சமீப காலங்களில், பள்ளிகளில் வேதாகமம் படிக்கப்படுவதற்கு அல்லது கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. வேதாகமம் ஒரு மத புத்தகம், அதை பள்ளிகளில் கற்பிக்கக்கூடாது என்கின்றனர்; ஏனெனில் பரிசுத்த வேதாகமம் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று மக்கள் நினைக்கிறார்கள் என்பது வருந்தத்தக்கதே.
1) வெளிப்பாடு:
கடவுள் என்பவர் மனித மனதின் விளக்கத்திற்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்ட ஒரு எல்லையற்ற உயிருரு. மனித அறிவுக்கு கடவுளைக் கண்டறியும் திறன் இல்லை. கடவுளை அறிய கற்பனையும் கனவுகளும் போதாது. அப்படியானால், கடவுள் தன்னை வெளிப்படுத்துவது இன்றியமையாததாக அல்லது முக்கியமானதாகிறது, இது வெளிப்பாடு என்று அழைக்கப்படுகிறது. கடவுள் தம்மை மூன்று வழிகளில் வெளிப்படுத்தியுள்ளார்; இயற்கை, வார்த்தை (வேதாகமம்) மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து (ரோமர் 1:20; யோவான் 5:39; எபிரெயர் 1:1-2).
2) தரநிலைகள்:
தேவனுடைய தராதரங்களையும் மனிதர்களிடமிருந்து எதிர்பார்ப்புகளையும் வேதாகமம் நமக்கு வழங்குகிறது. பத்து கட்டளைகள் தேவனால் எழுதப்பட்டது மற்றும் மனிதகுலத்தை நியாயந்தீர்க்க தேவனுக்கு அது போதுமானது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மலைப்பிரசங்கத்தில் பத்துக் கட்டளைகளை விளக்கினார் (யாத்திராகமம் 20: 2-17; மத்தேயு 5 6-7).
3) சத்தியம்:
வேதாகமம் மனிதகுலத்திற்கு வெளிப்படுத்தப்பட்ட பூரணமான உண்மை மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சத்தியத்தின் உருவம் (யோவான் 17:17; 14:6).
4) இரட்சிப்பின் வழி:
எல்லா கலாச்சாரங்களிலும் மொழிகளிலும், கடவுளை அறியவும், கடவுளுடன் ஒப்புரவாகவும் அல்லது மீண்டும் இணைக்கப்படவும் ஒரு திட்டவட்டமான விருப்பம் உள்ளது. ஆனால், அந்தத் தேடல்களும், ஆசைகளும், விருப்பங்களும் பலனைத் தரவில்லை. தேவன் மனிதர்களின் இதயங்களில் நித்தியத்தை வைத்திருக்கிறார், அது அவரால் மட்டுமே நிரப்பப்பட முடியும் என்று வேதாகமம் கூறுகிறது. "அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும்கிரியையை மனுஷன் கண்டுபிடியான்" (பிரசங்கி 3:11). அந்த நோக்கத்திற்காகவே சுவிசேஷம் எழுதப்பட்டது என்று யோவான் உறுதியாகக் கூறுகிறார். "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது" (யோவான் 20:30-31).
5) வாழ்க்கையின் நோக்கம்:
கடவுள் ஏன் மனிதர்களைப் படைத்தார்? தேவன் தன்னை மகிமைப்படுத்த மனிதர்களைப் படைத்தார் என்று வேதாகமம் கற்பிக்கிறது. "நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து,....." (ஏசாயா 43:7). அதாவது தேவனை அறிந்து, அவரை அறியச் செய்து, ஆண்டவரை ஆராதிக்க வேண்டும்.
6) ஆரம்பம்:
கடவுள் எப்படி வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்பதையும் வேதாகமம் கற்பிக்கிறது. இருக்கிறவராகவே இருக்கும் தேவன் தனது கட்டளையின் மூலம் உலகத்தின் அனைத்தையும் சிருஷ்டித்தார். அவருக்கு மூலப்பொருட்கள் என எதுவும் தேவையில்லை.
7) நித்தியம்:
நித்தியமான தேவன் மனிதர்களை நித்திய நித்தியமாக வாழவே படைத்தார். நீதிக்கு பின்பதான வாழ்க்கையைப் பற்றி, அதாவது பரலோகம் மற்றும் துன்மார்க்கத்திற்கான நரகம் பற்றி வேதாகமம் வெளிப்படுத்துகிறது.
வேதாகமத்தைப் படிப்பதன் மூலம் நான் தேவ வார்த்தைகளைக் கவனித்து அறிகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்