"கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா? (2 இரா 7:2)"
"பிரதர்..போய் வேற ஏதாவது வேலை இருந்தா பாருங்க பிரதர்.."
"இதெல்லாம் நடக்கிற சமாச்சாரமா?
- மிஷன் '24 ஆம்...
- ஒரு மீதியான ஒருமனப்பட்ட ஜனம் கூடணுமாம்...
- பிறகு அவர்களைப் போலவே அவர்களோடே இன்னொரு சின்ன கூட்டம் ஒண்ணு சேருமாம்...
- அப்புறம் போதகர்களும் மூப்பர்களும் சேருவார்களாம்...
- பிறகு கடைசி விசுவாசி வரை இதில் பங்கேற்பார்களாம்...
- இப்படியே எல்லாரும் சேர்ந்து கைகோர்த்து காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வரை ஜெபித்து ஜெபித்து விக்கிரகக் கோட்டைகளையெல்லாம் விழப்பண்ணி, அப்படியே தேசத்தைச் சொந்தமாக்கிவிடுவார்களாம்!"
"எசேக்கியா ராஜா செய்தானாம்... இவங்களும் செய்துருவாங்களாம்! என்ன பிரதர் கதை சொல்றீங்க? இதெல்லாம் பைபிள் கதைக்கு வேணா ஒத்து வரலாம்...நடைமுறைக்கு ஒத்துவர்ற சமாச்சாரமா பிரதர் இதெல்லாம்..?"
இப்படி ஒரு எண்ணம் நம் ஒவ்வொருவரது மனதிலும் எழாமல் இருக்கப்போவதே இல்லை.
■ அப்படித்தான், தாய் தகப்பனே பிள்ளைகளை ஆக்கித் தின்ன நேர்ந்ததொரு கொடும் பஞ்சத்திலே, "நாளை இந்நேரத்தில் கர்த்தர் ஒரு காரியத்தைச் செய்வார்" என்று எலிசா அடித்துச் சொன்னபோது, "கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா?" என்று கேட்டான் ஒருவன்.. (2 இரா 6:24 - 33/ 7: 1- 20)
■ அப்படித்தான் சொன்னார்கள், 12 வேவுகாரரில் பத்துப்பேர். " நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மால் கூடாது, அவர்கள் நம்மைப் பார்க்கிலும் பலவான்கள்..அந்த இராட்சதப்பிறவிகள் முன் நாங்கள் வெட்டுக்கிளிகளைப் போலிருந்தோம்" என்று..
■ அப்படித்தான் கோலியாத்துக்கு விரோதமாய்ச் செல்ல எத்தனித்த தாவீதைப் பார்த்து சவுல் சொன்னான்.." நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் ஆகாது..நீ இளைஞன்.. அவனோ தன் சிறு வயது முதல் யுத்தவீரன்.." என்று. (1 சாமு 17:32)
■ அப்படித்தான் சொன்னார்கள் சன்பல்லாத்தும் தொபியாவும்..."இந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன? இவர்களுக்கு இடம் கொடுக்கப்படுமோ? ஒரே நாளில் முடித்துப்போடுவார்களோ? சுட்டெரித்துப்போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ?" என்று ..
■ "ஜாதிகளின் தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ?" என்று எசேக்கியாவை அப்படித்தான் மிஞ்சி மிரட்டினான் சனகெரிப்பின் தளபதி ரப்சாக்கே..
■ " எனக்குப் பின்செல்லுகிற ஜனங்கள் எல்லாரும் கைக்கு ஒரு பிடியாவது வாரிக்கொள்ள உன் சமாரியாவின் தூள் போதுமானதாயிருக்குமோ?" என்று அப்படித்தான் சவால்விட்டான் பெனாதாத்.. (1 இரா 20:10)
■ "இதை மூன்று நாளில் எழுப்புவாயோ?" என்று அப்படித்தான் இயேசுவைக் கேட்டனர் பரிசேயரும் சதுசேயரும்..
அநேக நேரங்களில் சத்துரு, தான் சொல்வதையே நமது சிந்தையிலும் வைத்து, சிந்தையைச் சிறையாக்கி, நம்மை அப்படியே நினைக்கவும், ஏற்றுக்கொள்ளவும், சொல்லவும், கேள்வி கேட்கவுமே வைத்துவிடுகிறான்..
இது நடக்கிற காரியமா? நடக்குமா? நடக்குமா? நடக்குமா?
