இந்த சகாப்தம் ஒரு தகவல் சகாப்தம் என்று அழைக்கப்படுகிறது. மக்கள் மனதில் முடக்கத்தை உருவாக்கும் அளவுக்கு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இருப்பினும், தகவலை எவ்வாறு நேர்மறையாகவும் மற்றும் பயனுள்ளதாகவும் பயன்படுத்தலாம் என்பதை நெகேமியா கற்பிக்கிறார்.
தகவல்:
ஒருவேளை இந்த டிஜிட்டல் தகவல் தொடர்பு சகாப்தத்தில் நெகேமியா வாழ்ந்திருந்தால், அவருக்கு வாட்ஸ்அப் செய்தி வந்திருக்கும். அதாவது எருசலேமின் இடிபாடுகள், இடிந்து விழுந்த சுவர்கள் மற்றும் காணாமல் போன வாயில்கள் ஆகியவற்றை அவரது சகோதரர்களில் ஒருவரான ஆனானி படம் பிடித்து வீடியோ பதிவாக நெகேமியாவிற்கு அனுப்பியிருப்பார் (நெகேமியா 1:1-3). அந்த வீடியோ செய்தியை அவர் பல வாட்ஸ்அப் குழுக்களுக்கு அனுப்பியிருக்க வாய்ப்புண்டு. இருப்பினும், நெகேமியா வித்தியாசமான ஒன்றைச் செய்தார்.
விளக்கம்:
யூதர்களுக்கு பாதுகாப்பு இல்லாதது, யூதர்களுக்கு நேர்ந்த அவமானம் மற்றும் துக்கம் என்று அவர் செய்தியை விளக்கினார். அலங்கம் இல்லாமல், நகரம் எதிரிகளிடமிருந்து எளிதில் தாக்கக்கூடியதாக இருந்தது. அலங்கம் மற்றும் வாயில்கள் இல்லாமல் எருசலேம் செழிப்பாக இருக்காது.
கண்ணோட்டம்:
தேவனின் கண்ணோட்டத்தில் தன்னையும், தன் மக்களையும், தேசத்தையும் ஆராய்ந்தார். தேவனின் கட்டளைகள் மீறப்பட்டது, உண்மையான ஆராதனை கைவிடப்பட்டது, பல புதிய அந்நிய தெய்வங்கள் அவர்களின் வாழ்க்கையில் வந்தனர், ஆக அவர்கள் எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
பரிந்துரை:
தேவன் மாத்திரமே தலையிட்டு உதவ முடியும் என்பதை உறுதியாக அறிந்த நெகேமியா உபவாசித்து, துக்கித்து, மன்றாடி, பரிந்து பேசி ஜெபித்தார். நெகேமியா தனது பாவங்களையும், தனது முன்னோர்களின் பாவங்களையும், இஸ்ரவேல் புத்திரர்களின் பாவங்களையும் அறிக்கையிட்டு ஜெபித்தார். அவர் தேவனின் மகத்துவத்தையும் அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கும் உண்மைத்தன்மையையும் ஒப்புக்கொண்டார். தேவனுடைய கட்டளைகளை மீறினால் "ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன்" என்ற எச்சரித்ததை கர்த்தர் நிறைவேற்றினார். ஆனால் அதேசமயம் ஜனங்கள் மனந்திரும்பி தேவ கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தால் அவர்கள் எந்த திசையில் இருந்தாலும் அவர்களை திரும்பக் கூட்டிச் சேர்ப்பேன் என்றீரே என தேவனுக்கு நினைப்பூட்டி நெகேமியா ஜெபித்தார் (நெகேமியா 1:4-11).
ஈடுபாடு:
நெகேமியாவின் ஜெபங்கள் எருசலேமின் நகரச் சுவர்களைப் பற்றி இன்னும் அதிக அக்கறை கொள்ள வைத்தது. தேவன் மீதும் தேவ ஜனங்கள் மீதும் கொண்ட அன்பும் அக்கறையும் அவருக்கு வருத்தத்தையும் நோயையும் கொடுத்தது. அரசனின் பானபாத்திரக்காரனாக, அரசன் அர்தசஷ்டாவின் முன்னிலையில் மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் அவரை திக்குமுக்காட வைத்தது. அவருடைய முகமே அவருடைய ஆவிக்குரிய கொந்தளிப்பைக் காட்டியது, அது அரசனால் கண்டுபிடிக்க முடிந்தது. 'நீ ஏன் துக்கமாக இருக்கிறாய்' என்று ராஜா கேட்டபோது, எருசலேமைப் பற்றிய தனது வேதனையை நெகேமியா வெளிப்படுத்தினார். எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவதற்கு ராஜா அவருக்கு அனுமதி அளித்தார் (நெகேமியா 2:1-8).
ஆய்வு:
நெகேமியா எருசலேமுக்குச் சென்று, பாழடைந்த நகரத்தையும், மதில்களையும், வாயில்களையும் ரகசியமாக ஆய்வு செய்தார்.
நிறுவுதல்:
நெகேமியா தனது சக நாட்டு மக்களுக்கு ஊக்கமளித்து, அறிவுறுத்தி, 52 நாட்களில் எருசலேமின் சுவர்களைக் கட்டி, அதன் வாயில்களை நிறுவினார் (நெகேமியா 6:15).
நான் பெறும் தகவலை பயனுள்ள வகையில் உபயோகிக்கின்றேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்