தாங்கள் இறந்த பிறகும் தங்கள் பெயர்கள் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று விரும்பும் பலர் உள்ளனர்.
ஒரு பெயரை உருவாக்குதல்:
சிலர் நகரங்களை உருவாக்கி தங்கள் பெயர் வரும்படி செய்தனர். பாபேல் கோபுர குடிமக்கள் கூட தங்களுக்கு ஒரு பெயரை உருவாக்க விரும்பினர் (ஆதியாகமம் 11:4). பாபேலின் அந்த ஆவி எல்லாத் தலைமுறைகளிலும் செயல்பட்டிருக்கிறது. சைமன் பொலிவர் பொலிவியா என்ற தேசத்தை நிறுவியவர். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் முறையே ரோம இராயர்களான ஜூலியஸ் சீசர் மற்றும் அகஸ்டஸ் ஆகியோரின் பெயரால் அழைக்கப்படுகின்றன.
பயண இலக்கு தீவிரமானது:
“தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம், அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள்" (சங்கீதம் 49:11). மக்கள் நிலங்கள், நகரங்கள், பூங்காக்கள், சாலைகள், கட்டிடங்கள், நிறுவனங்கள், நாடுகள், மாதங்கள் என்று பெயரிட்டு அழைத்தாலும், அவர்களின் மரண எச்சங்கள் என்னவோ கல்லறையில்தான் இருக்கும். அப்சலோம் ஒரு கோபுரத்தைக் கட்டி தன் பெயரை நிலைநிறுத்த விரும்பினான் (2 சாமுவேல் 18:18).
அறுதிஇறுதி நெருப்பு:
முழு உலகமும் அதில் உள்ள அனைத்தும் இறுதி நெருப்பால் எரிக்கப்படும். "கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்" (2 பேதுரு 3:10). நாம் பார்த்த ரசித்த நினைவுச் சின்னங்கள், பதிவேடுகள், அருங்காட்சியகங்கள் உட்பட எல்லாமே அழிந்து விடும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நம் பெயர்கள் உலகில் பொறிக்கப்படுவதில்லை, ஆனால் ஜீவ புஸ்தகத்தில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. "ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்" (வெளிப்படுத்துதல் 20:15).
என்றென்றும் நிலைத்திரு:
உலகில் உள்ள மக்கள் அடுத்த தலைமுறையினரை இவற்றால் ஈர்க்க விரும்புகிறார்கள். இருப்பினும், தேவனுடைய சித்தத்தைச் செய்கிறவர்கள் என்றென்றும் வாழ்ந்து, இந்த உலகில் தங்கள் அன்பின் உழைப்புக்கு வெகுமதிகளை அனுபவிக்கிறார்கள். "உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்" (1 யோவான் 2:17). அவர்கள் பரலோகத்தில் பொக்கிஷங்களை வைத்திருக்க முடியும் (மத்தேயு 16:19-21). இந்த பரிவர்த்தனை விகிதம் அற்புதமானது, ஆம், எளிமையான செயல்கள், வார்த்தைகள், உதவிகள் என அனைத்தும் நித்திய பொக்கிஷமாக மாற்ற உதவுகிறது. நாம் நமது நேரம், ஆற்றல், வளங்கள், அறிவு, சொத்துக்கள் மற்றும் திறன்களை அவருடைய ராஜ்யத்திற்காக முதலீடு செய்யும் போது அவர்களை ஒளி மற்றும் இரட்சிப்புக்கு வழிநடத்துவதன் மூலம் நித்திய நண்பர்களை உருவாக்குகிறோம். அவருடைய ராஜ்யத்தில் முதலீடு செய்பவர்கள் பரலோகத்தில் நண்பர்களைப் பெறலாம். "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்" (லூக்கா 16:9).
அவருடைய சித்தத்தைச் செய்து நான் நித்தியத்தின் வெளிச்சத்தில் வாழ்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்