● ஒரே குடும்பத்துக்குள்ளும், சகோதர சகோதரிகளுக்குள்ளும், சபைக்குள்ளேயுமே ஒற்றுமையும் சமாதானமும் இல்லாதிருக்கும்போது, தேசத்தில் இப்படியெல்லாம் நடப்பது சாத்தியமா?
● சங்க காலம் என்னும் பழங்காலந்தொட்டுப் பாரம்பரியமுள்ள விக்கிரகக் கோட்டையான இந்த இந்து தேசம் அத்தனை எளிதில் தேவன் வசமாகிவிடுமோ?
● இத்தனை காலங்கள் சுவிசேஷப்பணி நடந்தும் இந்த இந்திய மண்ணில் நாம் இன்னும் சிறுபான்மையினர் தானே?
● சபைகள் ஒன்றுகூடிவருதல் எல்லாம் நடக்கிற காரியமா?
● இதெல்லாம் போக, இன்றைய லவோதேக்கிய சபைகளின் பரிதாப நிலையை சற்று உற்றுப்பாருங்கள்!
● "இந்த மிஷன் சமாச்சாரமெல்லாம் ஏட்டுச் சுரக்கா பிரதர்..கறிக்கு உதவப் போறதில்ல...ஏட்டுக்கும் எதார்த்தத்துக்கும் ஏணி வச்சாலும் எட்டுமா?
இதுதான் நம் மூளை அறிவும், சத்துருவுக்குச் சிறைப்பட்டுப்போன நம் சிந்தனையும் நமக்குச் சொல்வது. உண்மை நிலவரத்தைக் காணும்போது இதெல்லாம் உண்மையாகவே கூட காட்சியும் அளிக்கிறது.
ஆனால் வேதம் சொல்வது இதற்கு முற்றிலும் மாறுபட்டதல்லவா?
- எலிசா சொன்னது போலவே கர்த்தர் வானத்திலே மட்டுமல்ல, எதிரியின் பாளயத்திலேயும் மதகுகளை உண்டாக்கவில்லையோ?
- வேவுகாரரில் 10 பேர் சொன்னது அல்ல, இரண்டு பேர் சொன்னதின்படியே அல்லவோ நடந்தது?
- எசேக்கியா அல்ல, ஒரே ராத்திரியிலே செத்து சவமாகிப்போன 1,85,000 பேரில் ரப்சாக்கேயும் கூட அவர்களில் ஒருவனாய்க் கிடந்தானல்லவோ?
- பெனாதாத் அல்ல, ஜெயித்தது யோசபாத் அல்லவோ?
- சொன்னபடியே இயேசுவானவர் உயிரோடே எழவில்லையோ?
- எனக்கு இந்த மலைநாட்டைத் தாரும்...நான் அவர்களைத் துரத்திவிடுவேன் என்று சொன்ன காலேபின் வசமல்லவோ காதேஸ்பர்னேயா வந்து சேர்ந்தது?
இதற்காக நாம் முதலாவது வசமாக்க வேண்டியது நமது சிந்தை! எதிரியைக் களம் காணுமுன் ஜெயிக்கப்பட வேண்டியது நமது சிந்தையெனும் போர்க்களமே! "பட்டணத்தைப் பிடிப்பவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குபவன் உத்தமன்" என்றான் சாலமோன் (நீதி 16:32)
அப்படியானால் இந்த சிந்தைச் சிறை என்றால் என்ன? இந்தச் சிறையிலே நம்மைச் சிறையாக்கி வைத்திருக்கும் இராட்சசன் யார்?
"தேவ சித்தம் இதுவே" என்று நன்கு அறியப்பட்ட காரியங்களுக்கு விரோதமாய், நம் கண்களுக்கு முன் யதார்த்தத்தில் நாம் காணும் எதிர்மறையான சூழ்நிலைகளை அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டு, "இதெல்லாம் நடக்கவே நடக்காது" என்ற எண்ணத்தையே முழுவதும் உள்வாங்கிக்கொண்டு நாம் வாழும் நம்பிக்கையற்ற மனநிலையே சிந்தையின் சிறை.
மிகவும் ஆபத்தான மூன்று சிந்தையின் சிறைகள் :
1. ஒற்றுமை என்பதெல்லாம் இங்கே சாத்தியமே இல்லாதது என்ற வலுவான எண்ணம் :
"விசுவாசிகள் மத்தியிலும் சபையின் நடுவிலும் ஒற்றுமை ஒருமைப்பாடெல்லாம் நடக்காத ஒன்று பிரதர்.." என்ற வலுவான எண்ணமே நமது மூளைக்குள் பல காலமாய்ப் பாய்போட்டுப் படுத்திருக்கும் முதல் இராட்சசன்.
