"கோப்பையின் பயன் அதன் வெறுமை" என்ற மேற்கோள் புரூஸ் லீக்கு சேரும். ஆயினும்கூட, தேவன் வெற்றுக் கோப்பைகளை முழுமையுடனும் மிகுதியுடனும் நிரப்புகிறார், மேலும் நிரம்பி வழியும் கோப்பைகள் மற்ற வெற்றுக் கோப்பைகளை நிரப்பக்கூடும். சங்கீதக்காரன் கூறுகிறான், “கர்த்தாவே, என் பகைவர்களின் முன்னிலையில் என் பந்தியை ஆயத்தமாக்கினீர். என் தலையில் எண்ணெயை ஊற்றினீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது” (சங்கீதம் 23:5). ஒரு கோப்பை என்பதை, ஒரு நபர் அல்லது ஒரு நபரின் இருதயம் என ஒப்பிடலாம். முதலில், அது தேவையற்ற விஷயங்களாலும், அசுத்தமான விஷயங்களாலும் நிரம்பியுள்ளது. இரண்டாவதாக, அதை காலி செய்து சுத்தம் செய்ய வேண்டும். மூன்றாவதாக, அது தேவ அன்பால் நிரப்பப்பட வேண்டும். நான்காவதாக, அத்தகைய கோப்பை நிரம்பி மற்ற காலி கோப்பைகளை நிரப்புகிறது.
அசுத்தமான கோப்பைகள்:
மனித இதயம் தீய எண்ணங்கள், பாலியல் ஒழுக்கக்கேடு, திருட்டு, கொலை, விபச்சாரம், பேராசை, துன்மார்க்கம், வஞ்சகம், சிற்றின்பம், பொறாமை, அவதூறு, பெருமை, முட்டாள்தனம் மற்றும் பொய் சாட்சி ஆகியவற்றை கொண்டதாக இருக்கிறது (மாற்கு 7:20-23; மத்தேயு 15:19).
வெறுமையான மற்றும் சுத்தமான கோப்பைகள்:
அழுக்கு கோப்பைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மட்டுமே, ஒரு நபர் பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்படுகிறார். வெறுமையான கோப்பைகள் என்பது தாழ்மையுடன் இருப்பது, கேட்க விரும்புவது, புதியதைக் கற்றுக்கொள்வது மற்றும் தவறான கருத்துக்களை விட்டு விடுவது என்பனவாகும். ஒரு பழமொழி உண்டு, காலியான பாத்திரம் அதிக சத்தம் எழுப்புகிறது. எனவே, ஒரு விசுவாசி தனது இருதயத்தை நிரப்ப தேவ அன்பைக் கேட்கவும் ஜெபிக்கவும் வெட்கப்பட கூடாது.
நிரம்பிய கோப்பைகள்:
தேவ அன்பு பரிசுத்த ஆவியால் இருதயங்களில் ஊற்றப்படுகிறது (ரோமர் 5:5). ஒரு விசுவாசி திறந்த மனதுடன், ஏற்றுக்கொள்ளும் இதயம் மற்றும் மகிழ்ச்சியான ஆவியுடன் வேதாகமத்தைப் படிக்கும்போது, தேவ அறிவாலும் ஞானத்தாலும் நிரப்பப்படுவார். நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் நிரப்பப்படுவார்கள் (மத்தேயு 5:6).
நிரம்பி வழியும் கோப்பைகள்:
வெற்று கோப்பையிலிருந்து ஊற்றுவது சாத்தியமில்லை. ஒரு நபர் தேவ அன்பாலும் ஞானத்தாலும் நிரப்பப்பட்டால், மற்றவர்களுக்கு பயனுள்ளவராக மாறுகிறார். நம்மைச் சுற்றியுள்ள பெரும்பாலான மக்கள் அசுத்தமான கோப்பைகளைக் கொண்டுள்ளனர், மேலும் தேவ அன்பு நிரம்பி வழியும் போது அவர்கள் தேவ வார்த்தையையும் ஆவியையும் பெறுவதற்குத் தயாராகவும், சுத்தப்படுத்தவும் வெறுமையாகவும் இருக்க உதவும். பல விசுவாசிகளிடம் கூட வெற்று கோப்பைகள் அல்லது பாதியளவு நிரப்பப்பட்ட கோப்பைகள் உள்ளன. அவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை தேவை. உண்மையைச் சொல்லப்போனால் இது ஒரு மகிழ்ச்சியான ஊழியம்; அனைத்து விசுவாசிகளும் நம்பிக்கையற்றவர்களுக்கும் விசுவாசிகளுக்கும் இந்த ஊழியத்தைச் செய்ய முடியும்.
"இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுவேன்” (சங்கீதம் 116:13) என்று நாமும் சங்கீதக்காரன் பாடுவது போல பாடலாமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்