தீர்க்கதரிசி என்று அழைக்கப்படும் ஒருவரால் தினசரி ஆவிக்குறிய அனுபவங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. அவர் பரலோகத்தில் தேவனுடன் தேநீர் அருந்தினேன், சில சமயங்களில் அவருடன் மதிய உணவு சாப்பிட்டேன், என்பன போன்ற பல காரியங்களைக் கூறினார். அந்தப் பொய்யான தீர்க்கதரிசி அடிக்கடி சொர்க்கத்திற்குப் பறந்துசென்று வருபவர். அப்போஸ்தலனாகிய பவுல் மூன்றாம் வானத்திற்குச் சென்ற ஒரு சிறந்த அனுபவத்தைப் பெற்றிருந்தார். முதலாம் வானம் வளிமண்டலம், இரண்டாவது விண்வெளி, மூன்றாவது தேவன் வசிக்கும் இடம். ஆனால் பவுல் பதினான்கு ஆண்டுகளாக இந்த இயற்க்கைக்கு அப்பாற்பட்ட அனுபவத்தைப் பற்றி வாய் திறக்கவில்லை. மாறாக, பவுல் தனது பலவீனத்தைப் பற்றி சந்தோஷத்துடன் பெருமைப்படுவதாகவும், அதில் மகிழ்ச்சியடைவதாகவும் எழுதுகிறார். (II கொரிந்தியர் 12:1,9-10)
பெருமிதம் மற்றும் மகிழ்ச்சி:
பலவீனங்கள், வலிகள், துன்பங்கள், தோல்விகள் மற்றும் வீழ்ச்சிகளில் கர்த்தரின் கிருபையும் பெலனும் வெளிப்படுவதால், அதில் பெருமிதம் கொள்ளுதல் மற்றும் துன்பங்களில் மகிழ்ச்சி அடைதல் என்கிற ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தைப் பவுல் தருகிறார்.
பலவீனம்:
பவுலின் கூற்றுப்படி, அவரின் சரீரத்தில் ஒரு முள் கொடுக்கப்பட்டது, அதாவது, கர்த்தரிடமிருந்து ஒரு பரிசு. சாத்தான் அதைச் சாதகமாகப் பயன்படுத்தி, பவுலை உடல்ரீதியாக பலவீனப்படுத்தி, மனரீதியாக வருத்தமடையச் செய்தான், ஆவிக்குறிய ரீதியில் சோர்வடையச் செய்து, உணர்ச்சிப்பூர்வமாக நிராகரித்தான். மூன்று முறை செய்யப்பட்ட அவரது உருக்கமான வேண்டுகோளுக்கு, கர்த்தர் வித்தியாசமாக பதிலளித்தார். முள் அகற்றப்படவும் இல்லை, குணப்படுத்தப்படவும் இல்லை. அதற்குப் பதிலாக, தேவன் அவருடைய கிருபை போதுமானதாக இருக்கும் என்றும், அவருடைய வல்லமை பவுலின் பலவீனத்தின் மூலம் வெளிப்படும் என்றும் வாக்குத்தத்தம் அளித்தார்.
அவமானங்கள்:
மாம்சத்திலிருந்த முள்ளின் காரணமாக, அவர் அவமானப்படுத்தப்பட்டார், அதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். சில வேதஅறிஞர்கள் அவருக்கு கண் பிரச்சினை இருப்பதாகக் கூறுகிறார்கள், எனவே மக்கள் அவரை குருடர் அல்லது அரைகுருடு என்று கேலி செய்தனர். கலாத்தியா நகரத்தில் உள்ள விசுவாசிகள் பவுலுக்காக தங்கள் கண்களை தானம் செய்ய கூட தயாராக இருந்தனர். (கலாத்தியர் 4:15)
கஷ்டங்கள்:
ஒருவேளை மாம்சத்தில் இருந்த முள்ளின் காரணமாக பவுல் கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டிருக்கலாம். அவர் வலியினூடே கடந்து செல்வதால், வலிமையையும், ஆற்றலையும் இழந்து மேலும் அவரது அன்றாட வேலைகளைச் செய்வதில் இடையூறுகளைச் சந்தித்திருக்கலாம். நிச்சயமாக, அவர் சிறையில் அடைக்கப்பட்டார், கப்பல் விபத்துக்குள்ளானார், சவுக்கால் அடிக்கப்பட்டார், பசி, வீடற்ற நிலை... போன்ற பிற கஷ்டங்களையும் அனுபவித்தார்.
உபத்திரவங்கள்:
பவுல் உபத்திரவத்தை மகிழ்ச்சியுடன் சகித்தார். அவர் ஜெபிக்கும்போது நோயாளிகள் குணமடைந்தார்கள், ஆனால் தன்னைக் குணப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்று மக்கள் அவரை கேலி செய்திருப்பார்கள்.
சிரமங்கள்:
குருட்டுத்தன்மை அல்லது வேறு சில உடல் குறைபாடுகள் பவுலின் மாம்சத்தில் முள்ளாக இருந்திருக்கலாம். அவருடைய வழக்கமான செயல்களை நிறைவேற்ற அதிக நேரம் எடுத்தது மற்றும் ஊழியத்தில் பயனுள்ள பலன்களைத் தடை செய்தது.
துன்பங்களில் பெருமிதம் கொண்டு மகிழுமளவுக்கு எனக்கு ஆவிக்குறிய முதிர்ச்சி இருக்கிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்