"உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு" (நீதிமொழிகள் 3:9). கிறிஸ்தவத்தில் வழங்குதல் அல்லது கொடுத்தல் என்பது கிருபை மற்றும் தாராள மனப்பான்மையின் ஆவிக்குரிய வெளிப்பாடாகும். வரலாறு முழுவதும் சபைகள் ஊழியம், அருட்பணிகள் மற்றும் சமூகப் பணிகளுக்குக் கொடுப்பதில் சிறந்து விளங்குகிறது. பணப் பற்றாக்குறை நேரத்திலும் கொடுப்பது செழித்தது. கொடுப்பது செல்வத்தின் மிகுதியால் அல்ல, ஆனால் எருசலேம் ஆலயத்தில் கொடுக்கப்பட்ட ஏழை விதவையைப் போல இதயத்தின் நிறைவானதாகும் (மாற்கு 12:41-44).
1) குறிக்கப்பட்ட ஆடுகள்:
பண்டைய இஸ்ரவேலில், மந்தையிலுள்ள பத்து ஆடுகளில் ஒன்று தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்கும். தசமபாகத்திற்கு என்று நியமிக்கப்பட்ட ஆட்டிற்கு சிறந்த கவனிப்பு இருக்கும்; பின்பதாக பலியிடப்படும்.
2) குறிக்கப்பட்ட மரங்கள்:
தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள கிறிஸ்தவ விவசாயிகள் வயலில் உள்ள பத்தில் ஒரு பனை மரத்தில் ஆலயம் அல்லது அருட்பணியின் பெயரை பொறிக்கிறார்கள். அந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நன்கொடையாக அளிக்கப்படும் அல்லது விற்கப்படும்; அப்படி விற்கப்பட்ட பணம் காணிக்கையாக அளிக்கப்படும்.
3) குறிக்கப்பட்ட கோழிகள்:
கோழிகளை வளர்க்கும் பெண்கள், அருட்பணிக்காக ஒரு சில கோழிகளை குறிக்கிறார்கள். முட்டைகள் ஊழியத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகின்றன, மேலும் குழந்தைகளுக்கான விடுமுறை வேதாகம பள்ளி போன்ற சிறப்பு தேவாலய (சபை) நிகழ்வுகளுக்கும் கோழி வழங்கப்படுகிறது.
4) கைப்பிடி அரிசி:
பெண்கள் சமையலுக்கு அரிசி எடுக்கும் போதெல்லாம், முதல் கைப்பிடி எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைப்பதுண்டு. பாத்திரத்தில் தினமும் அரிசி ஒதுக்கப்பட்டு, அப்பாத்திரம் நிரம்பியவுடன் தேவாலயத்திற்கு வழங்கப்படுகிறது. அந்த அரிசி போதகருக்கோ அல்லது சபையாக இணைந்து ஒரு நாள் ஐக்கியத்திற்காகவோ அல்லது ஏழையாக இருக்கும் தேவாலய உறுப்பினர்களுக்கோ விநியோகிக்கப்படுகிறது.
5) முதல் பழங்கள்:
தங்களுக்கு சொந்தமான அனைத்து செடிகள் மற்றும் மரங்களில் இருந்து முதல் பழங்கள் அல்லது பயிர்கள் ஊழியத்திற்கு வழங்கப்பட்டது. இளநீர், பனை மரச்சாறு, காய்கறிகள்... காணிக்கையின் ஒரு பகுதியாக இருந்தது.
6) உண்டியல்கள்:
தேவனுக்கு செலுத்தும்படியாக குழந்தைகளுக்கு மண் உண்டியல் வழங்கப்பட்டது. வருடத்திற்கு ஒருமுறை தேவாலயம் அத்தகைய நிதியை சேகரித்து தேவாலயத்தில் ஏழை மாணவர்களுக்கு உதவ பயன்படுத்தியது.
7) நாணய இயக்கம்:
இது மேற்கத்திய பெண்களிடையே தொடங்கி, பின்னர் உலகளாவிய இயக்கமாக மாறியது. சம்பந்தப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட மதிப்புள்ள நாணயத்தை ஊழியத்திற்காக தனியாக ஒதுக்கி வைத்திருக்க முடிவெடுக்கிறார்கள். சந்தையில் அதற்கான நல்ல விலை வரும்போது நாணயத்தை பணமாக மாற்றி அருட்பணிக்காக அவற்றை பயன்படுத்துகிறார்கள்.
நான் மகிழ்ச்சியோடும், களிப்போடும், ஆக்கப்பூர்வமாகவும், நன்றி உணர்வோடும் தேவனுக்குக் கொடுக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்