ஒரு போதகர் தம் சபை விசுவாசிகளுக்கு தான் உடல்நலம் சரியில்லாமல் மரண தருவாயில் இருக்கும் போது, வேறு ஒரு இரத்தம் ஏற்றப்பட்டது என்றும், அவரது உடலில் செலுத்தப்பட்ட அந்த இரத்தம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் சிந்திய இரத்தம் எனக் கூறினார். எனவே, தனக்கு அழிவில்லை என்றும் தான் கிறிஸ்துவின் இரத்த சகோதரன் என்றும் கூறினார். ஒரு சிலர், வேதாகமத்தின் வெளிச்சத்தில் அது சரியல்ல என்று உணர்ந்தனர். இருப்பினும், அவரைப் பின்பற்றியவர்களில் பலர் உறுதியாக இருந்தனர், அதிலும் கிறிஸ்தவர்கள் ஒரு பிரசங்கியை நியாயந்தீர்க்கக்கூடாது என்று கூறிக் கொண்டார்கள்.
பகுத்தறிவு என்பது ஒரு ஆவிக்குரிய வரம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உடனடியாக நியாயந்தீர்க்காமல், கவனித்து, பரிசேயர் சதுசேயர்களின் புளித்தமாவைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்கவும், காலங்களைப் பகுத்தறிந்து கொள்ளவும் கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 7:1; 16:3, 6). அதுபோல விசுவாசிகள் நிதானமாக பகுத்தறிய வேண்டும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ஆனால் மற்றவர்களை நியாயந்தீர்க்கவோ அல்லது கண்டனம் செய்யவோ கூடாது. பரிசுத்த ஆவியின் வரங்களில் ஒன்று சாத்தானின் நுட்பமான உத்திகளைக் கண்டறிவதாகும் (1 கொரிந்தியர் 12:10).
அக்கறை:
பகுத்தறிவு என்பது கவனமும் அக்கறையும் கொண்டது. தீர்ப்பு என்பது அன்பும் அக்கறையும் இல்லாதது.
பணிவு:
பகுத்தறிவு மனத்தாழ்மையுடன் தொடர்புடையது. அதே சமயம் நியாயத்தீர்ப்பு பெருமை மற்றும் ஆணவத்தின் வெளிப்பாடாகும். நாம் மற்றவர்களை நியாயந்தீர்க்கும்போது, அறுதியும்இறுதியுமான நீதியுள்ள நியாயாதிபதியான தேவனின் நிலைக்கு வந்து விடும் ஆபத்து உள்ளது.
கவனம்:
பகுத்தறிவு என்பது நன்றாகக் கேட்பது மற்றும் கவனிப்பதன் பலனாகும். தீர்ப்பளிக்கும் மனப்பான்மை கொண்ட ஒரு நபர் ஒருபோதும் செவிசாய்த்து கவனிக்கவே மாட்டார் மற்றும் தான் நினைப்பதை மாத்திரமே வலியுறுத்துகிறார்.
சுருக்கம்:
தீர்ப்பு என்பது ஒரு சுருக்கமான யோசனை மற்றும் மக்கள் மற்றும் அவர்களின் சூழலுடன் தொடர்பு கொள்ளாது. பகுத்தறிவு என்பது, யோசனையை மக்கள் மற்றும் சூழலுடன் இணைக்கிறது.
கட்டுறுதி:
தீர்ப்புவாதம் என்பது கடினமானது மற்றும் சரியானதாக இருப்பதற்காக எதையாவது சரியானதாகக் கருதுகிறது. பகுத்தறிவு என்பது தேவனைக் கனப்படுத்துவதற்கும் மக்களை நேசிப்பதற்கும் எது சரியானது என்பதைத் தேடுகிறது.
ஆபத்து:
தீர்ப்பு ஆபத்தை எதிர்பார்க்கிறது மற்றும் ஆபத்து நடக்க வேண்டும் என்று விரும்புகிறது. பகுத்தறிவு வரவிருக்கும் ஆபத்தைப் பற்றி எச்சரிக்கிறது மற்றும் சரியான திசையில் மாற்றுவதற்கும் திரும்புவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
மற்றவர்கள் மேல் ஆளுகை:
பிறரைக் கண்காணித்து மேலாதிக்கம் செலுத்துவதன் மூலம் பிறர் மீது தீர்ப்பளிக்கிறது. பகுத்தறிவு என்பது மக்களை அடையாளம் கண்டு அவர்களை வழி நடத்திச் செல்வதாகும்.
ஆவிக்குரிய பக்குவம்:
பகுத்தறிவு என்பது ஆவிக்குரிய பக்குவத்தின் பலனாகும், அதே சமயம் தீர்ப்பு ஒரு நபரின் பக்குவமற்றத் தன்மையை வெளிப்படுத்துகிறது.
யாரையும் தீர்ப்பளிக்காத, ஆனால் பகுத்தறியும் ஆவிக்குரிய முதிர்ச்சி என்னிடம் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்