ஒரு இளம் பெண் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷரானாள். அவளுக்கு பேய் பிடித்து விட்டது என்று அவளுடைய குடும்ப உறுப்பினர்கள் நினைத்தார்கள். ஒரு புகழ்பெற்ற மந்திரவாதி வரவழைக்கப்பட்டார், அவளின் வீட்டிற்கும் கல்லறைகளுக்கும் இடையில் பல முறை அடிக்கடி சென்றார். அவர் அந்த பெண் முன் அமர்ந்து பல மந்திரங்களை முணுமுணுத்தார். அவளுக்குள் இருப்பவர் பெரியவர் என்பதால் அவளை எதிர்த்துப் போராடுவது சாத்தியமற்றது என்பதை அவர் உணர்ந்தார் (1 யோவான் 4:4). தனது உள்ளங்கையில் புனித சாம்பல் பூசப்பட்ட சிறிய தட்டை எடுத்து, சிலுவையின் படத்தை வரைந்து அப்பெண்ணிடம் கொடுத்து, அதை அவளது நெற்றியில் பூசச் சொன்னார். பிறகு அவள் காதில் கிசுகிசுத்தார்; “உன் கடவுள் பெரியவர்; நீ விரைவில் இந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவாய்” . ஆம், சில காலங்களிலே அந்தப் பெண் கர்த்தருக்கு வல்லமையோடு ஊழியம் செய்ய அந்த இடத்தை விட்டு வெளியே வந்தாள்.
பிலேயாம் அழைக்கப்படுதல்:
மோவாபின் ராஜா பாலாக் இஸ்ரவேல் தேசத்தைக் கண்டு பயந்தான். இந்த தேசம் மோவாபைத் தாக்கினால் என்ன ஆகுமோ? பாலாக் தனது இராணுவம் போதுமானதாக இல்லை, எனவே வேறு சில வளங்கள் தேவை என்று நினைத்தான், அதனால் இந்த மக்களை சபிக்க முடிவெடுத்தான். இஸ்ரவேலைச் சபிக்க பிலேயாம் அழைக்கப்பட்டான்; தேவன் பிலேயாமிற்கு தரிசனத்தில் தோன்றியதால், பிலேயாம் இஸ்ரவேலை ஆசீர்வதித்தான் (எண்ணாகமம் 23:1-10).
நான் எப்படி சபிக்க முடியும்? ஆம், தேவன் ஆசீர்வதித்தவர்களை எந்த மனிதனாலும் அல்லது பேயாலும் சபிக்க முடியாது. அவர்களால் ஆசீர்வாதத்தை சாபமாக மாற்ற முடியாது. பிலேயாமின் முயற்சிகள் பயனற்றவை, உண்மையில் அது தேவனுக்கு எதிராகப் போராடும் முயற்சி.
பலரில் ஒருவர்:
இஸ்ரவேல் தன்னை தேசங்களில் ஒன்றாக கருதவில்லை. அவர்கள் உலக மீட்பில் ஒரு சிறப்புப் பங்கிற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் வேறுபட்டவர்கள், மேலும் தேவனின் நீதியின் கருவிகளாக செயல்படுகிறார்கள்.
தனித்திருங்கள்:
இஸ்ரவேல் ஒரு தனித்துவமான தேசமாக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருந்தது. தேவனின் மகிமைக்காக அர்ப்பணிக்கப்பட்ட, பரிசுத்தமான வாழ்க்கை.
எண்ண முடியாது:
யாக்கோபின் மண்ணை எண்ண முடியாது என்று பிலேயாம் கூறினான் (ஆதியாகமம் 13:16). ஆபிரகாமின் சந்ததியினர் பூமியின் தூளைப் போல இருப்பார்கள் என்று தேவன் வாக்களித்தாரே.
நீதிமான்களின் மரணம்:
இஸ்ரவேலர் நீதியுள்ளவர்களாக வாழ்ந்து, நீதியுள்ளவர்களாக மரிப்பார்கள் என்று பிலேயாம் அறிவித்தான், மேலும் அவனும் நீதிமான் மரிப்பது போல மரிக்க விரும்பினான். ஆனால், அவன் தேவனை விட்டு பின்வாங்கியதால் நீதிமானாக இறக்கவில்லை (எண்ணாகமம் 31:8).
நீதிமான்களை தேவன் பாதுகாப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்