இரண்டாவது முறையாக, நவீன மருத்துவ வரலாற்றில், மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையத்தில், ஒரு மனிதனுக்கு மரபணு பொறியியல் செய்யப்பட்ட பன்றி இதயம் பொருத்தப்பட்டுள்ளது (மேகன் மோல்டெனி, STAT செய்தி, செப்டம்பர் 22, 2023). பன்றி இதயத்தைப் பொருத்திய முதல் மனிதன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்குள் இறந்தார். ஒரு பன்றி இதயம் ஒரு நபரின் உடல் ஆயுளை நீட்டிக்க உதவும் ஆனால் ஆவிக்குரிய மாற்றத்தை கொண்டு வர முடியாது. மனித இதயம் வஞ்சகமானது மற்றும் மிகவும் பொல்லாதது என்று எரேமியா தீர்க்கதரிசி எழுதுகிறார் (எரேமியா 17:9-10). எனினும், தேவன் நமக்கு ஒரு புதிய இருதயத்தைக் கொடுக்கிறார் (எசேக்கியேல் 36:26).
அன்பான இருதயம்:
தேவன் தம்முடைய சீஷர்களை முழு இருதயத்தோடும், முழு பலத்தோடும், முழு ஆத்துமாவோடும் தன்னை நேசிக்கவும், மற்றவர்களையும் நேசிக்கவும் அழைக்கிறார். தேவன் நேசிப்பது போல் மற்றவர்களை நேசிக்க அவர் தம்முடைய அன்பை நம் இருதயங்களில் ஊற்றுகிறார்.
உணர்திறன் இருதயம்:
மனித இருதயம் பரிசுத்த ஆவிக்கு உணர்ச்சியற்றதாக இருக்கலாம். மேலும், மற்றவர்களின் தேவைகள், விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் என எதைப்பற்றியும் அறியாமல் இருக்கலாம்.
தாழ்மையான இருதயம்:
தேவ கிருபை மனிதனை தாழ்மையான இதயத்துடன் நிரப்புகிறது. மாறாக, தேவன் இருதயத்தில் உள்ள பெருமைக்கு எதிரானவர் (நீதிமொழிகள் 16:5-7).
நன்றியுள்ள இருதயம்:
தேவபக்தி உள்ள சீஷர்கள் எப்பொழுதும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள், எல்லாவற்றுக்கும் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறார்கள் (1 தெசலோனிக்கேயர் 5:18).
*உண்மையான இருதயம்:*
தேவன் நேர்மையுள்ள மக்களை நேசிக்கிறார். இருதயத்தின் உத்தமத்தோடு, தாவீது இஸ்ரவேல் தேசத்தை மேய்த்தான் (சங்கீதம் 78:72).
மகிழ்ச்சியான இருதயம்:
மகிழ்ச்சியான இருதயம் நல்ல மருந்து. “மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்” (நீதிமொழிகள் 17:22). சிறையில் அடைக்கப்பட்ட பவுல் சிறைக்கு வெளியே உள்ள விசுவாசிகளை எப்பொழுதும் கர்த்தருக்குள் சந்தோஷமாக இருக்க சொல்கிறார் (பிலிப்பியர் 4:4).
தாராள இருதயம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், சுரண்டப்பட்டவர்கள், துன்புறுத்தப்பட்டவர்கள் மற்றும் உபத்திரவபடுபவர்களிடம் தாராளமாக இருக்கிறார்கள்.
வருந்திய இருதயம்:
நொறுங்கிய மற்றும் உடைந்த இதயத்தை தேவன் வெறுக்க மாட்டார், புறக்கணிக்க மாட்டார் (சங்கீதம் 51:17). யாருடைய இருதயம் நொறுங்கி, தேவனுடைய வார்த்தையைக் கேட்டு நடுங்குகிறதோ, அவர்களுக்குக் கர்த்தர் கிருபையாக இருக்கிறார் (ஏசாயா 66:2-3).
நோக்கமுள்ள இருதயம்:
தானியேல் அரசனுடைய உணவால் தன்னைத் தீட்டுப்படுத்தக் கூடாது என தன் இருதயத்தில் நோக்கம் கொண்டான் (தானியேல் 1:8). தேவ பிள்ளைகள் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றி வாழ வேண்டும். அதற்கு தீர்க்கமான இருதயம் தேவை.
கீழ்ப்படிதலுள்ள இருதயம்:
கர்த்தரை நேசிப்பவர்கள் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்கள் (யோவான் 14:15).
சுத்தமான இருதயம்:
தாவீது ராஜா சுத்தமான இருதயத்தையும் உறுதியான ஆவியையும் வேண்டிக்கொண்டான் (சங்கீதம் 51:10).
எனக்கு புதிய இருதயம் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்