வேதாகமம் குறைந்தது ஐந்து கிரீடங்களைப் பற்றி குறிப்பிடுகிறது. ஒரு கிறிஸ்தவனின் விசுவாசம், உண்மைத்தன்மை மற்றும் பலனளிக்கும் தன்மையில் தொடர அக்கிரீடங்கள் நமக்கு நுண்ணறிவுகளை வழங்குகின்றன.
1. அழியாத கிரீடம்:
(1 கொரிந்தியர் 9:24-25) தங்களுக்கு நியமித்திருக்கிற பந்தயத்தில் விசுவாசமாய் ஓடுபவர்களுக்கு நித்தியமான, அழியாத கிரீடம் வழங்கப்படுகிறது. இது ஒரு வித்தியாசமான பந்தயமாகும், இதற்கு உடல் அல்லது மன வலிமையை விட விசுவாசமும் உள்ளான குணமும் (தரம்) மிக முக்கியமானது. பந்தயம் அசாதாரணமானது. ஆனால் காலாட்களோடே ஓடும்போதே நாம் சோர்ந்து போவோமேயானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவோம்? (எரேமியா 12:5).
2. மகிழ்ச்சியின் கிரீடம்:
(1 தெசலோனிக்கேயர் 2:19- 20. & தானி 12:3) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக பிறரை வழி நடத்துபவர்களுக்கு இந்த கிரீடம் வழங்கப்படுகிறது. ஆத்துமாக்களை வென்றதற்கு இது ஒரு வெகுமதி. கிறிஸ்தவர்கள் தனிமையில் ஓடுபவர்கள் அல்ல; அவர்களோடு இணைந்து ஓட பந்தயத்தில் மற்றவர்களை நியமிக்கிறார்கள். மேலும் பந்தயத்தைத் தொடர அவர்கள் தன்னிடருக்கும் தடியை (ஒரு வெற்று உருளை ரிலே பந்தயத்தில் ரன்னர் முதல் ரன்னர் வரை செல்லும்) மற்றவர்களுக்கு அனுப்புகிறார்கள்.
3. ஜீவ கிரீடம்:
(யாக்கோபு 1:12) இந்த உலகில், கிறிஸ்தவர்கள் உபத்திரவம், சோதனைகள், துன்பங்கள், இழிவு, அவமானம், கிண்டல் மற்றும் கேலி ஆகியவற்றை எதிர்கொள்வார்கள். பாதகமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ஒரு விசுவாசி உலகை வென்ற இயேசுவை நம்பி அவரை முன்மாதிரியாய் எடுத்து வெற்றி பெறுகிறான். "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்" (யோவான் 16:33). இப்படி ஜெயங்கொள்ளும் கிறிஸ்தவர்கள் இரத்த சாட்சியின் கிரீடம் என்றும் அழைக்கப்படும் ஜீவ கிரீடத்தைப் பெறுகிறார்கள்.
4. நீதியின் கிரீடம்:
(2 தீமோத்தேயு 4:8.) இந்த உலக வாழ்க்கை குறுகியது என்பதை உண்மைக் கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்பார்ப்பதில் தொடர்ந்து மற்றும் நிலைத்து நிற்கிறார்கள். கர்த்தராகிய இயேசுவின் மகிமையான வருகைக்காக எப்போதும் காத்திருக்கும் பரிசுத்தமான மற்றும் நீதியான வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு இந்த கிரீடம் வழங்கப்படுகிறது. அவர்கள் மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தை அணிவதில்லை (யூதா 1:23).
5. மகிமையின் கிரீடம்:
(1 பேதுரு 5:1-4) கிறிஸ்தவர்கள் மற்றவர்களை கிறிஸ்துவிடம் வழிநடத்த அழைக்கப்படுவது மட்டுமல்லாமல், புதிய விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இருக்கவும், ஊக்கமளிக்கவும், பயிற்சி அளிக்கவும் மற்றும் ஆவிக்குரிய மன்னா அளிப்பதன் மூலம் அவர்களுக்கு ஊழியம் செய்யவும் அழைக்கப்படுகிறார்கள். இந்த மகிமையின் கிரீடம் கர்த்தருக்கு ஊழியம் செய்வதில் உண்மையாய் இருப்பதற்கான வெகுமதியாகும், இந்த பலன் தேவ ஜனங்களை மேம்படுத்துவதில் விளைகிறது. ஆக இதை அனுபவித்த அடுத்த தலைமுறையினரும் ஆண்டவருக்கு தொடர்ந்து ஊழியம் செய்ய தூண்டப்படுகிறார்கள்.
கிரீடங்களைப் பெற நான் ஆயத்தமாக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokaran