியேறுவதும் பந்தயத்தின் போது நிறுத்துவதும் விருப்பமல்ல. யூதாஸ் ஸ்காரியோத்தைப் போலவே கடைசி நிமிடங்களில் ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம் அல்லது திசைதிருப்பப்படலாம்.
என் வாழ்க்கையில் எனக்கு சரியான கவனம்/நோக்கம் இருக்கிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்