அமோக விளைச்சலைப் பெற்ற பணக்காரன் அதை பல வருடங்கள் சேமித்து வைத்து அனுபவிக்க நினைத்தான். தேவன் அவனை அட முட்டாளே, இன்றைக்கு இரவே நீ மரித்தால் நீ சேகரித்தது எல்லாம் என்னவாகும் என்றார் (லூக்கா 12:13-21). இந்த அமோக விளைச்சல் என்பது இந்தக் காலத்தில் ஷேர் மார்க்கெட் அல்லது லாட்டரியாக வைத்துக் கொள்ளலாம்.
1) தவறான கேள்வி:
"அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே" என்று அவன் கேட்டது ஒரு தவறான கேள்வி. ஆம், நான் என்ன செய்ய வேண்டும் என தேவன் விரும்புகிறார் என்று கேட்பதற்குப் பதிலாக; நான் என்ன செய்வேன்? என்று கேட்டான். மிகுதியும் உபரியும் இருக்கும்போது, நிகழ்காலத்தின் உக்கிராணத்துவகாரனாக இருப்பதற்குப் பதிலாக எதிர்காலத்திற்காகக் குவிக்கும் போக்கு எப்போதும் இருக்கும். அதிலும் தேவனால் ஆயிற்று அல்லது எல்லாம் தேவனுடையது என்றில்லாமல் ‘என் பயிர்கள்’ அல்லது ‘என் தானியங்கள்' என்றான்.
2) தவறான அணுகுமுறை:
ஏற்கனவே இருக்கும் களஞ்சியங்களை இடித்து பெரிதாக கட்டுவதே (விரிவாக்கத்திட்டம்) அவன் திட்டம். இடிப்பது என்பது ஒரு பயங்கரமான செலவு. ஒன்று அவன் அதை விரிவுபடுத்தியிருக்கலாம் அல்லது புதிய ஒன்றைக் கட்டியிருக்கலாம். பொருட்களை வீணடிப்பதும் மக்களின் உழைப்பை வீணாக பயன்படுத்தவதும் இன்றைய காலங்களில் அல்லது கலாச்சாரத்தில் இந்த அணுகுமுறை மிகவும் தெளிவாகத் தெரிகிறது. வீணடிக்கப்படும் உணவு உட்பட பல விஷயங்கள் பொருளாதாரப் படிநிலையில் குறைவான ஒருவருக்கு விலைமதிப்பற்றவை என்பதை உணர வேண்டும்.
3) தவறான தத்துவம்:
அவன் வாழ்க்கை மிக நீண்ட காலம் இருக்கும் என்று நம்பினான் மற்றும் அதை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று தவறாக கருதினான். ஆம், அவனது வாழ்க்கை முறையே சாப்பிடுவதும், குடிப்பதும், நல்ல ஆனந்தமாக இருப்பதுமேயாகும். மக்கள் கடினமாக உழைக்க மாட்டார்கள்; ஆனால் நிறைய சம்பாதிக்க நினைப்பார்கள். எனவே, பேராசையும் ஒழுக்கக்கேடும் அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன எனலாம். உழைப்பிற்கான கண்ணியமோ அல்லது வேலை செய்வதற்கென்று அர்த்தமும் இல்லை. ஆனால் கிறிஸ்தவர்களுக்கு பணி என்பது மகிழ்ச்சியே தவிர, சுமை அல்லவே.
4) தவறான கருத்து:
அவன் ஒரு 'முட்டாள்' என்று அழைக்கப்படுகிறான். வேதாகமத்தில் மதிகேடன் என்பது தேவனையோ அவருடைய பிரசன்னத்தையோ நம்பாதவன். இந்த பணக்காரர்கள் தேவனை அற்பமாக எண்ணிக் கொண்டு தனது வாழ்க்கையை நடத்துகிறார்கள். தேவன் அவர்களுடைய எண்ணங்களிலோ, வாழ்க்கை முறையிலோ, முடிவுகளிலோ இல்லை. உலகத்தின்படி பார்த்தால் புத்திசாலியாகவும் ஞானமுள்ளவர்களாகவும் விளங்கலாம், ஆனால் தேவனுடைய பார்வையில் அல்லது தரத்தில் அவர்கள் எல்லாம் ஏழைகள், நிர்வாணிகள், கண்டனத்திற்குரியவர்கள். ஆம், அமோக விளைச்சல் அந்த பெரிய பணக்காரனுக்கு பெரும் இருளில் முடிந்தது.
நான் ஒரு உக்கிராணத்துவக்காரனா அல்லது சுயநலமான நுகர்வோரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்