வருடங்கள் உருண்டோடின. எகிப்திற்குச் சென்ற யோசேப்பின் குடும்பத்தார், மகா ஏரோது மரித்துப்போனதை அறிந்து இறைவன் வழிநடத்துதலின்படி பலெஸ்தீனாவிற்கு திரும்பி வந்தனர். பலெஸ்தீனா, 5 நாடுகளாகப் பிரிக்கப்பட்டு மகாஏரோதுவின் 3 மைந்தர்களால் ஆளாப்பட்டது. யூதேயா, சமாரியா நாடுகளை அர்கெலாயு ஆண்டான். கலிலேயா, பெரேயா நாடுகளை ஆண்டிபாஸும், இத்துரேயா நாட்டை பிலிப்பும் ஆண்டு வந்தனர். யூதேயாவைவிட கலிலேயாவிலே இயேசுக்கு ஆபத்து குறைவு என்றெண்ணிய யோசேப்பு கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தில் வந்து குடியேறினார். ஆண்டுகள் உருண்டன. பஸ்காப் பண்டிகை கொண்டாடுவதற்காக கலிலேயாவிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள எருசலேமிற்குச் செல்ல மக்கள் ஆயத்தமாயினர். யோசேப்பின் குடும்பமும் புறப்பட்டது.
பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு “தேவநியாய விதிகளின் மைந்தன் என ஏற்றுக் கொள்ளப்படப்போகிறார். நியாய விதிகளின் மைந்தனாகும் போது ஒரு இளைஞன் வேத சாஸ்திர சம்பந்தமான கேள்விகளைக் கேட்கவும் பதிலுரைக்கவும் அனுமதிக்கப்படுகிறான்.
5 கி.மீ. தூரமான அந்த கால்நடைப் பயணத்தில் நண்பர்களுடன் விளையாடி மகிழ்ந்தார் இயேசு. எருசலேம் பட்டணம் விழாக்கோலம் பூண்டிருந்தது. கடவுள் செய்த சகல நன்மைகளுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்த மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. யூத ரபிமார்களும், ஆசாரியர்களும் தேவாலயத்திற்கு விரைந்து கொண்டிருந்தனர். ஏழை மக்களை ஏமாற்றி, தங்களுடைய பொருட்களை அநியாய விலைக்கு விற்பதற்கு இது ஒரு சந்தர்ப்பமாதலால் வியாபாரிகள் மிகவும் சுறுசுறுப்புடனிருந்தனர். ரோமப் போர்வீரர்களும் கூட அமைதி காக்கும்படி தங்களது மினுமினுக்கும் சீருடைகளுடன் ஆங்காங்கிருந்தனர்.
பஸ்காப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பண்டிகை முடிந்து அனைவரும் திரும்பிக் கொண்டிருந்தனர். யோசேப்பு குடும்பத்தினரும் கலிலேயா நாடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். மூன்றுநாட்களும் இயேசு தம் அருகே வராததைக் கண்டபோது மரியாளின் மனம் துணுக்குற்றது. தம் மனக்கலக்கத்தை யோசேப்பிடம் உரைத்தாள். இருவரும் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் தேடிவிட்டு இயேசுவைக் காணாததால் தேடிக்கொண்டே எருசலேம் தேவாலயத்திற்குச் சென்றனர். அங்கு ரபீமார்கள் நடுவே அமர்ந்து வினாக்கள் விடுத்து உரையாடிக் கொண்டிருப்பதையும், ரபீமார்களும், அவரைச் சூழ இருந்தவர்களும் இயேசுவின் பேச்சில் திகைப்படைந்தவர்களாகவும் இருப்பதையும் கண்டு அகமகிழ்ந்தனர்.
மரியாளோ, தன் மகனை அணைத்துக் கொண்டு, “மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? நானும் உன் தகப்பனாரும் எவ்வளவு கவலையோடு தேடினோம். தெரியுமா?'' என்றாள்.
“ஏனம்மா என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையாரின் வீட்டில் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றார். மரியாளுக்கு அவர் கூற்றும் புரிந்துதான் இருந்தது.
