தேவன் ஆதாமையும் ஏவாளையும் தம் சாயலில் சிருஷ்டித்தார். தேவன் தன் சிருஷ்டிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தாவீது ராஜா மிக அழகாக கூறுகிறார்; “நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள். அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது" (சங்கீதம் 139:13-16). சிருஷ்டிப்பில் அல்லது பிறப்பில் எவ்வித படிநிலையும் இல்லை. ஆனால் கலாச்சாரம் சாதி, குலம் மற்றும் கோத்திரம் என படிநிலைகளை உருவாக்குகிறது. கிறிஸ்தவர்கள் தேவனுடைய பார்வையை எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் நிரூபிக்க வேண்டும் அல்லது பிரதிபலிக்க வேண்டும்.
1) பாகுபாடு அல்லது வேற்றுமை வேண்டாம்:
தேவன் எல்லா மனிதர்களையும் சமமாகப் படைத்திருப்பதால், கலாச்சாரங்கள், நிறுவனங்கள் மற்றும் தேசங்களால் நடைமுறைப்படுத்தப்படும் பாகுபாடு என்பது இருக்க முடியாது. யோபு சொல்கிறார்; “தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டுபண்ணினவர் அவளையும் உண்டுபண்ணினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்திலே எங்களை உருவாக்கினார் அல்லவோ?" (யோபு 31:15).
2) உரிமைகள் மறுக்கப்பட வேண்டாம்:
சில மனிதர்கள் அதிகாரம் பெற்றவர்களாக ஆன பின்பு மற்றவர்களின் உரிமைகளை மறுப்பவர்களாக இருக்கிறார்கள். கல்வி அல்லது வேலை வாய்ப்பு அல்லது வழிபாட்டு உரிமை என எல்லாம் மறுக்கப்படுகிறது. எல்லாத் தொழில்களிலும் வாய்ப்புகளை பதுக்கும் நிலை காணப்படுகிறது. அவர்களின் பெயர்களையோ அல்லது குடும்பப்பெயர்களையோ அறிந்துகொள்வதின் மூலம் செல்வாக்கு மிக்கவர்கள் அவர்களின் உரிமைகளை மறுக்கிறார்கள்.
3) வஞ்சகம் வேண்டாம்:
மக்கள் வறுமையிலும் நிரந்தர அடிமைத்தனத்திலும் வஞ்சிக்கப்படுகிறார்கள். சாதியின் பெயரால் மிகவும் தாழ்வான வேலைகளைச் செய்து பிற சாதியினருக்கு சேவை செய்ய ஏமாற்றப்படுகிறார்கள்.
4) வெளியேற்ற வேண்டாம்:
பல கனிம வளங்கள் நிறைந்த நிலங்களில் பழமையான ஏழை மக்கள் வாழ்கிறார்கள், கனிமங்கள் அல்லது வைரங்கள் சுரங்கப்படுத்துவதற்காக அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அணைகள் கட்டுவது போன்ற வளர்ச்சி திட்டத்தின் கீழ், அவர்களுக்கான இழப்பீடு இன்றி மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.
5) வெறுக்க வேண்டாம்:
பலர் அவர்களின் அம்சங்கள் அல்லது நிறம் அல்லது உயரம் அல்லது செயல்களுக்காக கேலி செய்யப்படுகிறார்கள் மற்றும் கிண்டல் செய்யப்படுகிறார்கள்.
தேவனை நேசிப்பதாகக் கூறுபவர்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள், பெற்றோர், உறவினர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், நண்பர்கள், அந்நியர்கள் மற்றும் எதிரிகள் என மற்றவர்களை வெறுக்க முடியாது (1 யோவான் 4:20; மத்தேயு 5:44).
நான் அனைவரையும் கண்ணியமாக/சமமாக நடத்துகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran