டிசம்பர் 20, 2021 அன்று , தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கன் தீவுக்கூட்டத்தில் உள்ள ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹாபாயில் ஒரு வெடிப்பு தொடங்கியது. இந்த வெடிப்பு நான்கு வாரங்களுக்குப் பிறகு, 15 ஜனவரி 2022 அன்று மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த உச்சக்கட்டத்தை எட்டியது. இந்த வெடிப்பு டோங்கா மற்றும் அண்டை நாடுகளான பிஜி மற்றும் சமோவா முழுவதும் சுனாமியை உருவாக்கியது. அதிர்வு அலைகள் பல ஆயிரம் கிலோமீட்டர்களைக் கடந்துள்ளது. விண்வெளியில் இருந்து பார்க்கப்பட்டு நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2000 கி.மீ அப்பால் இருக்கும் நியூசிலாந்து நாட்டிலும் இவை உணரப்பட்டுள்ளது. வெடிப்பு தொடங்கிய சிறிது நேரத்திலேயே, டோங்காடாபுவில் மேற்பரப்பு தடுக்கப்பட்டு சாம்பல் கீழே விழ ஆரம்பித்தன. சில சமயங்களில், மனித சீற்றம் (கோபத்தில் வெடிக்கும் மக்கள்) இது போன்ற பேரழிவைக் கொண்டுவருகிறது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாசரேத்தில் உள்ள ஜெப ஆலயத்தில் இருந்த ஒரு சூம்பின கையையுடைய மனிதனைக் குணப்படுத்தினார். இருப்பினும், ஓய்வுநாளைக் குறித்து நோக்கமற்ற மதத் தலைவர்கள் கூட்டம் தங்களின் கலாச்சாரம் மீறப்பட்டதாக கோபமடைந்தனர். "அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள்" (லூக்கா 6:11).
1) தேவையற்ற கோபம்:
சூம்பின மனிதன் வேலை செய்ய முடியாமல் போனபோது அவர்கள் கொந்தளிக்கவில்லை. அவர்களின் ஆக்ரோஷம் ஊனமுற்ற நபருக்கு உதவ ஏதாவது வழியைக் கண்டுபிடித்திருக்கலாம். இன்னும் சொல்லப் போனால் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், பசியில் வாடுவோர், நம்பிக்கையற்றவர்கள், துன்புறுத்தப்பட்டவர்கள், வெறுக்கப்படுகிறவர்கள், குற்றமின்றி சிறையில் அடைக்கப்படுவர்கள், அடிமைத்தனத்திற்குத் தள்ளப்படுகிறவர்கள் எனப் பாதிக்கப்படும் மக்களுக்காக கொந்தளிக்க வேண்டும்.
2) பகுத்தறிவற்ற கோபம்:
ஏழை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, ஊனமுற்றோருக்கு உதவிய கர்த்தராகிய இயேசுவைக் குற்றம் சாட்டுவதற்கான வழிகளைக் கண்டுபிடித்தனர். பாதிக்கப்பட்டவருக்கு உதவ தங்கள் ஆற்றலைச் செலுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் பாதிக்கப்பட்டவருக்கு உதவிய நபரை குற்றவாளியாக்க விரும்பினர்.
3) தவறாக திருப்பி விடப்பட்ட கோபம்:
தன் இயலாமைக்கு மூலகாரணத்தைக் கண்டு ஆத்திரப்படுவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவருக்கு உதவிய ஆண்டவரின் மீது கோபம் கொண்டார்கள். கிறிஸ்தவ பணிகள் தாழ்த்தப்பட்டோர், அனாதைகள், தந்தையற்றோர், ஆதரவற்றோர், ஏழைகள், இறக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு உதவுகின்றன; ஆனால் அவர்களை தவறாக சித்தரித்து குற்றஞ்சாட்டும் சக்தி வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள்.
4) மதத்திற்கு ஒவ்வாத கோபம்:
முதலில் மதம் என்பது இரக்கத்தை அடிப்படையாகக் கொண்டது, இரக்கம் தான் பலிக்கு முன்னேற்றுகிறது (ஓசியா 6:6). மதச் சடங்குகளை நிறைவேற்றுவதை விட மற்றவர்களை நேசிப்பது மிக முக்கியமானது (ஏசாயா 58:1-9). "தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்" (சங்கீதம் 51:17).
5) கொலைச் செய்யுமளவு கோபம்:
முந்தைய சந்தர்ப்பத்தில், கர்த்தர் ஏசாயாவின் வாசகத்தைப் படித்தபோது, அவரை ஒரு குன்றிலிருந்து தள்ள விரும்பினார்கள் (லூக்கா 4:29-30). வருத்தம் என்னவெனில், இத்தகைய நிதானமற்ற கோபம் அப்பாவி, நீதிமான்கள், நல்லவர்கள் மற்றும் அன்பான மக்களுக்கு எதிரான வன்முறையாக மாறுகிறது.
நான் அதிருப்தி, கோபம் மற்றும் ஏமாற்றங்களை நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்