தன் பெற்றோர்களுடன் நாசரேத் வந்தவர் அவர்களுக்குக் கீழ்படிந்து நடந்தார். உன்னதமான தேவஅருளால் நிறைந்த ஞானமும், விரிந்த அன்பும் உடையவராய்த் திகழ்ந்தார். பலருடைய நன்மதிப்புக்கு ஆளானார். வருடங்கள் ஓட இயேசு வயது முப்பதானது.
பாலஸ்தீனத்தில் மத சம்பந்தமான நிலைமைதனைப் பார்ப்போம். வேத அறிஞர்களும், பரிசேயர்களும், சதுரேயர்களும் இருந்தனர். இவர்கள் மோசேயின் நீதிச் சட்டத்திற்கு பொருள் விளக்கம் கொடுத்து வந்தார்கள். வேத வசனங்களைக் கொண்ட சிறு பெட்டிகளே (தோல் பைகளே) நெற்றிப்பட்டங்களாகும். இந்தத் தோல் பைகளை, தோல் பட்டைகளினால் கைகளிலோ, நெற்றியிலோ பரிசேயர்கள் கட்டியிருப்பார்கள். விருந்துகளில் தொழுகைக் கூட்டங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்பினர். சந்தை வெளிகளில் வணக்கத்தையும், ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்பினர். ஏழை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள் பரிசேயர்கள். உயிர்த்தெழுதலும் ஆவியும் உண்டு என்று நம்புகிறவர்கள். சதுசேயர் உயிர்த்தெழுதலும், தேவதூதனும் இல்லை என்று சாதிப்பவர்கள். ரோமர்களிடம் பணிபுரிபவர்களாக இருந்த சதுசேயர்களே பிரதான ஆசாரியர்களாகவும், செல்வந்தர்களாகவும் வாழ்ந்தனர்.
யூதேயாவிற்கு அடுத்த யோர்தான் நதியோரம் திரு முழுக்குநர் யோவான் கடவுளின் செய்தியை மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். யார் இவர்? ஆசாரியராகிய சகரியா, எலிசபெத் தம்பதியினருக்கு பிறந்த அவர்களின் மகனாகிய யோவன். ஒட்டக மயிர் உடையை அறையில் கட்டியிருந்தார். '“மனமாற்றமடையுங்கள். விண்ணரசு சமீபமாயிருக்கிறது'” என பிரசங்கித்தார். தம்மை நோக்கி வரும் சதுசேயர்களையும், பரிசேயர்களையும் கண்டு, 'விரியன் பாம்புக் குட்டிகளே! வரப்போகும் தெய்வக் கோபத்திலிருந்து எப்படித் தப்பித்துக் கொள்ளப் போகிறீர்கள்? நீங்கள் மனமாற்றம் அடைந்தவர்களென்றால் உங்கள் வாழ்க்கையிலே அதைக் காட்டுங்கள். கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைக்கபட்டிருக்கிறது. கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். அதாவது உனது வாழ்வு சீர்கெட்டதாக இருந்து, நீ பக்தி வேடம் போட்டாலும் நீ அழிக்கப்பட்டுப் போவாய். எனக்குப் பின்வருகிறவர், என்னிலும் வல்லவர். அவர் மிதியடிகளைத் தூக்கிச் செல்லவும் எனக்குத் தகுதியில்லை. அவர் உங்களுக்குத் தூய ஆவியினால் திருமுழுக்குத் தருவார்” என்று சொற்பொழிவு செய்து கொண்டிருக்கும்போது இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெற வந்தார்.
"நான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியதாயிருக்க நீர் என்னிடம் வரலாமா?” என வினவ.
"இப்பொழுது இடம் கொடு. எல்லா தேவ நீதியையும் நிறைவேற்றுவது நமது கடமை:
இயேசுவின் கூற்றுக்குக் கீழ்ப்படிந்தார் யோவான். இயேசு திருமுழுக்குப் பெறும் வேளையில் தூய ஆவியானவர் வெண்புறா வடிவில் வந்து இயேசுவின் மீது அமர்ந்தார். வானிலிருந்து “இவர் என்னுடைய நேசகுமாரன். இவரால் பெரு மகிழ்வடைகிறேன்'' என்ற வாக்கு ஒலித்தது.
