ஒரு பெரிய தேவாலயம் கட்ட முடியும் என ஒரு நபர் நம்பினார், அவர் தன்னை தானே பிஷப் என்றும் அழைத்து கொண்டார். உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான கட்டிடம் இருந்தால் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பது அவரது எண்ணம். பல நன்கொடையாளர்களிடம் நம்பும் வகையில் பேசி, நகருக்கு வெளியே ஒரு பெரிய சொத்தை வாங்கி, பேரங்காடி (mall) போன்ற ஒரு மெகா கட்டிடத்தை எழுப்பினார். இருப்பினும், அவரது ஞாயிறு ஆராதனைக்கு நூறு பேர் கூட வரவில்லை. அவர் விளம்பரம் பிரச்சாரம் மற்றும் மக்கள் தொடர்புக்கான அனைத்து முறைகளையும் முயற்சித்தார். ஆனாலும், மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.
செல்வதற்கு நியமிக்கப்பட்டது:
சீஷர்களை உருவாக்குவதற்கு சாட்சியாக உலகெங்கும் செல்வதுதான் பெரிய கட்டளை (மத்தேயு 28:18-20; அப்போஸ்தலர் 1:8). இருப்பினும், அவர் ஒரு குறிப்பிட்ட அளவு தூரத்திற்கு மாத்திரம் சென்று, ஒரு கட்டிடத்தைக் கட்டி, ஜனங்களை அழைக்க வேண்டும் என்று நினைத்தார். யோனாவுக்கும் இந்த பிரச்சனை இருந்தது: "நான் ஏன் போக வேண்டும்?" நினிவே நகரத்தார் ஜீவனுள்ள தேவனான யெகோவாவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், அவர்கள் எருசலேமுக்கு தானே பயணம் செய்ய வேண்டும் என்பது அவன் வாதமாக இருந்தது.
ஆதிக்கம் செலுத்தும் நகரம்:
தேவன் யோனாவைப் போன்று தம் மக்களை அச்சுறுத்தும் இடங்களுக்கு அனுப்புகிறார். நினிவே அசீரியப் பேரரசின் தலைநகராக இருந்தது, ஒரு பெரிய நகரம், அந்த காலங்களில் வரலாற்றின் படி உலகின் மிகப்பெரிய நகரம்.
வித்தியாசமான மனிதர்கள்:
வெவ்வேறு நபர்களுக்கு அருட்பணிகள் செல்கின்றன; ஆம், இனம், சாதி, பொருளாதாரம், தேசியம், கலாச்சாரம், மொழி என பாகுபாடு இன்றி அருட்பணிக்கான அழைப்பு இருக்கிறது. யோனா தேவனை எல்லா நாடுகளின் இறையாண்மை ஆண்டவராக புரிந்து கொள்ளவில்லை. இஸ்ரவேலர்களுக்கு மாத்திரமே போதிக்கவும், பிரசங்கமளிக்கவும் மற்றும் தீர்க்கதரிசனம் உரைக்கவும் தேவன் தன்னை அழைத்துள்ளார் என்பதாக யோனா நினைத்தான்.
சிரமமானவர்கள்:
பொல்லாதவர்கள் மற்றும் தீயவர்கள் மத்தியில் ஊழியம் செய்வது அருட்பணி. "நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது" என்று கர்த்தர் யோனாவிடம் கூறினார் (யோனா 1:2).
ஆபத்தான மனிதர்கள்:
அருட்பணிகள் என்பது ஆபத்தான முயற்சி எனலாம். யோனா கேலி செய்யப்படலாம், தாக்கப்படலாம், கொல்லப்படலாம். நாகூம் தீர்க்கதரிசி நினிவேவாசிகளை அது இரத்தபழி நகரம் என்பதாக விவரித்துள்ளார் (நாகூம் 3:1-4).
அசுத்தமான நிலம்:
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை விட்டு வெளியேறி, இஸ்ரவேலரால் புனிதமற்ற அல்லது பேகன் என்று கருதப்பட்ட நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்ததால், யோனா தயங்கினான்.
இரக்கத்திற்கு தகுதியா?
தேவன் இரக்கமுள்ளவர் ஆகையால் நிச்சயம் நகரம் அழிக்கப்படாது என்று யோனா உறுதியாக இருந்தான். ஆனால் தீர்க்கதரிசி என்ற அவனது புகழ் அல்லது நற்பெயர் அழிக்கப்படும். எனவே, நினிவேயையோ அல்லது அவனுடைய புகழையோ எதையுமே அவன் அழிக்க விரும்பவில்லை.
நான் அருட்பணிக்கு செல்லும் பயணத்தில் இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்