மீதியான் தேசத்தின் ஆசாரியனும் மோசேயின் மாமனாரான எத்திரோ, கேத்தூராள் மூலம் ஆபிரகாமின் வழித்தோன்றலாக இருக்கலாம் (ஆதியாகமம் 25:1-2). எனவே, எத்திரோ யெகோவாவை வணங்குபவர் என்று நம்பப்படுகிறது. ஆக, அவர் ஒரு சிறந்த மாமனார் மற்றும் தாத்தாவாக இருக்க வாய்ப்புகள் உண்டு.
விருந்தோம்பல்:
எகிப்திலிருந்து தப்பி ஓடி வந்த அந்நியனான மோசேக்கு எத்திரோ ஆதரவளித்து கவனித்தார் (யாத்திராகமம் 2:21-22). மேய்ப்பர்களாக இருந்த தன் மகள்களை மற்ற மேய்ப்பர்களின் தாக்குதலிலிருந்து மோசே காப்பாற்றினான். பின்னர் எத்திரோவின் மகள் சிப்போராளை மோசே மணந்தான். உண்மையாகவே, மோசே அவர்களோடு தங்கியிருப்பதில் திருப்தி அடைந்தான் மற்றும் மாமனாரது மந்தையை கவனித்து வந்தான்.
ஊக்கம்:
மோசே எகிப்துக்குத் திரும்ப விரும்பியபோது, தேவ அழைப்பை நிறைவேற்ற எத்திரோ அவனை அனுப்பினார் (யாத்திராகமம் 4:18). அவர் மோசேயின் மீது ஆதிக்கம் செலுத்தவோ கட்டளையிடவோ இல்லை, மாறாக அவன் விரும்பியபடி செய்ய அனுமதித்தார். ஒருவேளை, தேவன் தனக்கு வெளிப்படுத்திய முழு திட்டத்தையும் மோசேயும் வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.
பாதுகாப்பு:
அநேகமாக, இஸ்ரவேல் புத்திரரை விடுவிப்பதற்கான தேவனின் வழிகாட்டுதலை மோசே பின்பற்றியபோது, சிப்போராளும் அவர்களின் பிள்ளைகளும் எத்திரோவின் வீடான மீதியானுக்குச் சென்றனர். அது கொள்ளை நோய்களின் காலமாக இருந்திருக்கலாம்; அவர்கள் எத்திரோவிடம் அனுப்பப்பட்டனர்.
வனாந்தரத்திற்கு வருகை:
இஸ்ரவேல் வனாந்தரத்தில் இருந்தபோது, எத்திரோ சிப்போராள், கெர்சோம் மற்றும் எலியேசர் ஆகியோரை மோசேயிடம் அழைத்துச் சென்றார் (யாத்திராகமம் 18:1-12). மோசே அவரை வணங்கி வரவேற்று மரியாதை செய்தான்.
பகுத்தறிவு:
மோசேயின் வாழ்க்கையில் தேவனின் கரத்தை எத்திரோவால் புரிந்து கொள்ள முடிந்தது. எகிப்து அல்லது பார்வோன் மந்திரவாதிகளைப் போலல்லாமல், எத்திரோவுக்கு ஆவிக்குரிய பகுத்தறிவு இருந்தது. எகிப்தின் கொடுங்கோன்மையிலிருந்து தேவன் எவ்வாறு இஸ்ரவேலை தம் வல்லமைமிக்க கரத்தால் விடுவித்தார் என்பதை அவர் தெளிவாக புரிந்துகொண்டார். எகிப்தியரின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை தேவன் விடுவித்தார் என்ற செய்தியைக் கேட்டபின், அவர் மகிழ்ச்சியடைந்து, கர்த்தருக்கு ஒரு சர்வாங்க தகனபலியைச் செலுத்தினார் (யாத்திராகமம் 18:1, 7-12).
மோசேக்கு அறிவுரை:
மோசே, காலை முதல் மாலை வரை தீர்ப்பளிக்க தனியாக அமர்ந்திருப்பதை எத்திரோ பார்த்தபோது, மோசே மன அழுத்தம், உடல் பலவீனம் மற்றும் உணர்வில் சோர்வு ஆகியவற்றை அனுபவிப்பதை உணர்ந்தார். மோசே சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து தனது வேலையை ஒப்படைக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார் (யாத்திராகமம் 18:14-22). பின்னர் மோசே அந்த ஆலோசனையை செயல்படுத்தினார்.
வீடு திரும்புதல்:
மோசேயின் குடும்பத்தினருக்கும் தேவ ஜனங்களுக்கும் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று திருப்தியடைந்த பிறகு, அவர் திரும்ப தன் தேசத்துக்குச் சென்றார் (யாத்திராகமம் 18:27). அவர் தம் மக்களிடையே மிக நிம்மதியாக மகிழ்ச்சியாக இருந்தார்.
மற்றவர்களைக் கவனிப்பதில், மரியாதை செலுத்துவதில் மற்றும் தாராள குணத்தோடு இருப்பதில் நான் எப்படி இருக்கிறேன்? சிந்திப்போமா.
Author: Rev. Dr. J .N. மனோகரன்