பலர் உதவி பெறுவதில் பெருமிதம் கொள்கிறார்கள். சிலர் மற்றவர்களின் உதவியைப் பெறுவதை விட சாவது மேல் என பிடிவாதமாக இருக்கிறார்கள். எந்த நபரும் ஒரு தீவு அல்ல; ஒருவரையொருவர் சார்ந்து வாழ்பவரே. தாழ்ந்த சமூகமாக கருதுபவர்களிடமிருந்து உதவி பெறக் கூடாது என நினைக்கும் சில உயரடுக்கு கூட்டம் உள்ளது. ஒரு நபர் (உயர் சாதி என்று அழைக்கப்படுபவர்) ஒரு விபத்தில் சிக்கி, தாகத்தோடு தண்ணீருக்காக கதறினார். அதைக் கண்டு அவருக்கு ஒருவர் தண்ணீர் கொடுக்க விரைந்தபோது, அவர் காவலாளி சீருடையில் இருந்தவுடன் தண்ணீரை வேண்டாம் என தவிர்த்து விட்டார், அநேகமாக தாழ்ந்த குலம் என எண்ணி மறுத்து விட்டார் போலும்.
மாம்சமாகுதல்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தனக்கான உரிமைகளையும் மகிமையையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதகுலத்தை மீட்டெடுக்க ஒரு மனிதனின் வடிவத்தை எடுத்தார். புதிதாகப் பிறந்த குழந்தை, அது எந்தக் குழந்தையாக இருந்தாலும் தற்காத்துக் கொள்ள முடியாது தானே; ஆம் இயேசுவும், தன்னுடைய தேவைகள், பாதுகாப்பு மற்றும் வளர்ப்பிற்காக முற்றிலும் மரியாளையும் மற்றும் யோசேப்பையும் சார்ந்து இருக்க வேண்டியிருந்தது.
தச்சர்:
கர்த்தராகிய இயேசு தனது வளர்ப்பு தந்தை யோசேப்பைப் போலவே ஒரு தச்சராக சிரத்தையுடன் பணியாற்றினார். 12 வயது முதல் 30 வயது வரை பதினெட்டு ஆண்டுகள் அவர் தனது இளைய சகோதரர்களுக்கும் தாய் மரியாளுக்கும் உணவளிக்க கடினமாக உழைத்தார்.
அப்பமாக்க மறுத்தல்:
சாத்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, கற்களை அப்பமாக மாற்றும் அற்புதத்தை செய்ய தூண்டினான். "அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்" (மத்தேயு 4:4). ஆனாலும், ஐயாயிரம் பேருக்கு உணவளிக்க ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பல ஆயிரங்களாக பெருக்கினாரே (மத்தேயு 14:13-21).
மனத்தாழ்மை:
கர்த்தராகிய இயேசு தனக்குத் தேவையானவற்றைப் படைத்திருக்க முடியும், ஆனால் மற்றவர்களின் உதவியைப் பெறுவதில் மனத்தாழ்மையுடன் அல்லவா இருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் கடினமான கேள்விக்கு பதிலளிக்க ஒரு நாணயத்தை கடன் வாங்கினார்; உபதேசிக்க ஒரு படகு; சவாரி செய்ய ஒரு கழுதை; புதிய உடன்படிக்கையைக் கொண்டாட ஒரு அறை மற்றும் அடக்கம் செய்யப்பட ஒரு கல்லறை என அவரின் மனத்தாழ்மையைக் காண முடிகிறதே.
ஊழியத் தேவை:
கர்த்தராகிய இயேசுவை ஒரு சில பெண் சீஷர்கள் பின்பற்றினார்கள், அவர்கள் அவருடைய தேவைகள் மற்றும் ஆண் சீஷர்களின் தேவைகளுக்கு உதவுவார்கள் (லூக்கா 8:1-3). அவர் பெண் சீஷர்களிடமிருந்து உதவி பெற வெட்கப்படவில்லை.
சபையும் சமூகமும்:
சபை ஒரு சமூகமாக இருந்து ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருக்க உருவாக்கியுள்ளார். இருப்பினும், ஒரு சமூகத்தில் அன்பும் பணிவும் முக்கிய கொள்கைச்சொற்கள் ஆகும்.
தேவன் தீர்மானித்தபடி பிறரிடமிருந்து உதவியைப் பெற நான் தாழ்மையுள்ளவனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்