கடந்த சனிக்கிழமை கோவை சித்தா புதூரில் இருக்கும் அந்த ஸ்பீட் பார்சல் சர்வீஸ் அலுவலகத்திற்கு மதியம் சுமார் 2.30 மணி அளவில் சென்றிருந்தேன். கோவையின் அனைத்து பார்சல் சர்வீஸ் அலுவலகங்களும், சரக்கு வாகனங்களும் அங்கு தான் இருக்கின்றன போலும்.
முந்தைய நாள் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளானதால் அன்று சற்று பரபரப்பு குறைவாக இருந்தது. எனது இருசக்கர வாகனம் ஒன்றை அந்த பார்சல் சர்வீஸ் ஆஃபிஸ் மூலம் வெளியூருக்கு அனுப்புவதற்குத் தான் சென்றிருந்தேன். அங்கு அலுவலகத்தில் ஒரேயொரு பணியாளர் தான் கவுண்டர் உள்ளே இருந்தார். வாகனத்தைப் பார்த்து விட்டு தேவையான கட்டணம் பெற்றுக்கொண்டு, இரசீதைக் கொடுத்தார். "உடனடியாக நீங்கள் இப்போது எப்படி போவீர்கள்?" என்றார். "தெரியவில்லை, நான் ஆட்டோவோ அல்லது ஏதாவதொரு வழியில் போய் விடுவேன்" என்றேன். "நீங்கள் எங்கு போக வேண்டும்?" என்றார். எனக்கு டவுண்ஹாலில் ஒரு வேலை இருக்கிறது, இங்கிருந்து அங்கு தான் போக வேண்டும் என்றேன். "நோ ப்ராப்ளம் சார், நான் உங்களை காந்திபுரம் டவுண் பஸ் ஸ்டாண்டில் டிராப் செய்து விடுகிறேன். நீங்கள் அங்கிருந்து சென்று விடுங்கள்" என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. "உங்களுக்கு அந்தப் பக்கம் ஏதும் வேலை உள்ளதா?" என்ற போது, எனக்கு அந்தப் பக்கம் ஏதும் வேலை இல்லை, பொதுவாக யார் வந்தாலும் இன்னொருவர் கூட வருவார்கள், நீங்கள் தனியாக வந்திருக்கிறீர்கள், உங்கள் வண்டியையும் இங்கு அனுப்புவதற்காகக் கொடுத்து விட்டீர்கள். இங்கிருந்து பஸ்கள் கிடையாது, ஆட்டோக்களும் அவ்வளவாக வராது, எனவே ஒண்ணும் பிரச்சினை இல்லை சார், என்று அலுவலகத்தை அப்படியே போட்டுவிட்டு என்னை டிராப் செய்ய, அவரது வாகனத்தை ஸ்டார்ட் செய்து பின்னால் உட்காரச் சொன்னார். "இல்லை வேண்டவே வேண்டாம்" என்று மறுத்த போதும், "பரவாயில்லை சார், ஏறுங்கள்" என்று சொல்ல, நான் உட்காரவும் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருந்த காந்திபுரம் டவுண் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டார்.
போகும் போது வழியில் கேட்டேன், "நான் யாரென்று தெரியாத போதும், உங்கள் அலுவலகத்தை அப்படியே விட்டு விட்டு என்னை டிராப் பண்ண வந்த உதவியை மறக்க முடியாது" என்ற போது, "அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார். எங்கள் உடன் வேலை பார்க்கும் மற்ற ஸ்டாஃப் எல்லாம் உள்ளே தான் ரெஸ்ட் எடுத்து கொண்டுள்ளார்கள், அதனால் எந்த பயமும் இல்லை. உங்களைப் பார்த்ததும் உங்களுக்கு உதவ வேண்டும் என தோன்றியதால்" எனும் அர்த்தத்தில் அமைதியாக புன்முறுவல் செய்தார். "உங்கள் நல்ல மனதிற்கு நன்றி, நல்ல பண்புகள் உங்களுக்கு இருக்கிறது, இது போன்ற நற்குணங்கள் பொருந்திய இளைஞர்கள் தான் நமது தேசத்தின் இன்றையத் தேவை, அது போன்ற தகவுகளை, மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு படிப்பிக்கும் ஒரு தொண்டு நிறுவனத்தில் தான் நானும் பணி செய்து வருகிறேன், உங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நாம் எப்போதோ செய்யும் சிறு உதவிகள் கூட நமக்கு அனுகூலமாக மாறி விடுகிறது. எல்லாம் கடவுளின் செயல்" என்று சொல்லி விட்டு இந்த சம்பவத்தை என் முகநூலில் பதிவு செய்வதாகச் சொல்லி ஒரு புகைப்படமும் அவரது அனுமதியுடன் எடுத்து மகிழ்ந்தேன். வாழ்க வளமுடன்!! தீபன் குமார்!!
என்ன தோழமைகளே!! நாம் இது போன்ற உதவிகளைத் தன்னார்வமாக, தெரியாத ஒருவருக்கு செய்து கிறிஸ்துவின் சீடர்களாக, சாட்சியாக ஜீவிக்கிறோமா? அவ்விதமாக ஜீவித்தால், எதிர்பாராத விதமாக, தேவனது ஆசீர்வாதங்களை நாமும் பெற்றுக் கொள்ள முடியும்.
கரு வசனம்: நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாய் இருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர்க் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமல் போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மாற்கு 9:41)
Author:
நெல்லை ஜெஸி மணாளன்.