சில கலாச்சாரங்கள் கணவனைக் கடவுளாகக் கற்பிக்கின்றன, எனவே அவன் தனது மனைவிக்காக எதுவும் செய்ய வேண்டியதில்லை, ஆனால் அவள் அவனை வணங்கி சேவை செய்ய வேண்டும். சொத்து உரிமையாளர்கள் கணவனாகவும், மனைவி உடைமைகளில் ஒன்றாகவும் இருப்பதுண்டு. சிலவற்றில், மனைவிக்கு எந்த உரிமையும் இல்லாமல் முழு குடும்பத்திற்கும் அடிமையாக இருப்பதுண்டு. ஆனால், கணவர்கள் தங்கள் மனைவிகளை நேசிக்க வேண்டும் என்று வேதாகமம் கற்பிக்கிறது (எபேசியர் 5:33). ஐந்து வழிகளில் கணவன் தன் மனைவியிடம் அன்பைக் காட்ட முடியும்.
தேவைகளைச் சந்தித்தல்:
கணவன் தன் சொந்த மாம்சத்தை எப்படி போஷித்துப் பாதுகாக்கிறானோ அதுபோல தன் மனைவியையும் போஷித்து காக்கும்படி பவுல் அறிவுறுத்துகிறார் (எபேசியர் 5:29). அதாவது, உணவு, உடை, போஷாக்கு மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் வழங்க வேண்டும். அப்படி கவனிக்காத கணவன் அவிசுவாசிகளை விட மோசமானவன் (1 தீமோத்தேயு 5:8) என வேதாகமம் கூறுகிறது. வருத்தம் என்னவெனில், சிலர் சம்பாத்தியம் பண்ணாமல், தங்கள் மனைவிகளை வெளியில் வேலை செய்து சம்பாதிக்கவும், எல்லா வீட்டுக் கடமைகளையும் செய்யுமாறு அழுத்தம் கொடுக்கிறார்கள்.
பாதுகாப்பு அளித்தல்:
கணவன் தன் மனைவியை உடல் ரீதியான துன்பங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். வாய்மொழி துஷ்பிரயோகம், மன வேதனை மற்றும் உணர்ச்சி காயங்களிலிருந்து பாதுகாப்பதற்கும் கணவனுக்கே பொறுப்பு உள்ளது. கணவர்கள் மனைவிகளை பலவீனமான பாத்திரங்களாகக் கருத வேண்டும், அவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்கள். ஆபத்து ஏற்பட்டாலும், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும், கணவன் மனைவியைக் காப்பாற்ற வேண்டும் (1 சாமுவேல் 30:5,18).
தயவு பாராட்டல்:
ஒரு கிறிஸ்தவர் சுயநலமாகவோ அல்லது தன்னை மட்டுமே நேசிப்பவனாக இருக்க முடியாது. மாறாக, ஒரு கணவன் தன் மனைவியைப் பிரியப்படுத்த முயல வேண்டும். தேவையற்ற மற்றும் பாவமான காரியங்களைச் செய்து சந்தோஷப்படுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. மனைவி தனது அழைப்பில் சிறந்து விளங்கவும், இயற்கையாகவே அவளுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரவும் மற்றும் ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்தவும் மற்றும் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது என அவளை ஊக்குவிக்க வேண்டும்.
ஜெபித்தல்:
சில கலாச்சாரங்கள் மனைவி தன் கணவனுக்காக ஜெபிக்கவும், பரிந்து பேசவும், தியாகம் செய்யவும் கட்டாயப்படுத்துகின்றன. அதற்கென பிரத்யேக விரத விழாக்கள் கூட உண்டு. இருப்பினும், ஈசாக் தன் மனைவி ரெபெக்காளுக்காக ஜெபம் செய்தார் (ஆதியாகமம் 25:21). கணவன்மார்கள் தங்கள் மனைவிகளுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகிறார்கள், கட்டளையிடப்படுகிறார்கள், பணியமர்த்தப்படுகிறார்கள். குடும்ப பலிபீடம் குடும்பங்களின் தினசரி ஒழுங்குமுறையாக இருக்க வேண்டும்.
மேய்ப்பனாக இருத்தல்:
கணவர் குடும்பத்தின் போதகராக அல்லது மேய்ப்பனாக இருத்தல் வேண்டும். சாத்தானின் தீய தாக்குதல்களிலிருந்து குடும்பத்தைப் பாதுகாக்கும் ஒரு அற்புதமான பொறுப்பு இதில் அடங்கும். சாத்தான் சந்தோஷத்தைக் கொள்ளையடிக்கவும், அன்பைக் கொல்லவும், குடும்பத்தை அழிக்கவும் விரும்புகிறான். கணவனோ விழிப்புடனும் உஷாராகவும் இருப்பதன் மூலம், தன் மனைவி மற்றும் பிள்ளைகளை எல்லாவித பொல்லாத சக்திகளிலிருந்தும் மறைத்து தெய்வீக பாதுகாப்பை வழங்குகிறான்.
என் குடும்பம் தெய்வீக அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் கொண்ட குடும்பமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்