ஆற்றிலிருந்து கரையேறின இயேசு வளாந்திரத்திற்குச் சென்றார். 40 நாட்கள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார். களைத்துப்போயிருந்த அவர் முன் சாத்தான் வந்தான். '“நீ கடவுளின் மைந்தன் என்றால் இந்தக் கல்லுகள் அப்பமாகும்படி செய்து, புசியும்” என்றான்.
“மனிதன் வாழ்வது அப்பத்தினால் மட்டுமன்று. தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே என்றார்
அடுத்து பிசாசு உயர்ந்த மலையின் மேல் அவரைக் கொண்டு போய் உலகத்தின் ராஜ்யங்கள் அனைத்தையும் அவருக்குக் காண்பித்து, “நீர் என்முன் விழுந்து பணிந்தால் இவற்றின் மேல் முழு அதிகாரத்தையும், இவற்றின் மாட்சிமையையும் உமக்குத் தருவேன்'' என்று கூற.
உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே சேவை செய்து வருவாயாக! என்று எழுதியுள்ளதே'' என்றார்.
பிசாசு இயேசுவை எருசலேமிலுள்ள திருக்கோவிலின் உச்சியில் நிறுத்தி, நீர் கடவுளின் மைந்தரானால் இங்கிருந்து கீழே குதியும். ஏனெனில் உம்மைக் காப்பாற்றும்படி தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உம் பாதம் கல்லிற்படாதபடி அவர்கள் உம்மைத் தங்கள் கைகளில் தாங்கிக் கொள்வார்கள் என்று எழுதியுள்ளது'” என்றான்.
உன் கடவுளாகிய ஆண்டவரை சோதிக்காதே! என்றும் சொல்லியிருக்கிறதே. என்று இயேசு கூற பிசாசு அவரைவிட்டு விலகிச் சென்றான்.
கடவுளின் குமாரன் ஆயினும் மனிதனாக இவ்வுலகில் அவதரித்த இயேசு, முழு மனிதத் தன்மையுடன் அதேச சமயம் தூய்மையாக வாழவேண்டியவர். எனவே மனிதருக்கு நேரிடும் மூன்று பிரதான சோதனைகளை சாத்தான் கொண்டு வந்தான்.
முதலாவது கல்லுகளை அப்பமாக்கி உணவருந்துதல், நமது உலகப் பிரகாரமான தேவைகளை மட்டும்பிரதானமாகக் கருதி தேவனைவிட்டு விலகிவாழ்தல், இயேசுகல்லுகளை அப்பமாக்கி உண்ணாததன் வாயிலாக இறைபற்றுக்கு அடுத்ததே நமது தேவைகள் என்பதை நமக்கு உணர்த்துகிறார்.
இயேசு கடவுளுக்காக எல்லா இராஜ்யங்களையும் அடைந்து கொள்வது நல்ல நோக்கமே. ஆனால் அதற்கு பிசாசு சொன்ன நிபந்தனை, பிசாசை வணங்க வேண்டுமென்பது. அது தவறான வழி. எனவே நல்ல நோக்கத்திற்காக தவறான வழி செல்லக் கூடாது எனக் கற்பிக்கிறார்.
மூன்றாவது, திருக்கோவில் உச்சியிலிருந்து குதித்தலில் காணப்படுவது ஆவிக்குரிய பெருமை. கடவுள் மீது பற்று வைத்து, இவர் குதித்தால், நிச்சியமாக கடவுள் இவரைக் காப்பாற்றுவார். அதன் விளைவு எல்லோரும் இவரைப் புகழ்வார்கள். வெறும் புகழுக்காக கடவுளின் வல்லமையைக் கொணர்வது தவறு என்பதை சுட்டிக் காட்டுகிறார். மூன்று சோதனைகளையும் வென்றார் இயேசு!
இதன் தொடர்ச்சி முதல் அற்புதம்! என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை உதய தாரகை என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.