அப்படியென்றால் இயேசு கிறிஸ்து நமது ஒற்றுமைக்காகவும் ஒருமனப்பாட்டிற்காகவும் ஜெபித்த யோவான் 17ன் ஜெபம் கேட்கப்படவில்லையோ? தமது நேசகுமாரனாகிய இயேசுவின் ஜெபத்தைப் பிதாவானவர் கேட்டு பதில் அருளாதிருப்பது எப்படி? அப்படியானால் நமக்குள் வலுவாய் வேரூன்றியிருக்கும் "சத்தியமாய்ச் சாத்தியமாகாது" என்ற எண்ணம் கிறிஸ்துவினுடையது அல்ல, அது சத்துருவின் வஞ்சமே!
கிறிஸ்துவுக்காக செயலாற்ற நம்மைத் தடுத்து நிறுத்தும் முதல் எதிரியே இந்த எதிர்மறையின் வலுமையான எண்ணம் தான். யூதா இஸ்ரவேல் என்ற இரு சக உதிரங்களும் பல காலமாக ஒன்று வடக்குக்கும் ஒன்று தெற்குக்குமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு முறுக்கிக்கொண்டிருந்த அந்த நிலையிலும், "தேவகரம் அவர்களை ஒரு மனப்படுத்திற்று.." (2 நாளா 30: 12) என்ற ஒரே ஒரு வார்த்தையே இன்று நமது சிந்தைச் சிறையின் அஸ்திபாரத்தை ஆட்டம்காணச் செய்யவேண்டுமல்லவோ ?
2. Spiritual Apathy என்று சொல்லப்படும் ஆவிக்குரிய அக்கறையின்மை:
சந்திக்கப்படாத ஆத்துமாக்கள் மேல் நமக்கு அக்கறையே இல்லாமல் போவதற்குக் காரணம், நமது சிந்தையின் சிறையிலிருக்கும் "இவங்கல்லாம் இரட்சிக்கப்படமாட்டாங்க சிஸ்டர்..இதெல்லாம் எவ்வளவு கஷ்டமான ஏரியா தெரியுமா? இங்கயெல்லாம் சுவிசேஷம் அறிவிக்க சான்ஸே இல்ல பிரதர்.." என்ற பலமான எண்ணமே !
■ ஐயோ காஷ்மீரா ? ஏற்கனவே தீவிரவாதம்! அவ்வளவும் முசல்மான் ஏரியா பிரதர்.. வெளிய போய் ஒரு tract குடுத்துப் பாருங்க...அப்புறம் பாருங்க, சுன்னத்து தான்! கஷ்மீர் பிராமணப் பண்டிட்டுங்களே இருக்கிற இடம் தெரியாம இருக்கிறானுங்க.. இதுல நீங்க வேற "காஷ்மீர் கர்த்தருக்கே!" னு அங்கேயே போய் போஸ்டர் அடிச்சி ஒட்டணும்ங்கிறீங்க! போங்க பிரதர்..வேணா ஜாலியா போய் காஷ்மீரை நல்லா சுத்திப்பாத்துட்டு வாங்க!"
■ ஐயோ உத்தராகண்டா? அங்க இருக்கிறவனுங்க ஏற்கனவே எங்கள் பூமி தேவர்கள் பூமின்னு கொடி புடிச்சுட்டு நிக்கிறானுங்க..வேணா ஒண்ணு செய்ங்க..போய் அப்படியே ஒரு நடை Paudi Gadwal வரை போய் அந்த உத்தராக்கண்டு மலைகளையும், பள்ளத்தாக்குகளையும், கடையாந்திர மலைக்கிராமங்களையும் பாத்துட்டு வாங்க..சுவிசேஷம் சொல்லப்போறீங்களா? உங்களை மட்டுமில்ல, உங்க டீமையும் சேத்து நீங்க போற வண்டியோட மலை உச்சியிலிருந்து அடிகாணாத ஆழத்தில உருட்டி உட்டானுங்கன்னு வச்சிக்குங்க, ஒரு எலும்புகூட தேறாது..இதெல்லாம் பாத்துட்டுதான் அங்க உள்ள டேராடூன்ல இருக்கற ஏகப்பட்ட பைபிள் காலேஜ்ல இருந்து ஒருத்தர் கூட இந்த மலை மேல ஏர்றதேயில்ல... நீங்க வேற போகப்போறீகளாக்கும்?
