ஒரு முதியவர், அவர் இறப்பதற்கு சற்று முன்பு தனது மகன்களை அழைத்து, சமூகத்தில் நல்ல பொறுப்புள்ள உறுப்பினர்களாக வாழ வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதை விளக்கமாக தெரிவிக்கும் விதமாக செயல்முறை விளக்கம் செய்ய நான்கு தம்ளர்களில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்.
கூழாங்கல்:
முதலாவது கண்ணாடி கிளாசில், முதியவர் ஒரு கூழாங்கலை போட்டார். அது மூழ்கி கண்ணாடியின் அடிப்பகுதியில் நின்றது. சுயநலக்காரன் இப்படித்தான் இருப்பான் என்று விளக்கினார். அவன் சுற்றுச்சூழலிலிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டு ஒதுங்கி காணப்படுவார்கள். கிறிஸ்தவர்கள் சுயநலவாதிகளாகவும், ஒதுங்கியும், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் இருக்க முடியாது. சுயநல லட்சியம் ஒரு விசுவாசியின் நல்ல பண்பே அல்ல (பிலிப்பியர் 2:3).
பஞ்சு:
இரண்டாவது கண்ணாடி கிளாசில் முதியவர் பஞ்சை உருட்டி போட்டார். அது தண்ணீரை உறிஞ்சி மிதந்தது. உலகில், சுற்றுச்சூழலையும் மற்றவர்களையும் உறிஞ்சி எதையும் பங்களிக்காத சுயநலவாதிகள், தீயவர்கள் கூட உள்ளனர் என்பதை இது குறிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, சமூகத்தில் பலர் வற்புறுத்துதல், அடக்குமுறை மற்றும் சுரண்டல் மூலம் மற்றவர்களின் உழைப்பு, ஆற்றல் மற்றும் நேரத்தை உறிஞ்சி ஆடம்பரமாக வாழ்கின்றனர். இவர்கள் பிறருக்குத் தீங்கு செய்தும், கொன்றும் கூட உயிர் வாழும் ஒட்டுண்ணிகளைப் போன்றவர்கள்.
களிமண்:
மூன்றாவது கண்ணாடி கிளாசில் முதியவர் களிமண்ணை போட்டார், அது கரைந்து, கலந்து, முழுத் தண்ணீரையும் மாசுபடுத்துகிறது. பொல்லாதவர்கள் தீய செல்வாக்கைக் கொண்டு வந்து தங்களையும் சமூகத்தையும் அழித்துக் கொள்கிறார்கள். உலகில் சிலர் நன்மையை தீமை என்றும், தீமையை நன்மை என்றும் கூறுகின்றனர். அவர்கள் மக்கள், அவர்களின் சிந்தனை செயல்முறைகள், மதிப்புகள் மற்றும் பண்புகளை குழப்புகிறார்கள் (ஏசாயா 5:20). இப்படிப்பட்டவர்களால் சமுதாயத்தில் ஒழுக்க விழுமியங்கள் சிதைந்து, ஒட்டுமொத்த தேசமும் அநீதியாகவும் பொல்லாததாகவும் மாறக்கூடும்.
சர்க்கரை:
நான்காவது கண்ணாடி கிளாசில் முதியவர் சிறிது சர்க்கரையைக் கலந்தார். சர்க்கரை கலந்து, கரைந்து, சுவை தருகிறது. தெய்வீக மற்றும் நல்ல மனிதர்கள் இனிமையாக இருப்பதோடு, தங்கள் சூழலையும் சமூகத்தையும் இனிமையாக்குகிறார்கள். முதியவர் தனது மகன்களை கூழாங்கல் அல்லது பஞ்சு அல்லது களிமண் போன்று இல்லாமல் சர்க்கரையைப் போல இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த முதியவரின் போதனையைப் போலல்லாமல், சீஷர்கள் பூமிக்கு உப்பு மற்றும் உலகத்தின் ஒளி என்று ஆண்டவர் இயேசு கற்பித்தார். உப்பு சுவை கூட்டுகிறது மற்றும் பாதுகாக்கிறது. இருளில் வாழும் சமூகத்திற்கு ஒளி உண்மை, மதிப்புகள், அன்பு மற்றும் இரக்கம் ஆகியவற்றைக் கொண்டுவருகிறது (மத்தேயு 5:14-16).
உப்பும் ஒளியும் போல நான் என் சமூகத்திற்கு ஆசீர்வாதமான நபரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்