செயலற்ற கோபம், கொந்தளிப்பான கோபம், பயம் சார்ந்த கோபம், விரக்தி சார்ந்த கோபம், வலி சார்ந்த கோபம், தீராத கோபம், சூழ்ச்சித்திறனுடன் கையாளும் கோபம், அதிகப்படியான கோபம், உடலியல் கோபம் மற்றும் நேர்மையான கோபம் என உளவியலாளர்கள் கோபங்களின் வகைகளை ஒரு நீண்ட பட்டியலாகக் கொண்டுள்ளனர். மோசே தனது வாழ்நாள் முழுவதும் கோபத்தை சமாளிக்க வேண்டியிருந்தது. அவன் வாழ்க்கையில் மூன்று சந்தர்ப்பங்களில் கோபமாக நடந்தது உண்டு.
நியாயமான கோபம்:
எபிரேயர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர். இஸ்ரவேலர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது மோசேயால் பார்வையாளனாக மட்டும் இருக்க முடியவில்லை. ஒரு எபிரேயனை அநியாயமாக ஒடுக்கிய ஒரு சந்தர்ப்பத்தில் மோசே ஒரு எகிப்தியனைக் கொன்றான், அதாவது கோபத்தில் அவனைக் கொன்றான் (யாத்திராகமம் 2:11-12). "மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே" (யாக்கோபு 1:20). துரதிர்ஷ்டவசமாக, மோசே நாற்பது வருடங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிருந்தது; அவனால் இஸ்ரவேலைக் காப்பாற்றவோ அல்லது எகிப்திய சட்டம் மற்றும் அரசியல் உயரடுக்கிலிருந்து தன்னைக் காப்பாற்றவோ முடியவில்லை.
மறுமொழியளிக்கும் அல்லது எதிர்வினையாற்றும் கோபம்:
மோசே சீனாய் மலையில் தேவ சமூகத்தில் நாற்பது பகலும் நாற்பது இரவும் உபவாசம் இருந்தான். அவன் பத்துக் கட்டளைகளைப் பெற்றான். அப்போது காத்திருந்த யோசுவாவை தன்னுடன் அழைத்துக் கொண்டு மலையடிவாரத்திற்கு வந்தான். இஸ்ரவேலர்கள் தங்கத்தால் சிலை செய்து அதை வணங்கி பாவம் செய்ததாக ஆண்டவர் ஏற்கனவே அவனிடம் கூறினார். சிலையைச் சுற்றி இஸ்ரவேலின் கட்டுப்பாடற்ற ஒழுக்கக்கேடுகளைக் கண்ட மோசே கோபத்தில் கற்பலகைகளை உடைத்தான் (யாத்திராகமம் 32:19).
கலகக்கார கோபம்:
தண்ணீர் வரவைக்க கன்மலையிடம் பேசும்படி தேவன் மோசேக்கு கட்டளையிட்டார். கோபத்தில் மோசே இரண்டு முறை கன்மலையை அடித்தான் (எண்ணாகமம் 20:10-11) இதன் விளைவாக, அவன் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைய தடை செய்யப்பட்டது. முன்னதாக எகிப்திலிருந்து சுயமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டி இருந்தது, ஆனால் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு தடைசெய்யப்படவில்லை.
கோபத்தை நிர்வகித்தல்:
பவுல் மூன்று கொள்கைகளை கூறுகிறார்; "நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்" (எபேசியர் 4:26-27). முதலாவது, நியாயமான மற்றும் நேர்மையான காரணங்களுக்காக கோபப்படுவது சாத்தியம். இரண்டாவது, கோபத்தின் மனநிலையில், இரக்கமற்ற, கொடுமையான அல்லது தவறான நடத்தை ஆகிய பாவத்தில் ஈடுபடக்கூடாது மூன்றாவது, சூரியன் மறையும் போது கோபம் தணிய வேண்டும். கோபத்தை அடக்காமல் அல்லது விரோதத்தை மனதிலேயே வைத்திருக்கும் போது அது கசப்பாகவோ அல்லது வெறுப்பாகவோ மாறும்.
ஆக்கபூர்வமான நோக்கங்களுக்காக நான் கோபத்தை அடக்கி, கட்டுப்படுத்தி, சரியான விதத்தில் நடந்து கொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்