■ ஐயையோ இமாச்சல் பிரதேஷா? ஷிம்லா, குல்லு, மணாலின்னு ஊர் சுத்த வேணா போகலாம்.. அங்க இருக்கிற சபைகளே படாதபாடு படுது.. காணாததுக்கு நம்ம மிஷினரிங்களைக் காப்பியடிச்சி, நம்மாளுங்க போக முடியாத இடங்கள்ளேல்லாம் அந்த உள்ளூர் ஆர் எஸ் எஸ்க்காரனுங்க "சரஸ்வதி வித்யா மந்திர்"னு அங்கங்க கிராமங்கள்ளேலாம் ஸ்கூல் வச்சி கவுண்ட்டர் குடுக்கிறானுங்க..போங்க பிரதர்.. சுவிசேஷம் சொல்லி அந்த ஊரையெல்லாம் ஆதாயமாக்குறதெல்லாம் நடக்கற கதையே இல்ல.."
■ ஐயோ சாமி! உத்திரப்பிரதேசமா? மனுசனுக்கு ஆஸ்பத்திரியையும் ஆம்புலன்ஸையும் காணோம்..மாட்டுக்கு ஆம்புலன்ஸாம்! மாட்டுக்குப் பராமரிப்பு கூடங்களாம்! - கோடி கோடியா கொட்றானுங்க..
தாழ்ந்த சாதின்னு சொல்லி உயர்சாதிக்காரன் தன்னோட இடதுகால் சப்பாத்துல தண்ணிய ஊத்தி அதைத் தாழ்ந்த சாதிக்காரன்னு சொல்றவனுக்குக் குடிக்கக் குடுத்து, அந்த ஷூவாலயே அவனை அடிக்கிறான்..ஆணவக்கொலை, கெளரவக் கொலைங்கிற trend ஐ நாட்டுக்கு அறிமுகப்படுத்தி ஆரம்பிச்சுவச்சவனுங்களே இந்த உபிக்காரனுங்க தானே! இருக்கிற சபைகள்லாம் ஏதோ இருக்கறத வச்சி காலம்தள்ளிட்டுப் போகுது! இதுல எங்க பிரதர் சுவிசேஷம் சொல்லி இந்தக் கொரங்காட்டிப் பயலுவள கொண்டு வர்றது..?
■ அரியானாவா? ஏற்கனவே அங்க அவுங்க ஆட்சி! ஓம் பிரகாஷ் சவுத்தாலா பாவம் 9 வருஷம் உள்ள இருந்திட்டு இப்பதான் வெளிய வந்தாரு..வந்த ஆளை மறுபடி 4 வருஷம் போட்டு உள்ள தள்ளிட்டானுங்க..
கிரேஸ் பைபிள் காலேஜ்னு ஆசியாவிலேயே மிகப்பெரிய இடம் கொண்ட பைபிள் காலேஜ் இங்க தான்.. அதுவே இப்ப இங்க மூடிக்கெடக்கு...நீங்க வேற! அரியானா அல்லேலூயான்னு சொல்லிகிட்டு..."
இப்படிப்பட்ட "முடியவே முடியாது" என்ற பலமும் வலுமையுமான எண்ணங்களே சிந்தையின் இரண்டாவது பெலவான். நமது தலைக்குள்ளே குந்திக் குடியிருக்கும் இந்த இராட்சசனை முதலாவது கட்டி வெளியே தூக்கியெறிந்தாலொழிய காஷ்மீர் என்ன, கடம்பூர் கூட வசப்படாது!
3. ஆவிக்குரிய குருட்டாட்டம் என்னும் சத்துருவின் ஆயுதம் :
நமது சிந்தைச் சிறையிலே பதுங்கியிருக்கும் மூன்றாவது மிகப்பெரிய பெலவான், நம்மை ஆவிக்குரிய அறியாமையிலும், குருட்டாட்டத்திலுமே வைத்திருக்கும் "அறிவிலி" என்னும் இராட்சசன்.
"சாத்தானுடைய தந்திரங்கள் நாம் அறியாதவைகள் அல்லவே" என்றார் பவுல். பவுல் வேண்டுமானால் அவனது தந்திரங்களை நன்கு அறிந்து தெரிந்து புரிந்தவராய் இருந்திருக்கலாம். ஆனால் நம் மக்களுக்கு இந்த மாதிரி விஷயங்களின் ABCD கூட தெரியாமலே இருப்பது தான் உண்மை. " என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள் என்றும், என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப் போகிறார்கள்" (ஓசியா 4:6/ ஏசா 5:13 ) என்றுமல்லவா வேதம் சொல்கிறது?
இன்று விசுவாசிகளுக்குக் கர்த்தருக்குள் தாங்கள் யார் என்ற அறிவோ, தங்கள் அதிகாரம் என்ன என்ற அறிவோ, தாங்கள் ஆராதிக்கும் கர்த்தர் எப்படிப்பட்டவர் என்று தனிப்பட்ட முறையில் அவரை அறிந்துவைத்திருக்கும் அறிவோ, தங்கள் சத்துரு யார்? அவனுடைய யுக்திகள் என்ன? அவனுடைய தந்திரங்கள், போர் நுணுக்கங்கள் என்னென்ன, வஞ்சகங்கள் என்ன, அவனது பெலன் என்ன, ஆவிக்குரிய யுத்தமென்றால் என்ன? என்ற இப்படிப்பட்ட அடிப்படை ஆவிக்குரிய அறிவோ புரிந்துகொள்ளுதலோ கூட இல்லாமல் இருப்பது தான் இன்றைய ஆவிக்குரிய உலகின் வேதனையான உண்மை. நம் மக்களுக்குத் தெரிந்ததெல்லாம், "இயேசு நேசிக்கிறார், இயேசு விடுவிக்கிறார், இயேசு சுகமளிக்கிறார், இயேசு ஆசீர்வதிக்கிறார்.." அவ்வளவு தான்!
ஆக, விசுவாசிகளை இப்படிப்பட்ட ஆவிக்குரிய அறியாமையிலும் குருட்டாட்டத்திலும் வஞ்சகத்திலுமே அழுத்தி சிந்தைச் சிறைக்குள் அடைத்து வைத்திருப்பதே மூன்றாவது பெலவானின் தந்திரம்.
இந்தச் சிந்தைச் சிறையின் கதவுகள் உடைக்கப்பட்டு, அதிலுள்ள இந்த மூன்று வகையான கோலியாத்துகளையும் அடித்து வீழ்த்தினாலொழிய, மிஷன் '24 கைகூடுவது அரிது.
ஆகவே பயந்தாங்கொள்ளியும், திடனற்றவனுமாயிருக்கிற விசுவாசிகள், தேசத்துக்காக முன்செல்லும் மீதியான ஜெபவீரர்களான தங்கள் சகோதரரின் இருதயத்தைக் கரைந்துபோகப் பண்ணிவிடுவார்களாதலால், மோசே முன்சொன்னபடி, இப்படி ஆட்களெல்லாம் "தங்கள் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவர்கள் என்று நைஸாகச் சொல்லி அவர்களை ஸைலன்ட்டாக வீட்டுக்கு அனுப்பிவிடுவது நல்லது.(உபா 20:8)
இப்படிப்பட்ட சிந்தைச் சிறையில் சிக்கியிருக்கும் மிகப்பெரிய பட்டாளமொன்று இங்கே இருந்தாலும், உள்ளபடியே யதார்த்தத்திலும் தேசத்திலும் சபையிலும் கண்கூடாகக் காணப்படும் காரியங்கள் ஒரு வகையில் இவைகளைப் போல உண்மையாகவே காணப்பட்டாலும், இப்படிப்பட்ட வலுவான எண்ணங்களைத் தள்ளிவிட்டு, வேத வசனங்கள் திட்டமாய்ச் சொல்லுகிறதையே தங்களுக்கென்று எடுத்துக்கொண்டு, தங்கள் உள்ளறைகளிலே கண்ணீரோடு இரவும் பகலும் ஜெபத்தில் கதறும் மீதியான கூட்டமான அற்ப சொற்பங்களின் முழங்கால்களே இந்த இந்திய தேசத்தின் மேல் வரும் கோபாக்கினையைத் தடுத்து நிறுத்தி சபையைத் தேவ பாதுகாவலுக்குள் காத்து வைத்திருப்பவைகளாம்!
இவர்களைக் கொண்டுதான் தேசம் சந்திக்கப்படக் காத்திருக்கிறது. எனவே எழுந்து கட்டுவோம் வாருங்கள்! எசேக்கியாவின் தேவனும் நெகேமியாவின் தேவனுமான பரலோகத்தின் தேவனானவர் நமக்கும் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார். அது அப்படியே நடக்கும் ! ஆமென்!
Author : Pr. Romilton